இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆயினும் மூன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி அபேட்சகர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.
நான் சென்ற வாரம் எழுதிய கட்டுரையில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும் வெற்றி பெறுவதை எவ்வாறு தீர்மானிப்பது என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தேன். ஆகவே மீண்டும் அதனைக் குறிப்பிட வேண்டிய தில்லை என நினைக்கிறேன. அக்கட்டுரையைப் படித்தவர்கள் முதலாவது சுற்று வட்டம் என்றால் என்ன? என்பதையும் முதலாவது சுற்றுவட்டத்தில் 50% வாக்குகளைப் பெறாவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இரண்டாம் சுற்று வட்டதில் என்ன நடக்கும்? என்பதையும் எழுதியிருந்தேன். ஆகவே ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். இத்தேர்தல் முறை மேலைநாடுகளில் சிலவற்றில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இத்தேர்தல் முறை ஏன் இலங்கையில் புகுத்தப்பட்டது?
காலம் சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது நானும் இன்னும் சில சட்டத்தரணிகளும் ஜே.ஆர். ஜயவர்தனவை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு பேட்டியெடுத்தபோது நாங்கள் எழுப்பிய கேள்வி ஒன்று என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தல் முறையும் ஏன் வெவ்வேறான முறையில் அமுல் நடத்தப்படுகிறது? என்றாகும். இலங்கை வெஸ்மினிஸ்டர் அமைப்பைத் தழுவிய நாடு. சகல அரசியல் அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கும் முடிக்குமேயுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலேயே பாராளுமன்ற அங்கத்தவர்களும் ஜனாதிபதியும் வெவ்வேறு முறைகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். அப்படியிருக்கும்போது வெஸ்மினிஸ்டர் முறையை இலங்கை பின்பற்றாமல் அமெரிக்க முறையைப் பின்பற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பினோம்.
அதற்கு ஜனாதிபதி பின்வருமாறு விடையளித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டி கட்சி ரீதியாக நடைபெறுவதால் அவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம். அவர் பதவி ஏற்ற பின்னர் கட்சி அரசியலில் குறைவான ஈடுபாடு உடையவராகவே இருக்கவேண்டும். அதனாற்றான் நான் பதவியேற்ற பின்னர் கட்சி வேலைகளைப் பிரேமதாசவிடம் ஒப்படைத்தேன் என்றார்.
நாங்கள் கேட்ட இன்னுமொரு வினா, கட்சி ரீதியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி மற்றைய கட்சிகளான எதிர்க்கட்சிகளை விசேடமாக ஆட்சி செய்யும் கட்சி, ஜனாதிபதியின் கட்சியின் நின்றும் வேறுபட்ட கட்சியாக இருந்தால் அக்கட்சியை ஜனாதிபதி ஒதுக்க மாட்டாரா? என்பதாகும்.
அதற்கு ஜே.ஆர். ஜயவர்தன அளித்த விடை பின்வருமாறாகும்.
‘‘இலங்கை குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மீ உயர் அதிகாரத்தை வழங்கவில்லையென்றும் பாராளுமன்றத்துக்கே அவ்வதிகாரத்தை வழங்கியுள்ளது என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றாலும் ஜனாதிபதி ஒன்றும் செய்யமுடியாது என்றும் பாராளுமன்றமே நிதிக்கட்டுப்பாட்டைச் செய்வதால் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒத்துப்போக வேண்டுமென்றும்’’ கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது;
“பாராளுமன்றம் குற்ற மனுப்பிரேரணையைக் கொண்டுவந்து ஜனாதிபதியை அகற்ற விதி இருப்பதுபோல பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதையும் கவனித்தால் இருபகுதியாரும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போக வேண்டும்’’ என்றும் கூறினார்.
ஆயின், தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட குளறுபடிகள் ஜே.ஆர். ஜயவர்தனவின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இல்லாதிருந்ததைக் காணலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீல.சு. கட்சியைச் சேர்ந்தவராவார். அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்ததாகும். இவர்களிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டபோது ஜனாதிபதி பிரதமரை பதவிநீக்கம் செய்துவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கினார். இதனால் ஜே.ஆர். கூறியதுபோல் அரசில் குழப்பம் நிலவியதைக் காணலாம். ஒற்றுமையைக் காணமுடியவில்லை.
19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம்
1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி நடைபெற்றால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது தெளிவில்லாமல் இருந்தது. உதாரணமாக ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையே கொள்கை ரீதியான உடன்பாடு இல்லையெனில் நாட்டைக்கொண்டு நடத்துவது கஷ்டம். ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தல் நடத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றம் ஜனாதிபதிக்கு எதிராக குற்ற மனுப் பிரேரணை கொண்டு வந்து ஜனாதிபதியை பதவியினின்றும் விலக்கவேண்டும். இவை இரண்டும் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஏனெனில் இரு பகுதியாரும் மக்களின் வாக்குகளால் ஒரு குறித்த காலத்துக்கு ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும் கடமையாற்ற மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாவர். ஆகவே அவர்களில் ஒருவர் ஒருவர் நீக்க இடமளிப்பதை விட இரு பகுதியாரையும் சமனான நிலைக்குக் கொண்டுவரவேண்டியிருப்பதே நன்று எனக் கூறலாம்.
இதனால் 1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் முதலாம் பந்தி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கீழே கூறப்படும் பந்தியானது உட்புகுத்தப் பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்பின் கீழேயே இது நடைபெற்றது.
“ஜனாதிபதி பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம். அமர்வு நிறுத்தலாம். அத்துடன் கலைக்கலாம். ஆயினும் ஜனாதிபதி பாராளுமன்றம் அதன் முதல் கூட்டத்துக்காக நியமித்த திகதியிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு குறையாமல் ஒரு காலப்பகுதி முடிவுறும் வரை பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின் (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றில் இரண்டுக்கும் குறையாத உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றினால் அவ்விதம் செய்யுமாறு பாராளுமன்றம் வேண்டினாலொழிய அதனை கலைத்தலாகாது” என்று கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரை நீக்கிய பின்னர் பாராளுமன்றத்தையும் கலைத்தபோது அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் உயர்நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றம் மேற்படி பிரிவைச் சுட்டிக்காட்டி 4 ½ வருடம் முடிவதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டுமானால் 2/3 பங்கு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவு தேவை என சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் ஒரு முக்கியமான வினா எழுகிறது.
முக்கியமான வினா என்ன?
முக்கியமான வினா என்னவெனில் 2/3 பங்கு வாக்கு கிடைக்குமாக இருந்தால் பாராளுமன்றத்தை 4 ½ வருடத்துக்கு முன்னரும் கலைக்கலாம் என்பதாகும். இது நீக்கப்பட வேண்டும். இப்பிரிவு இருப்பதால் பாராளுமன்ற ஆட்சி உறுதியானதாக இல்லாமல் போகிறது. இங்கிலாந்திலும் இந்நிலையே இருந்தது. 2010 க்கு முன்னர் இங்கிலாந்திலும் இந்நிலையே இருந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2010 க்கு முன்னர் பிரதமரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. இதனால் இங்கிலாந்தில் ஸ்திரமான பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் இல்லாமல் இருந்தது. இங்கிலாந்தில் பிரதம மந்திரியும் பாராளுமன்றமும் 2010 க்கு முன்னர் அடிக்கடி மாறினர். இதனை இங்கிலாந்து மாற்றியது. Fixed term Parliament Act 2011 என்ற சட்டத்தை இங்கிலாந்து பாராளுன்றம் நிறைவேற்றிய பின்னர் இங்கிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல் 5 வருடத்துக்கு ஒரு முறையே நடைபெறுகிறது. இப்படி இலங்கையிலும் கட்சித் தேர்தல்களே நடைபெறுவதால் Fixed term Parliament Act கொண்டு வந்தால் இங்கு நிரந்தரமான பாராளுமன்ற ஆட்சி நடைபெற இடமுண்டு எனலாம்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் நிலை
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் தமிழர் ஒருவரும், இஸ்லாமியர் ஒருவரும் உள்ளனர். இவர்கள் எந்த பிரதான கட்சியின் சார்பிலும் போட்டியிடவில்லை. தனிப்பட்ட ரீதியிலேயே போட்டியிடுகின்றனர். இந்நிலை ஏன் காணப்படுகிறது என்பதற்கு காரணம் சொல்ல வேண்டுமானால் இது ஒரு சாணக்கிய நிலை என்றே சொல்லவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் போட்டியிட்டாலும் அதில் 33 பேர் தென்னிலங்கை யைச் சார்ந்தவர்களாவர். அவர்களில் 3 பேரே முக்கியமாகப் பேசப்படுபவர்களாவர். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச என்பவர் ஒருவராவார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக் ஷ இரண்டாவது நபராவார். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் அனுர திஸாநாயக்க என்பவர் மூன்றாம் நபராவார்.
இவர்களில் மூவருக்கும் இடையேதான் போட்டி நடைபெறுகிறது. விசேடமாக ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையேதான் போட்டி கடுமையாகவுள்ளது. இவர்களில் ஒருவர்தான் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படினும் அவர்கள் முதலாவது சுற்றுவட்டத்தில் வெற்றி பெறுவார்களா? என்று தற்போது கூறமுடியாமல் இருக்கிறது. பெரும்பான்மை சிங்கள மக்கள் இவர்கள் இருவரையும் கூடுதலாக ஆதரிக்கின்றனர் என்றும் மக்கள் விடுதலை முன்னணியையும் ஓரளவு ஆதரிக்கிறார்கள் என்றும் கூறலாம்.
ஜனாதிபதி அபேட்சகர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற செலுத்தும் கரிசனையும் பெரிதாக இல்லை. அதேபோல் சிறுபான்மை இனமான தமிழர்களின் தலைவர்களும் அமைதியாக இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதாக பகிரங்கமாகக் கூறியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில், அவர்களது சமூகம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர்கள் ஒரே நிலையில் இருப்பது வரவேற்கத்தக்கது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மெளனமாகவே இருக்கின்றனர். காரணம், இம்முறை அவர்கள் தனித்தனியாக யாரையும் ஆதரிக்காமல் கூட்டாகச் சேர்ந்தே ஜனாதிபதி அபேட்சகரை ஆதரிக்கப்போவதாகக் கூறியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அபேட்சகர் தனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை என்றும் தான் அவர்களது கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என்றும் பகிரங்கமாகக் கூறியுள்ளதால் மேற்படி தமிழ்த் தலைவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கக் கூட முடியாமல் இருக்கும் என்றும் கூறலாம்.
ஆயின் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது போல் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இம்முறை ஒரு பக்கத்துக்கே சரியப்போகின்றது போல் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வேளைகளில் இவ்வாக்குகள் ஒருவரை வெற்றி பெறச் செய்யவும் கூடும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் காட்டும் புள்ளிவிபரங்கள் இதனைச் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளன எனவும் கூறவேண்டும். அவர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல்களில் மக்கள் அளித்த வாக்குகளின் புள்ளிவிபரத்தை காட்டியுள்ளதுடன் இம்முறை இதனைவிட கூடுதலான வாக்காளர்கள் உள்ளனர் எனவும் ஆகவே, இத்தொகையை விட கூடுதலான வாக்குகளை தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை அளிக்க இடமுண்டு என்பது உண்மையாகும். வாக்காளர் இடாப்பில் இதனைக் காணலாம். பழைய வாக்காளர் இடாப்பின் புள்ளிவிபரம் பின்வருமாறு:
மொத்த வாக்காளர்
1. திகாமடுல்ல .. 465,757
2. யாழ். மாவட்டம் .. 529,239
3. வன்னி மாவட்டம் .. 253,058
4. மட்டக்களப்பு மாவட்டம் .. 365,167
5. திருமலை மாவட்டம் .. 256,852
6. கொழும்பு வடக்கு .. 89,771
7. கொழும்பு மத்தி .. 131,482
8. கொழும்பு மேற்கு .. 40,609
9. கொழும்பு கிழக்கு .. 66,941
10. தெஹிவளை .. 59,812
11. நுவரெலியா .. 534,150
12. கண்டி .. 1,266,160
13. பதுளை .. 620,486
மொத்தம் .. 4,113,727
இவை 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. தற்போது இதனைவிட கூடுதலான வாக்காளர்கள் உண்டு என்று கருதலாம். இது ஒரு சிறிய உதாரணத்துக்கு எழுதப்பட்டுள்ளது.
ஆகவே, சிறுபான்மை இன, மத வாக்குகள் இம்முறை மிகக் கூடுதலாக இருக்கின்ற படியால் அவர்கள் ஒரே கட்சிக்கு வாக்களித்தால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு அது வாய்ப்பாக அமையலாம். தேர்தல் களநிலையைப் பார்க்கும்போது சிறுபான்மை இன, மதத்தவர் வேறு கட்சிகளுக்கு தாவக்கூடிய நிலையில் இல்லை என்றும் கூறலாம்.
சிறுபான்மை இன, மதத்தவர்களை கவர்வதற்காக மேலே கூறிய முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி என்பன மேலும் சில நடவடிக்கைகளை எடுத்து வாக்குகளைக் கவர முயற்சிக்கலாம். இம்முயற்சி வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா பொதுஜன முன்னணி தவிர்ந்த ஏனைய அபேட்சகர்களின் நிலை
மேலே கூறிய இருவர் தவிர ஏனைய 33 பேரின் நிலை எப்படி இருக்கும் என பார்ப்போம். மேற்படி 33 பேரில் மக்கள் விடுதலை முன்னணியே கூடுதலாக வாக்குகளைப் பெறும். முதன் முதலில் ரோஹண விஜயவீர மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டபோது கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்றார். பின்னர் நந்தன குணதிலக்க போட்டி போட்டபோது முன்னைய வாக்குகளைவிட கூட வாக்குகளைப் பெற்றார். இம்முறை அநுர திசாநாயக்க மேலே கூறப்பட்ட இருவரையும் விட பல இலட்ச வாக்குகள் கூடப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனையவர்களின் நிலை பற்றி அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. ஆயின் அவர்கள் 32 பேர் பெறும் வாக்குகளையும் கூட்டினால் சில இலட்சம் வாக்குகள் வரலாம் இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவு ஒரு விசித்திர முடிவாகவே இருக்கப்போகிறது.
ஜனாதிபதி பற்றி பாராளுமன்றத்திலுள்ள அதிகாரம்
ஜனாதிபதியின் வேதனம், ஓய்வு ஊதியம், மேலும் ஜனாதிபதியை அகற்றும் அதிகாரம் என்பன பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும்.
இலங்கை அரசியலமைப்பின் 36 (1)(2)(3)(4) ஆகிய பிரிவுகள் ஜனாதிபதியின் சம்பளமும் ஓய்வூதியமும் பற்றிக் கூறுகிறது.
அரசியலமைப்பு தொடங்குவதிலிருந்து ஒருமாத காலத்தினுள் ஜனாதிபதி என்ற பதவியை வகிப்போர் பெறுவதற்குரிய சம்பளத்தையும் படிகளையும் ஓய்வூதியத்தையும் பாராளுமன்றம் தீர்மானத்தின் மூலம் தீர்மானித்தல் வேண்டும். அத்தகைய ஓய்வூதியம் ஏதேனும் முந்திய சேவையின் பயனாக அத்தகைய ஆளுக்கு உரித்தான வேறேதேனும் ஓய்வூதியத்துக்கு மேலதிகமானதாகயிருத்தல் வேண்டும்.
ஜனாதிபதி என்ற பதவியை ஏற்பதன் மேல் அத்தகைய பதவியை தாங்குபவர் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய சம்பளத்தையும் படிகளையும் பெறுவதற்கும் அதன் பின்னர் அத்தகைய ஓய்வூதியத்தையும் பெறுவதற்கு உரித்துடையவராய் இருத்தல் வேண்டும்.
ஜனாதிபதியின் சம்பளமும் படிகளும் ஓய்வூதியமும் திரட்டு நிநியத்தின் மீது பொறுப்பிக்கப்படுதல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி என்ற பதவியை வகிப்போர் பெறுவதற்கு உரித்துடையவராயிருக்கும் சம்பளத்தை அல்லது ஓய்வு ஊதியத்தை அதிகரிக்கலாம். ஆனால் குறைத்தலாகாது.
ஜனாதிபதி சுகவீனம் காரணமாக இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக தமது பதவிக்குரிய தத்துவங்களையும் கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் முதலமைச்சரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும் கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் நியமிக்கலாம். என்பதுடன் அத்தகைய காலத்தின்போது முதலமைச்சர் என்ற பதவியில் கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்.
ஆயின், அப்போது முதலமைச்சர் பதவி வறிதாகவிருப்பின் அல்லது முதலமைச்சர் செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின்போது ஜனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும் கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்.
ஜனாதிபதி பதவியை வறிதாக்கல்
ஜனாதிபதியின் பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வறிதாகும்
அ. அவர் இறப்பதன் மேல்
ஆ. அவர் சபாநாயகருக்கு தனது கைப்பட கடிதத்தை எழுதி அனுப்புவதன் மூலம்
இ. அவர் இலங்கையின் ஒரு பிரஜையாக இல்லாதொழிந்தால்
ஈ. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆள் தமது பதவிக்காலம் தொடங்கிய திகதியிலிருந்து ஒரு மாதத்துக்குள்ளாக வேண்டுமென்றே பதவியேற்கத் தவறினால்
உ. உயர்நீதிமன்றம் அதன் தத்துவங்களைப் பிரயோகிக்கையில் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை வெற்றும் வறிது எனத் தீர்மானித்தால்
ஊ. குற்றச்சார்த்தல் மூலம் அவர் பதவி நீக்கப்பட்டால் ஜனாதிபதியின் பதவி வறிதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டு அனுப்பும் கடிதத்தின் மூலம் ஜனாதிபதி அவருக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதவராகவுள்ளார் என்றோ அல்லது பின்வருவனவற்றை புரிந்ததற்குக் குற்றவாளியாகிறார் என்று கூறும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தினால் அதன் மீது விசாரணை நடத்தப்படுதல் வேண்டுமெனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமெனவும் கோருதலும் வேண்டும்.
1. அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம்
2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்
3. இலஞ்சம் பெற்ற குற்றம்
4. தனது பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றம் அல்லது ஊழலுக்கான குற்றம்
5. ஏதேனும் சட்டத்தின் கீழான தவறு
மேற்படி கடிதத்தில் மேலேயுள்ள விடயங்கள் பற்றி உயர் நீதிமன்றத்தினால் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்றும் கோருதலும் வேண்டும்.
இக்கோருதலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் முழுஎண்ணிக்கையில் 2/3 பங்கினரின் கையொப்பத்துக்குமேல் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
மேற்படி கோரிக்கை அடங்கிய தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முழு எண்ணிக்கையில் (சமுகமளிக்காதோர் உட்பட) 2/3 பங்கினர்க்குக் குறையாதவர்கள் அதற்குச் சாதகமாக வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்றப்படுமிடத்து அத்தகைய தீர்மானத்தில் அடங்கியுள்ள குற்றச்சார்த்தல் விசாரணைக்கும் அறிக்கைக்குமெனச் சபாநாயகரால் உயர்நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தல் வேண்டும்.
உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கையின் பின்னர் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தால் அதனை சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் அக்குற்றச்சார்த்தல் முடிவுக்கு வந்துவிடும்.
காலம் சென்ற கலாநிதி என்.எம்.பெரேரா 1981 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பில் உள்ள மேற்படி பிரிவை விமர்சித்து கூறியது என்னவெனில், பாராளுமன்றமானது 2/3 பங்கினரின் கையொப்பத்துடன் குற்றச்சார்த்தலைத் தெரிவித்தாலும் உயர்நீதிமன்றம் அதனை ஏற்கமறுத்து அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையென்று கூறலாம் என்று குறிப்பிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே பாராளுமனறம் ஜனாதிபதி ஒருவரை பதவி விலக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமானதும் இலகுவானதாகவும் கொள்ளமுடியாது எனக்கூறலாம்.
தொகுப்புரை
இம்முறை நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் பலவழிகளிலும் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களினின்றும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
35 பேர் போட்டிபோடும் இத் தேர்தலில் பலர் வெற்றி பெற முடியாதெனத் தெரிந்தும் போட்டியிடுகின்றனர். ஏனெனில் அவர்கள் போட்டியிடுவது வெற்றியீட்டுபவரின் வாக்குகளை சிதறடிக்க என்று ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறு என்று கூறமுடியாது. 35 பேர்வழிகளிலும் சிறுபான்மை இனமான தமிழர் ஒருவராக சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். அதேபோல் ஹிஸ்புல்லாஹ்வும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னும் பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டியிடுகின்றார்கள் என்று கூற வேண்டும்.
இம்முறை போட்டியில் தமிழ் இனத்தவர் (சிவாஜிலிங்கத்தைத் தவிர) வேறு ஒருவரும் போட்டியிடவில்லை. ஆகவே தமிழ் இனத்தவரின் வாக்குகள் பல இலட்சக்கணக்கான வையாக இருக்கின்றன. அவ்வாக்குகளை யார் பெறுவர் என்று பல ஆய்வாளர்கள் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர். தமிழர்களது வாக்கு இல்லாமலே தான் வெற்றிபெற முடியும் என்ற துணிவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அபேட்சகர் போட்டி யிடுகிறார். அதேபோல் யாருடைய உதவியும் இல்லாமல் தமிழர் ஒருவரும் தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகிறார். இவை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் வரையில் பல தடைகளைத் தாண்டியே வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தேர்தல் சண்டைகள் பெருமளவில் இருப்பது போல் இம்முறை பலத்த சண்டைகள் இல்லை.
இம்முறைத் தேர்தலில் இராணுவத்தைச் சேர்ந்த அல்லது இராணுவத்துடன் தொடர்புடைய பலர் போட்டியிடுவதால் இத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்றும் பார்க்க ஆவலுடன் மக்கள் இருக்கின்றனர்.
இதுவரை காலமும் சிவிலியன்களே இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை தெரிவு எப்படியிருக்கும் எனப் பார்ப்போம்.
கே.ஜி. ஜோன்