அவுஸ்ரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை!

சிட்னியில் உள்ள Lakemba பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வங்கதேசதஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

33 வயதான முகமது மோஷின் என்ற அத்தஞ்சக்கோரிக்கையாளர், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாகதஞ்சமடைந்தவர். இணைப்பு விசாவில் வசித்த இவரின்

தஞ்சக்கோரிக்கை அண்மையில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பொருளாதார ரீதியாக மோஷின் சிரமப்பட்ட காலத்தில் தன்னுடன் 6 மாதம் வசித்து வந்ததாகக் கூறுகிறார் அவரது நண்பரான முகமது அகமது. “எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால், அவருக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தோம். ஒரு நாள் உனது நிலையை ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை புரிந்து கொள்ளும் என்றோம்.”

நண்பர்களின் உதவியை பெரிதும் நம்பி இருந்ததால் குற்றவுணர்ச்சியில் மோஷின் தனது வீட்டை வெளியேறிவிட்டதாகக் கூறுகிறார் முகமது அகமது. இவ்வாறு, இணைப்பு விசாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நண்பர்கள் அல்லது அவர்களது சமுதாயத்தினரின் உதவியை நம்பியே பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளனர் என்கிறது Refugee Action Coalition என்ற அமைப்பு.

முகமது மோஷினின் மரணம், அரசின் தோல்வியடைந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலணை முறையின் எடுத்துக்காட்டும் மற்றுமொரு சோக நிகழ்வு. இவரது மரணம் அகதிகளிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல். அண்மையில், பிரிஸ்பேன் பகுதியில் முன்னாள் மனுஸ்தீவு அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்தசில தினங்களுக்குள் மேலும் ஒரு தஞ்சக்கோரிக்கையாளர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.