சவேந்திர சில்வாவின் நியமனம்! உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்!- அமெரிக்கா

யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என  அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில் சவேந்திரசில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் இலங்கையின்  அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

சவேந்திரசில்வா இராணுவதளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளமை இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதிக்கும் அமெரிக்காவின் சட்டப்படி இது அமையும் என இலங்கை ஜனாதிபதிக்கும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளிற்கும் அமெரிக்கா தெளிவாக எடுத்துரைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை சவேந்திரசில்வாவிற்கும் ஏனைய குற்றவாளிகளிற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வது கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் வலுப்பெறுவதற்கும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.