கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி வயற் காடுகளுக்குள் மறைந்து வாழுகின்ற ஒரு சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஜனநாயகத்தையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள்.
அதுதான் யதார்த்தம். தமிழ் சமூகம் எவ்வாறு அடக்கி ஆளப்பட்டதோ அதைவிட மிக மோசமான முறையில் முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆளவேண்டும் என இனவாதக் கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. இதைத்தான் வெலிகம, பேருவளை, களுத்துறை, கண்டி, திகன மற்றும் அம்பாறையில் என பல்வேறு இடங்களில் இடம் பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இந்த இனவாத துரோகக் கும்பலை எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஒரு அணியாக நின்று முறியடிக்க வேண்டும். நமது வாழ்வு, இருப்பு, தனித்துவம், மனித உரிமை போன்ற அனைத்தையும் குழிதோண்டி புதைக்குமளவுக்கு அச்சமும் பயமும் பீதியும் குடிகொண்டவர்களாக நாம் நடுங்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலைமை தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை இன்று களத்துக்குக் கொண்டு வந்த பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கிறது.
கடந்த காலங்களில் பிரேமதாசவை, சந்திரிகாவை ஆதரித்து பல சாதனைகள் புரிந்திருக்கிறோம். அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்தை தோற்கடிப்பதிலும் நாம் முன்நின்றோம்.
ஆகவே, நாம் எடுத்த முடிவுகள் ஒருபோதும் கைசேதப்படக் கூடியதல்ல. எனவே, இந்த சமூகப் பணியில் நாம் அனைவரும் தனித்துவம், ஜனநாயகம், எதிர்காலம், வாழ்வு இருப்பு, நிம்மதி எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உறுதியாக சிறுபான்மையினரை அனுசரித்து ஆட்சி செய்யக் கூடிய சஜித்தை ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.