மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து சிலி நாட்டில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் சாண்டியாகோவில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ஆல்டோ மற்றும் சான் பெர்னார்டோவின் பெருநகர நகராட்சிகளிலும் படையினர் நிறுத்தப்பட்டனர், ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் என்று சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நேற்று (சனிக்கிழமை) நடந்த போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரை மீறி 41 சுரங்கப்பாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதில் 11 பொதுமக்கள் மற்றும் 156 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், 49 காவல்துறை வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறை பொது ஆய்வாளர் மொரிசியோ ரோட்ரிக்ஸ் மேலும் தெரிவித்தார்.

இன்றும் நிலைமை கட்டுக்கடங்காமல் இருந்ததால் பாதுகாப்பு படையினர் ஒரு கூட்டத்தை நீர் பீரங்கிகளைக்கொண்டு கலைக்கச் செய்தனர், கலகப் பிரிவு போலீசார் இளம் எதிர்ப்பாளர்களை வேனில் ஏற்றியபிறகு வேனில் மோதல் வெடித்தன. இதனைத் தொடர்ந்து சிலி காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்த மோதல்களுக்குப் பிறகு சாண்டியாகோவில் ஊரடங்கு உத்தரவு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிலி நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவ ஜெனரல் ஜேவியர் இட்ரியாகா கூறுகையில், “நகரங்களில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை மற்றும் இன்று ஏற்பட்ட பயங்கரமான நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர், சுதந்திரமாக செயல்படுதல் மற்றும் பொது இடங்களில் ஆட்கள் குவிவது போன்றவற்றைத் தடுக்க ஒட்டு மொத்த ஊரடங்கு உத்தரவு முடிவை நான் எடுத்துள்ளேன், நாளை இயல்புவாழ்க்கை தொடரும். மக்கள் கவலையின்றி வேலைக்குச் செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.