வரலாறு படைத்த உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு!

பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் நடந்து பழுதடைந்த பேட்டரி சார்ஜரை பழுது பார்த்த வகையில் உலகின் முதல் மகளிர் விண்வெளி நடைக்குழு வரலாறு படைத்தது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய்ர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக விண்வெளியில் மிதந்து பழுதடைந்த மின்சார நெட்வொர்க்கை சரிசெய்த நிகழ்வு அரைநூற்றாண்டில் முதன்முதலாக ஆண் துணையின்றி விண்வெளி நடை நிகழ்வாகும்.

அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி நடை வீராங்கனை கேத்தி சல்லிவான் இந்தச் சாதனையைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

நாசா விஞ்ஞானிகள், தலைவர்கள் ஆகியோர் பெண்கள் மற்றும் பிறருடன் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய்ர் ஆகியோரை வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். இது போன்ற நிகழ்வு இனி வரும் காலங்களில் இயல்பான, சகஜமான நிகழ்வாகும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் நாசா தலைமைச் செயலகத்திலிருந்து இந்த வரலாற்று நிகழ்வைப் பார்த்தார். “சரியான நபர்கள், சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்திருக்கிறார்கள். நான் உட்பட இவர்கள் உலகிற்கே ஒரு உத்வேகம் அளிப்பவர்களாவர்” என்றார்.

இதில் மெய்ர் முதன் முதலாக விண்வெளியில் நடந்துள்ளார், உலக அளவிவில் விண்வெளி நடையில் இவர் 228வது நபர், 15வது பெண்மணி. மாறாக கிறிஸ்டினா கோச் என்பவருக்கு இது 4வது ஸ்பேஸ்வாக் ஆகும்.