தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கான அடிப்படைக்கோரிக்கைகளை முன்வைத்து, சாகும்வரை உண்ணாவிரதமிருந்து ஈழயாகத்தில் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வான “தியாகதீப கலைமாலை – 2012” 29 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பேர்ணில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஸ்கோர்ஸ்பியில் அமைந்துள்ள சென்.ஜூட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் இருநூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகளை முறையே கிறீன் கட்சியைச் சேர்ந்த மத்தியு கேர்வன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு. சபேசன் ஏற்றிவைத்ததுடன் ஆரம்பமான நிகழ்வில், தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு/குயிலன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களினால் ஈகச்சுடர்களேற்றி வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த மக்களின் மலர் வணக்கம் இடம்பெற்று அகவணக்கத்துடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.
தியாகதீப கலைமாலை நிகழ்வின் முதல் அங்கமாக திலீபன் நினைவெழுச்சி கீதங்கள் இசைக்கப்பட்டன. மெல்பேர்ன் இளையோர் வழங்கிய இந்த எழுச்சி கீதங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தன.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய சோசலிச கட்சியை சேர்ந்த சூ வோல்ட்டன் அவர்கள், ஆஸ்திரேலியாவில் தற்போது தீவிரமாக அரசியல் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சினை பற்றியும் தமிழ் அகதிகள் விவகாரத்தின் உண்மை நிலைவரம் குறித்தும் சிறப்புரை வழங்கினார்.
அடுத்த நிகழ்ச்சியாக, திருமதி மீனா இளங்குமரனின் “நடனாலயா” நாட்டியப்பள்ளி மாணவிகள் “விழிகளில் சொரிவது” என்ற பாடலுக்கு நடனநிகழ்வு வழங்கினர்.
நடனத்தை தொடர்ந்து விக்டோரிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் தயாரிக்கப்பட்ட “பார்த்தீபன் இன்னும் பசித்திருக்கிறான்” என்ற காணொலி காண்பிக்கப்பட்டது.
தியாக திலீபனின் போராட்டம் குறித்த பின்னணி, அது நடைபெற்ற விதம், வல்லாதிக்க அரசுகளும் சிங்கள அரசுகளும் தமிழ்மக்களின் சாத்வீக போராட்டத்தை கையாண்ட முறை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னரும் திலீபனின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலுள்ள நிலைமை, தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தற்போதைய அரசியல் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த காணொலி அமைந்தது.
அதனை தொடர்ந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரான தெய்வீகன் அவர்கள் தியாகி திலீபனின் தியாகத்தையும் சமகால அரசியல் நிலையையும் விளக்கி உரைநிகழ்த்தினார். அவர் தனதுரையில், தியாகி திலீபன் முன்வைத்த அடிப்படைக்கோரிக்கைகளின் தேவைகள் இருபத்தைந்தாண்டுகள் கடந்த பின்னரும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய காலகட்டத்தில் தியாகி திலீபனின் வழியில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சிங்கள அரசு மிகத் தந்திரமான முறையில் எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றது.
சிறுபான்மையினரிடையே முரண்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டு அதன்வழியாக தனது நலன்களை அடைந்துகொண்டுள்ளது. இதற்கு மிகச் சிறந்ததும் மிகப்பிந்தியதுமான எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் அதன்பின்னான ஆட்சியமைப்பும். சிங்கள அரசின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு தமிழர்கள் மிகக்கவனமாகத் தமது காய்களை நகர்த்த வேண்டிய காலமிது எனக்குறிப்பிட்டார்.
கலை நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக “ஈழ விடுதலை காணப்போகிறோம்” என்ற பாடலுக்கு “நாட்டியாலயா” நடனப்பள்ளி மாணவிகள் வழங்கிய நடனம் இடம்பெற்றது.
இறுதியாக, தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டடு, “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதியுரை ஏற்புநிகழ்வுடன், இரவு எட்டு மணியளவில் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவடைந்தது.
Eelamurasu Australia Online News Portal















