21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு இதுவரை 75 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவூடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகளுக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு சாட்சி விசாரணைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள 75 முறைப்பாடுகளையும், சிவில் அமைப்புக்கள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரே வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் செயலர் புவனேக ஹேரத் தெரிவித்தார்.
இந் நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 14 ஆம் திகதி எழுத்து மூலம் ஆணைக் குழுவுக்கு இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும், அவரது முறைப்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.