ஆஸ்திரேலியாவில் நோயை பரப்பும் உணவு பொருளை எடுத்து வந்ததாக கூறி வியட்நாம் பெண்ணை உடனடியாக அதிகாரிகள் நாடுகடத்தினர்.
தென்கொரியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனால் பிற ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் வியட்நாம் நாட்டை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரது உடைமைகளை பரிசோதனை செய்தபோது, அதில் பன்றி இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நோயை பரப்பும் உணவு பொருளை எடுத்து வந்ததாக கூறி அந்த பெண்ணை உடனடியாக வியட்நாமுக்கு நாடுகடத்தினர். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஆஸ்திரேலியா வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.