இறந்த குழந்தையை புதைப்பதற்காக நிலத்தில் குழி தோண்டிய போது , உள்ளே உயிரோடு குழந்தை ஒன்று இருந்தமை மண்ணை தோண்டியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவர் மனைவி வைஷாலி. பரேலியில், பொலிஸில் பணியாற்றுகிறார். கர்ப்பிணியான அவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டது.இந்நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரக்கு குழந்தை இறந்து பிறந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை புதைப்பதற்காக இடுகாட்டுக்குச் சென்று அங்கு ஒரு இடத்தில் மண் வெட்டியால் தோண்டினார். மூன்றடி ஆழத்தில் மண்வெட்டி பதிந்தபோது, சத்தமொன்று கேட்டது. பிறகு கவனமாக மண்ணை அள்ளினார். உள்ளே பானை ஒன்று இருந்தது. திறந்து பார்த்தால், அதில் பெண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிரோகியும் அவருடன் வந்தவர்களும் உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இது குறித்து அந்தப் பகுதிக்கு பொறுப்பான காவல் துறை அதிகாரி தெரிவிக்கும் போது, ‘குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழந்தையை யார் புதைத்தார்கள் என்பதுபற்றி விசாரித்து வருகிறோம்’ என்றார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.