அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது தொடர்பாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வடகொரிய அரசுகளின் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள வடகொரியா, இது தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் இருவேறு கருத்துகளை வெளியிட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் ஹனோய் நகரில் 2-வது முறையாக சந்தித்தனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதுதான் இந்த சந்திப்பின் நோக்கம்.
மாறாக வடகொரியா மீது ஐ.நா. சபையால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து பேச ட்ரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை. பொருளாதார தடை குறித்து அமெரிக்கா சாதகமான தகவலை தெரிவிக்கும் என கிம் எதிர்பார்த்தார். தங்களை கடுமையாக பாதித்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான தொடக்க முயற்சியைக் கூட மேற்கொள்ள மறுத்ததால் அமெரிக்கா மீது வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.
ஹனோய் உச்சி மாநாடு திடீரென முடிவுக்கு வந்தது என்றால், அதற்கு சரியான காரணம் இல்லாமல் இல்லை. யாங்பியான் அணுசக்தி வளாகத்தை மூட வடகொரியா ஒப்புக்கொண்டது. அதேநேரம், பொருளாதார தடையை விலக்க வேண்டும் என கோரியது. ஆனால் யாங்பியானை மூடுவது மட்டுமல்லாமல் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளையும் முடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அனைத்து அணு ஆயுதங்கள் மற்றும் அது தொடர்பான திட்டங்களை கைவிடுவோம் என உறுதி அளிக்க வேண்டும் என்றும் கோரியது. இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை தடையை நீக்கும் நடவடிக்கையை தொடங்க முடியாது என அமெரிக்கா கைவிரித்தது. இதனால் வடகொரியா கோபமடைந்தது.
இந்த முட்டுக்கட்டை, கடந்த ஜூன் 30-ம் தேதி வட மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் பகுதி யில் ட்ரம்பும் கிம்மும் சந்தித்தவரை தொடர்ந்தது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங் கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படிதான் பேச்சு வார்த்தை சமீபத்தில் தொடங்கியது. இதனிடையே, வடகொரியா மற்றும் ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த ஜான் போல்டன், ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் அணுஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு விதிக்கப்பட்டிருந்த சுயகட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளப்போவதாகவும் வடகொரியா அறிவித்தது. இப்படி செய்தால் அமெரிக்காவிடமிருந்து பொருளா தார தடை தொடர்பான சில சலுகைகளை பெற முடியும் என வடகொரியா நினைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இதனிடையே, ஐ.நா. நடவடிக்கையின்படி, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டில் பணிபுரியும் வடகொரிய பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேற்ற வேண்டியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நடவடிக்கை, வெளிநாட்டு கரன்சி அதிக அளவில் தேவைப்படும் வடகொரியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, இருதரப்புக்கும் வெற்றிகரமான ராஜதந்திரம் தேவைப்படுகிறது. வடகொரியா அணுஆயுதங்களையும் அது தொடர்பான திட்டங்களையும் கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். ஆனால், வடகொரியா மீதான பொருளாதார தடையை விலக்கிக் கொள்வது குறித்து பேச அமெரிக்கா தயாராக இல்லை. கிம் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. “இந்த நடைமுறை மூலம் நான் என்ன செய்ய தயாராக உள்ளேனோ, அதில் பாதியைக்கூட செய்ய அமெரிக்கா தயாராக இல்லை” என கிம் கருதுகிறார்.
வடகொரியா மீதான பொருளாதார தடையை படிப்படியாக விலக்கிக்கொள்ளவாவது அமெரிக்கா முன்வர வேண்டும். இல்லாவிட்டால் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மேற் கொள்ளப்படும் முயற்சி கனவாகவே இருக்கும்.
டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி