ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது.
பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன? என்பதை பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.