ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவு செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ள போதும் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனங்களும், கொள்கைத்திட்ட வெளியீடுகளும் இடம்பெறாத நிலையில் அவசரமான தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்காது எனச் சுட்டிக்காட்டிய சம்பந்தன் களமிறங்கிய வேட்பாளர்கள் யாரும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்குரிய உத்தியோக பூர்வமான அணுகுமுறைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதித்தீர்மானம் எப்போது அறிவிக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாஸவுடன் அவர் பெயரிடப்படுவதற்கு முன்னதாக சந்தித்திருந்தோம். அதன் பின்னர் பிரதமருடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததோடு சஜித் தரப்பின் குழுவினரும் சந்தித்திருந்தனர்.
அதேபோன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவை அனைத்துமே உத்தியோகப் பற்றற்ற முறையில் தான் நடந்தேறியுள்ளன. இந்தச் சந்திப்புக்களின் போது தீர்க்கமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.
இதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவும், ஒருங்கிணைப்புக் குழுவும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கூடி ஆராய்ந்திருந்தது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் அவதானங்களை செலுத்தியிருந்தோம். தமிழ் மக்களின் நியாயமான விடயங்களை முன்னிலைப்படுத்தியே எமது இறுதியான தீர்மானங்களை எடுப்பதென்பதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமது பிரசாரங்களையும் மெதுவாக ஆரம்பித்துள்ளனர். ஆனால் எந்தவொரு தரப்பினரும் இதுவரையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினையோ அல்லது கொள்கைத்திட்டத்தினையோ வெளிப்படுத்தவில்லை.
ஆகவே எடுத்த எடுப்பில் நாம் முடிவுகளை எடுக்க முடியாது. இந்த விடயத்தில் பொறுமையுடனும், நிதானமாகவும் தீர்மானிப்பதற்கே தலைப்பட்டிருக்கின்றோம்.
அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் கொள்கைத்திட்டங்களை வெளியிட்ட பின்னர் அவற்றையும் நாம் கவனத்தில் கொண்டு ஆராயவுள்ளோம். இதுவரையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள எந்தவொரு வேட்பாளர்களும் எம்முடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உத்தியோக ப+ர்வமான அழைப்புக்களையோ அறிவிப்புக்களையோ மேற்கொள்ளவில்லை.
நாம் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளுடன் சஜித் பிரேமதாஸவுடனோ, கோத்தாபய ராஜபக்ஷவுடனோ, அநுரகுமார திஸாநாயக்கவுடனோ ஏனைய தரப்பினருடனோ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் நிபந்தனைகளை விதிப்பீர்களா? எழுத்துமூலமான வாக்குறுதிகளை பெறுவதற்கு முயல்வீர்களா என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,
எமது நிபந்தனைகள் எமது மக்களினை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால், அதுபற்றி தற்போது எவ்விதமான இறுதி முடிவுகளையும் எடுத்திருக்கவில்லை. எழுத்துமூலமாக நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை கூட்டமைப்பாக கூடியாராய்ந்து யதார்த்த பூர்வமாக கையாள்வதற்கே முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.