பெளத்த மேலாண்மை!

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய சடலம் எரிக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்த பொது­ப­ல­சேனா அமைப்பைச் சேர்ந்த ஞான­சார தேரர் மற்றும் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்ட பௌத்த பிக்­குகள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் நாடா­ளு­மன்­றத்தில் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்தில் சிறப்புக் கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­றிய அவர் இந்த விட­யத்தில் பொலி­ஸாரும் நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்­துள்­ளார்கள் என சுட்­டிக்­காட்டி, சம்­பந்­தப்­பட்ட பொலிஸார் மீதும் சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்­பட வேண்டும் என்றும் அவர் கோரி­யுள்ளார்.

அதே­வேளை, நீரா­வி­யடி பிள்­ளையார்; ஆலய வளவில் சடலம் எரிக்­கப்­பட்ட சம்­ப­வத்தில் தமிழ் மக்­களே குழப்பம் விளை­வித்­துள்­ளார்கள். அவ்­வாறு குழப்பம் விளை­வித்து, ஒட்­டு­மொத்த சிங்­கள மக்­க­ளையும் வேத­னைப்­ப­டுத்தி உள்­ளார்கள் என்று பொது எதி­ர­ணியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர்                                 ஆனந்த அளுத்­க­மகே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்குப் பதி­ல­ளிக்கும் வகையில் உரை­யாற்­றி­ய­போது நாடா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்கள் மீது மத ரீதி­யான வன்­மு­றையைப் பிர­யோ­கித்து வரு­கின்ற பௌத்த பிக்­கு­களின் அடா­வ­டித்­த­னத்தைச் சுட்­டிக்­காட்டி, அதற்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்றே நாடா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தினார். அப்­போது சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வா­தத்தின் கோர முகத்தை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே பொது எதி­ரணி தரப்பில் மூக்கை நுழைத்து சம்­பந்­த­னுக்குப் பதி­ல­ளிக்கும் வகையில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆனந்த அளுத்­க­மகே உரை­யாற்றி இருந்தார்.

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் பௌத்த பிக்­குவின் சட­லத்தைக் கொண்டு சென்­ற­வர்கள், இந்து மத சம்­பி­ர­தா­யங்கள் நிய­தி­க­ளுக்கு மாறாக நடந்து கொண்­டார்கள். இதன் மூலம் இந்து மதத்தின் புனி­தத்­தையும் மாசு­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். அது மட்­டு­மல்­லாமல் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்து சட்­ட­மீ­றல்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­தார்கள்.

மத நிய­தி­களை மீறி ‘காரியம்’ செய்­தனர்

இந்து ஆலய வள­வுக்குள் அதுவும் அந்த ஆல­யத்தின் தீர்த்­தக்­கேணி கரை­யோ­ரத்தில் வேற்று மத­மா­கிய பௌத்த மதப் பிக்கு ஒரு­வ­ரு­டைய உட­லுக்கு இறு­திக்­கி­ரி­யை­யாக எரி­யூட்டி இருந்­தார்கள். இந்த நட­வ­டிக்­கைக்­கான ஆயத்­தங்கள் செய்­யப்­பட்­ட­போதே, இது இந்து மத சம்­பி­ர­தா­யங்கள், நிய­திகள், ஒழுக்­கங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்று அந்த ஆலயக் குருக்­களும் ஆலய பரி­பா­லன சபை­யி­னரும் எடுத்­துக்­கூறி நீதி­மன்­றத்தில் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து, பிக்­குவின் உடல் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் எரி­யூட்­டப்­படக் கூடாது என்று உத்­த­ர­விட்ட நீதி­மன்றம், அருகில் உள்ள நாயாறு கடற்­படை முகாமின் கடற்­க­ரை­யோ­ரத்தில் எரி­யூட்­டு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்த பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் ஏற்­க­னவே இரா­ணுவ பொலிஸ் பாது­காப்­புடன் அடாத்­தாக பௌத்த விகா­ரையை நிர்­மா­ணித்து, அதன் விகா­ர­தி­ப­தி­யாக விளங்­கிய கொலம்பே மேதா­னந்த தேர­ரு­டைய சட­லத்தை அந்த விகாரைப் பகு­தியில் அதா­வது நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் எரிக்க வேண்டும் என்று வாதி­டு­வ­தற்­காக நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணி­களின் முன்­னி­லை­யி­லேயே இந்த உத்­த­ரவை நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்­தது.

இந்த உத்­த­ரவு வழங்­கப்­படப் போகின்­றது என்­பதை அறிந்து, இந்த வழக்கு தொடர்­பான நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அவ­தா­னிப்­ப­தற்­காக நீதி­மன்­றத்தில் சமுக­ம­ளித்­தி­ருந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லா­ளரும் நீதி­மன்ற அவ­ம­திப்புக் குற்­றச்­சாட்டில் தண்­டிக்கப்­பட்­ட­வ­ரு­மா­கிய ஞான­சார தேரர் நீதி­மன்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.

அவ்­வாறு வெளி­யே­றிய அவர் நீதி­மன்ற உத்­த­ரவைப் புறக்­க­ணித்து, நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளவில், அந்த ஆல­யத்தின் தீர்த்­தக்­க­ரையில் பௌத்த பிக்­குவின் உடலை எரிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களில் மூழ்கி இருந்தார். நீரா­வி­யடி ஆலய வள­வுக்குள் சடலம் எரிக்­கப்­படக் கூடாது என்ற நீதி­மன்ற உத்­த­ர­வு­ இ­று­திக்­கி­ரி­யை­க­ளுக்­கான ஏற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்ட போதிலும், ஞான­சார தேரர் தலை­மை­யி­லான பௌத்த பிக்­கு­களும் அவர்­க­ளுடன் அங்கு குழு­மி­யி­ருந்த சிங்­கள பௌத்­த­ர்­களும் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி பௌத்த பிக்­குவின் சட­லத்தை எரிக்கும் ‘காரியம்’ அங்கு நிறை­வேற்­றப்­பட்­டது.

பார­தூ­ர­மான விட­யங்கள்

இந்த நட­வ­டிக்­கையின் மூலம் பௌத்த பிக்­கு­களும், சிங்­கள பௌத்­த­ர்­களும், பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வர்கள் எவ­ருமே வசிக்­காத பகு­தியில் இந்­துக்­க­ளு­டைய ஆல­ய­மா­கிய நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் அந்த மதத்தின் புனி­தத்தைக் கெடுக்கும் வகையில் அடா­வ­டித்­தனம் புரி­யப்­பட்­டுள்­ளது.

இரண்டு மதங்கள் சார்ந்த ஓர் ஆலய விவ­கா­ரத்தில் ஒரு மனித சட­லத்­துக்­கான இறு­திக்­கி­ரி­யை­களை வலிந்து புகுத்தி பிரச்சினை கிளப்­பி­வி­டப்­பட்­டுள்­ளது.

மத சம்­பி­ர­தா­யங்கள், அதன் புனிதத் தன்­மை­யுடன் சம்­பந்­தப்­பட்ட உணர்­வு­பூர்­வ­மான ஒரு விட­யத்தில் நீதி­மன்­றத்தின் உத்­த­ரவு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்ற உத்­த­ரவு புறக்­க­ணிக்­கப்­பட்­டதன் மூலம் நீதி­மன்றம் அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இரு சமூகம் சார்ந்த உணர்­வு­பூர்­வ­மான மத­வி­வ­காரம் சம்­பந்­தப்­பட்ட ஒரு விட­யத்தில்

நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பாட்­டையும் பொறுப்­பையும் கொண்­டுள்ள பொலிஸ் தனது கட­மையைச் செய்யத் தவ­றி­விட்­டது.

இந்த விவ­கா­ரத்தில் இன முரண்­பாட்டைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே நீதி­மன்ற உத்­த­ரவை கவ­னத்திற் கொள்­ள­வில்லை என்று மனித உரி­மைகள் ஆணை­யக விசா­ரணை ஒன்றில் நாட்டின் நீதிப் பொறி­முறை சார்ந்த கடமைப் பொறுப்பை எடுத்­தெ­றிந்த வகையில் பொலிஸ் தரப்பில் பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான நிலை­மையில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­கின்ற கடப்­பாட்டை அலட்­சி­யப்­ப­டுத்தி, இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்­தையும் பகை­மை­யையும் வளர்ப்­ப­தற்­கான தவறை பொலிஸ் தரப்பு இழைத்­துள்­ளது.

ஐ.நா.வின் கொள்கை வழியில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சிவில், மதம் மற்றும் அர­சியல் உரி­மைகள் சட்­டத்தை மீறிய பௌத்த பிக்­கு­க­ளினால் பொது அமை­திக்குப் பங்கம் வளை­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய தீர்த்­தக்­க­ரையில் பௌத்த பிக்­குவின் சடலம் எரிக்­கப்­பட்­டதன் மூலம், பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் ஏனைய மதங்­க­ளுக்­குள்ள உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும் என்ற அர­சி­ய­ல­மைப்பின் நியதி மீறப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் நாட்டின் அதி உயர் சட்­ட­மா­கிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ளவு நடந்த பின்பும் நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பொது எதி­ரணி உறுப்­பினர் ஆனந்த அளுத்­க­மகே நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் பௌத்த பிக்­கு­களும் அவர்­க­ளுடன் இணைந்­தி­ருந்­த­வர்­களும் செயற்­பட்ட முறை­மையை நியா­யப்­ப­டுத்தி உள்ளார். இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்­களே தவறு இழைத்­துள்­ளார்கள் என்று அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

 

மேலாண்மை நிலை­நாட்­டப்­பட்­டது

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலயப் பகுதி யுத்த மோதல்கள் நிலை­மையில் இரா­ணு­வத்தின் முகாம் பகு­திக்குள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், அந்த ஆலயப் பகு­திக்குள் செல்­வ­தற்குப் பொது­மக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால், இரா­ணு­வத்தின் வச­மி­ருந்த அந்த ஆல­யத்தில் படை­யினர் வழி­பாடு

நடத்தி வந்­த­துடன், பௌத்த பிக்கு ஒரு­வரை அங்கு வர­வ­ழைத்து, ஆலய வள­வுக்குள் புத்தர் சிலை­யொன்று முதலில் நிறு­வப்­பட்­டது. பின்னர் பௌத்த விகா­ரை­யொன்று அங்கு நிலை­கொண்டு வசித்து வந்த கொலம்பே மேதா­னந்­த ­தே­ர­ரினால் நிர்­மாணிக்கப்­பட்­டது.

அவ­ரு­டைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் உறு­து­ணை­யாக இருந்­த­துடன், அந்த பௌத்த பிக்­கு­வுக்குப் பாது­காப்பு வழங்கி இருந்­தார்கள். இதனால் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற போதிலும் தயக்­க­மின்­றியும் மிகத் துணி­வோடும் செயற்­பட்ட கொலம்பே மேதா­னந்­த­தேரர் தமிழ் மண்ணில் அதுவும் இந்­து­மத மக்­க­ளு­டைய பிர­தே­சத்தில் பௌத்த மதத் திணிப்பை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டி­ருந்தார்.

அந்த மண்ணில் அடாத்­தாக நீதி­யற்ற நியா­ய­மற்ற முறை­யிலும் மனி­தா­பி­மா­ன­மற்ற வகை­யிலும் இடம்­பெற்ற பௌத்த மதத் திணிப்­பையும், அடிப்­படை மத உரிமை மீற­லையும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­னாலோ அல்­லது மக்கள் எழுச்­சி­யி­னாலோ தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை. அடாத்­தான அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருந்த சூழ­லி­லேயே அந்த விகா­ரா­தி­பதி கொலம்பே மேதா­னந்­த­தேரர் புற்­று­நோய்க்கு ஆளாகி மக­ர­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காமல் மர­ண­ம­டைந்தார்.

உயி­ரி­ழந்த அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கா­கவே அவர் நிர்­மா­ணித்த பௌத்த விகாரை பகு­தியில் இந்து மத மக்­க­ளு­டைய மனங்­களைப் புண்­ப­டுத்தி வேதனை அடையச் செய்யும் வகையில் அடாத்­தாக அவ­ரு­டைய சட­லத்தை எரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஞான­சா­ர­தேரர் தலை­மை­யி­லான பிக்­குகள் சிலரும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வான சிங்­கள பௌத்த தீவிர மதப்­பற்­றா­ளர்­களும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இந்து ஆல­யப்­ப­கு­தியில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய சட­லத்துக்கு எரி­யூட்டி இறு­திக்­கி­ரி­யைகள் செய்­வ­தென்­பதை சாதா­ர­ண­மாக எவரும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். ஆனாலும், பௌத்த மதமே இந்த நாட்டின் முதன்மை பெற்ற மதம் என்ற பேரி­ன­வாத மேலாண்மை நிலையை நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவே அந்த பிக்­குவின் சட­லத்­துக்கு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தின் தீர்த்­தக்­க­ரையில் எரி­யூட்­டப்­பட்­டது.

அச்­சு­றுத்தல்

இது முழுக்க முழுக்க சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வாத அர­சியல் ஆக்­கி­ர­மிப்பின் வெளிப்­பா­டா­கவே நடந்து முடிந்­தது. சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வா­தத்தின் முன்னால் நீதி நியாய நெறி­மு­றை­களோ நீதி­மன்ற உத்­த­ர­வு­களோ அல்­லது நீதி­மன்ற தீர்ப்­புக்­களோ செய­லற்­றவை என்­பதை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் இடம்­பெற்றபிக்­குவின் சடலம் எரிக்­கப்­பட்ட சம்­பவம் நிதர்­ச­ன­மாகக் காட்­டி­யுள்­ளது.

இந்தச் சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வாரங்­க­ளுக்கு மேலா­கி­விட்­ட­போ­திலும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் கடைப்­பி­டித்து, நீதியை நிலை­நாட்­ட­வேண்­டிய அரச பொறி­மு­றைகள் எந்­த­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. நீதி­மன்ற உத்­த­ரவு உதா­சீனம் செய்­யப்­பட்டது மட்­டு­மல்­லாமல், நீதி­மன்ற உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தற்­காக அந்தப் பகு­திக்குச் சென்­றி­ருந்த நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலயம் சார்ந்த குருக்­களும் சட்­டத்­த­ரணி ஒரு­வரும் அவர்­க­ளுடன் இருந்­த­வர்­களும் பௌத்த பிக்­குகள் உள்­ளிட்­ட­வர்­க­ளினால் தாக்­கப்­பட்­டார்கள். அவர்­களில் இந்து மத­குரு காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற வேண்­டி­ய­தா­யிற்று.

நீதி­மன்ற உத்­த­ரவு கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய சட்­டத்­த­ரணி சுகாஷ் பௌத்த பிக்கு ஒரு­வ­ரினால் பகி­ரங்­க­மாக அச்­சுறுத்­தப்­பட்டார். நீதி­மன்ற உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தற்­காகச் சென்­றி­ருந்த அவ­ருக்கு இந்த நாட்டில் ஹாம­து­ரு­வுக்வே முத­லிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரி­யாதா என்று தமிழில் உரத்து ஆணித்­த­ர­மா­கவும் அச்­சு­றுத்தும் வகை­யிலும் அந்த பிக்கு வின­வி­யி­ருந்தார்.

ஹாம­து­ரு­வுக்கே முத­லிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரி­யாதா என்று அந்த சட்­டத்­த­ரணி சுகாஷை நோக்கி வின­வி­யி­ருந்­தாலும், உண்­மையில் அந்தக் கேள்வி நீதி­மன்­றத்தை நோக்­கியே எழுப்­பப்­பட்­டி­ருந்­தது என்றே கொள்ள வேண்டும். நீதி­மன்ற உத்­த­ர­விலும் பார்க்க பௌத்த பிக்­கு­களின் விருப்­பமும், அவர்­களின் நட­வ­டிக்­கை­க­ளுமே மேலோங்­கி­யவை என்­பதை அந்த பிக்கு எழுப்­பிய கேள்வி மட்­டு­மல்­லாமல், தொடர்ந்து அங்கு இடம்­பெற்ற பௌத்த பிக்­குவின் சடலம் எரிப்­பும்­கூட சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிலை­நாட்­டி­யுள்­ளன.

எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் என்ன?

இந்தச் சம்­ப­வத்தின் பின்னர் கருத்து வெளி­யிட்ட ஞான­சார தேரர் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் பௌத்த பிக்­குவின் சடலம் எரிக்­கப்­பட்ட சம்­ப­வத்தை அப்­ப­டியே விட்­டு­வி­டு­மாறு கூறி­யி­ருந்தார். அது ஒரு சாதா­ரண சம்­பவம். பௌத்த பிக்கு ஒருவர் மர­ண­மானார். அவர் வசித்து வந்த பகு­தியில் அவ­ரு­டைய இறு­திக்­கி­ரி­யைகள் நடத்­தப்­பட்­டன. அவ்­வ­ள­வுதான். இதில் மத சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கோ அல்­லது மதம் சார்ந்த உணர்­வு­க­ளுக்கோ, உரிமை சார்ந்த விட­யங்­க­ளுக்கோ இட­மில்லை. ஆகவே நடந்து முடிந்­ததை நடந்து முடிந்­த­தாகக் கருதி இயல்­பான காரி­யங்­களைக் கவ­னி­யுங்கள் என்ற ரீதியில் அவ­ரு­டைய கருத்து வெளிப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு ஒன்றின் அடிப்­ப­டையில் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கையைத் தொடர்ந்து நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­ய­வர்­களைக் காணொளி காட்­சி­களின் மூல­மாக அடை­யாளம் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­ய­வர்­களும், குழப்பம் விளை­வித்­த­வர்­களும், ஆலய குருக்கள் மற்றும் சட்­டத்­த­ரணி உள்­ளிட்­ட­வர்­களைத் தாக்­கி­ய­வர்­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­டுள்­ள­தாகக் கூறப்­பட்ட போதிலும், நீதி­மன்ற உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்தத் தவ­றிய பொலிசார் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான நகர்­வுகள் எதுவும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அதே­நேரம் இந்த விடயம் தொடர்­பாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று சட்­டமா அதிபர் தொலை­பேசி வழி­யாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது. ஆனால் சட்­டமா அதிபர் திணைக்­களம் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பது பற்­றிய தக­வல்கள் எதுவும் வெளி­யா­கி­ய­தாகத் தெரி­ய­வில்லை. சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த விவ­காரம் குறித்து தீவிர கவனம் செலுத்தி இருக்­கின்­றதா என்­பதும் இது­வ­ரையில் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை.

இயல்­பாக எழும் கேள்­விகள்

இன முரண்­பாட்டைத் தடுப்­ப­தற்­கா­கவே நீதி­மன்றத் தீர்ப்பைக் கவ­னத்தில் கொள்­ள­வில்லை என்று மனித உரி­மைகள் ஆணை­யக விசா­ர­ணை­யொன்றில் பதி­ல­ளித்­துள்ள பொலிசார், இந்த விடயம் குறித்து நீதி­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இரண்டு இனங்களுக்கிடையில் உணர்ச்சிகரமான மத விடயங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்து, அதனை நடைமுறைப்படுத்துமாறு பொலிசாருக்கு ஆணையிட்ட நிலையில் அதனை சூழ்நிலை காரணமாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினால் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா என்பதும் தெரியவில்லை. அல்லது இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்;டதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு உதாசீனப்படுத்தியதையும், சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியதையும் கண்டித்து நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் அமைதியடைந்துவிட்டார்கள் என்றே தெரிகின்றது.

நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது என்பதே சாதாரண குடிமகனுடைய நிலைப்பாடு. இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்று எந்த வகையில் எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு, நீதி நியாயத்திற்காகப் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகள் அஹிம்சையையும் காருண்யத்தையும் இரு கண்களாகப் போற்றி கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்கப்படுவார்கள் என்றால், நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு அதிகார பலம் கொண்டிருக்கின்றது, எந்த அளவுக்கு பயன்தரத்தக்க வல்லமையைக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் மனங்களில் இயல்பாக எழுகின்றது.

பி.மாணிக்­க­வா­சகம்