அவுஸ்ரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவுநாளான 26 – 09 – 2010 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்வுகளின் ஆரம்பமாகஅவுஸ்ரேலிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றன. அடுத்து, தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் பொதுமக்களின் மலர் வணக்கமும், தொடர்ந்து அகவணக்கமும் இடம்பெற்றது.
அதனைதொடர்ந்து, தியாக தீபம் திலீபன் நினைவு பாடலுக்கு கலாஞ்சலி நடனப்பள்ளி மாணவன் வழங்கிய நடனநிகழ்வு இடம்பெற்றது. அடுத்து, “அணையாத தீபம்“ எனும் தியாக தீபம் திலீபன் நினைவுகளை சுமந்த காணொளிக் காட்சி காண்பிக்கப்பட்டது. அகிம்சையை போதித்த பாரத தேசத்துக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து, அதன் உன்னதத்தை உலகிற்கு காட்டியவன் திலீபன் என்பதையும், அப்போராட்டத்தின் பின்னனிகளையும் அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் அக்காணொளி தெளிவாக எடுத்துக்காட்டியது.
அடுத்த நிகழ்வாக, திலீபன் நினைவுப்பாடல், பாடசாலை மாணவர்களால் இசைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து நடனாலயா நாட்டியப்பள்ளி சிறுமிகள் வழங்கிய நடனநிகழ்வு இடம்பெற்றது.
அதனைஅடுத்து, “தாயக மக்களுக்கான புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் செல்வன் துவாரகன் சந்திரனின் பேச்சு இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட தாயகமக்களுக்கு, புலம்பெயர்ந்துவாழும் மக்கள் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், விடுதலைப் போராட்டத்தில் பக்கபலமாக இருந்து, உறுதியோடு பயணித்த மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டியது எமது கடமையாகும் எனவும் அவரது கருத்துரை அமைந்திருந்தது.
நிகழ்வின் அடுத்ததாக, 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த “இருட்டு மனிதர்கள்” என்ற தாயகத்தில் உருவான குறும்படம் காண்பிக்கப்பட்டது. தாயகநிலங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகும் தற்போதைய நிலைவரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த குறும்படம் இடம்பெற்றிருந்தது. தாயகத்தில் தற்போது நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்களையும், பெருகிவரும் புத்தவிகாரைகளையும், அழிந்துபோகும் தமிழர் அடையாளங்களையும் விளக்கும் பதிவாக இக்குறும்படம் அமைந்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த குறும்படமாக இருந்தபோதும், தற்போதைய யதார்த்தநிலையை பிரதிபலிப்பதாக அது அமைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற சமகால அரசியல் நிலைவரம் தொடர்பான கருத்துரை நடைபெற்றது. சிங்கள மேலாதிக்கவாதம் தமிழர்களை அழிப்பதற்காக எவ்வாறு பல்வேறு கருத்துவேறுபாடுகள் கொண்டவர்களையும் இணைத்து தந்திரமாக வேலை செய்கின்றது என்பதையும், இணைந்திருந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்த சிறிலங்கா அரசு, தற்போது வடக்கு மாகாணத்தை வேறு சிங்கள மாவட்டத்துடன் இணைக்கப்படவேண்டும் என்ற சிங்கள தேசத்தின் திட்டங்கள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாகி திலீபனின் நினைவு சுமந்த ”வேரில் விழுந்த மழை” எனும் இறுவெட்டு மீள் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, கொடியிறக்கத்துடன் மாலை 6.40 மணியளவில் நிறைவுபெற்றது.