வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள் வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக் கப்போகின்றனர் என்பதே இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரப் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. பிரசாரங்கள் அனல் பறக்க தொடங்கியுள்ளன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ அநுராதபுரத்தில் தனது பிரசாரப் பணியை ஆரம்பித்திருக்கின்றார்.
அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பில் தனது பிரசாரப் பணியை ஆரம்பித்திருக்கின்றார். அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் பிரசாரப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றது.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் பிரசாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் 35 நாட்களும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்களில் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் வெளிப்படுத்துவதுடன் வாக்காளர்களை கவரும் வகையில் உரையாற்றுவதற்கு முயற்சிப்பார்கள். அடுத்துவரும் 35 தினங்களும் பிரசார காலமாக மிகவும் பரபரப்பாக இருக்கப்போகின்றன. தற்போது மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ வுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. சுதந்திரக்கட்சியில் இருந்து ஒருசில உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் செல்வார்கள் என சில ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் சுதந்திரக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கோத்தபாய ராஜபக் ஷ வுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றனர். மிக முக்கியமாக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க அனுராதபுரத்தில் நடைபெற்ற கோத்தபாயவின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அதன்படி நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவுவரை தீவிர பிரசார செயற்பாடுகள் நாடுமுழுவதும் இடம்பெறும். எனவே வேட்பாளர்களுக்கு இடையிலான சொற்போரை அடுத்த ஒரு மாதத்துக்கு பார்க்க முடியும்.
இவ்வாறான பின்னணியில் வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்களுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின்றார்கள் என்பது ஒரு கேள்வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப்போகின்றனர் என்பதே இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
யுத்த காலத்தின்போது காணாமல்போனதாக கூறப்படுகின்றவர்களின் உறவினர்கள் இன்னும் ஒருவிதமான எதிர்பார்ப்புடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தமது உறவுகளுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் இந்த மக்கள் அதிகாரத் தரப்பிடம் கேள்வி எழுப்பி நிற்கின்றனர். உண்மையை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்து விட்ட நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு அதிகாரத்தரப்பினரால் பதிலளிக்க முடியாத நிலைமையே நீடிக்கிறது.
ஒவ்வொரு முறையும் தேசிய மட்டத் தேர்தல்கள் நடைபெறும் போதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் எவ்வாறு காணாமல்போனோரின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும். தேர்தலின் போதும் சில வாக்குறுதிகள் வேட்பாளர்களினால் மக்களுக்கு வழங்கப்படும். எனினும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஆட்சியாளர்கள் அந்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்ற நிலைமையை காண்கின்றோம். அதுதான் தொடர்ந்து கதையாகவுள்ளது.
அதனால்தான் இம்முறை ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக் ஷ, மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த காணாமல்போனோரின் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைப்பார்கள் என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இந்த பிரதான வேட்பாளர்கள் வழங்கப்போகும் பதில் என்ன? அவர்கள் முன்வைக்கப்போகும் தீர்வு என்ன? என்பதே இங்கு தீர்க்கமானதாக பார்க்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் இந்த காணாமல் போனோரின் உறவினர்கள் தமது பிள்ளைகளுக்கு
மற்றும் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி போராட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். 2009ஆம் ஆண்டிலிருந்தே இந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடனும் தவிப்புடனுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இருந்த அப்போதைய அரசாங்கம் இந்த காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கவில்லை. அதனால் காணாமல்போனோரின் உறவுகள் பாரிய விரக்தியுடனும் வேதனையுடனும் இருந்தனர். காணாமல் போனோர் என எவரும் இல்லை என்ற கருத்துக்களும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வந்தன.
ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன. 2010 ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு யுத்தம் இடம்பெற்றதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் நடத்திய விசாரணை அமர்வுகளின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல் போயுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி மன்றாடி கதறி அழுததை காணமுடிந்தது. அந்தளவிற்கு அந்த மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர். வடக்கு கிழக்கில் அதிகளவில் இந்த விசாரணை அமர்வுகளில் காணாமல் போனோரின் உறவினர்களே சாட்சியமளித்தனர்.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எப்படியிருப்பினும் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த அரசாங்கத்தினால் காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவிற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தகவல்களை வழங்கினர். சுமார் 19ஆயிரத்துக்கும் அதிகமான எழுத்துமூல முறைப்பாடுகள் காணாமல் போனோர் தொடர்பில் அந்த ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி ஜெனிவா மனித உரிமை பேரவையில் பல்வேறு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றில் இந்த காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வுகாணப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்துக்கொண்டு செல்கின்றதே தவிர அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் அதற்கு ஒரு விடிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு எத்தணிக்கவில்லை.
இந்த சூழலிலேயே 2015ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. நல்லாட்சி அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது.
ஆனாலும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதில் நல்லாட்சி அரசாங்கமும் அலட்சியப்போக்குடனேயே செயற்பட்டது. 2017ஆம் ஆண்டு காணாமல்போனார் குறித்து ஆராய்வதற்கான அலுவலகம் நியமிக்கப்பட்டு ஆணையாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர். அந்த அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. எனினும் இதுவரை காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ஒரு கட்டத்தில் நடந்து முடிந்த அனைத்து விடயங்களையும் மறந்து மன்னித்து செயற்படுவோம் என்ற கருத்துப்பட வடக்கில் உரையாற்றியிருந்தார். இவ்வாறான கருத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் காயப்படுத்துவதாகவே அமைந்தன. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்காமல் எவ்வாறு பழைய விடயங்களை மறக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பினர். எப்படியிருப்பினும் தற்போதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை.
காணாமல்போனோரின் உறவுகள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மத்தியில் பாரிய இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேதனைக்கு அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பு பதில் கூறியாகவேண்டும்.
விசேடமாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். அதிலிருந்து விலகியிருக்க முடியாது. ஆனால் அரசாங்கத்தை பொறுத்தவரையில்
இந்தப் பிரச்சினையில் கைவைக்க தயங்குவதாகவே தெரிகின்றது. காரணம் இந்த பிரச்சினையை கையாளும்போது அது கடும்போக்குவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் தீனிபோடுவதாக அமைந்துவிடும் என்று அரசாங்கம் கருதுவதாகவே தெரிகிறது. இதனால் அரசாங்கத்தின் இருப்புக்கு நெருக்கடி ஏற்படும் என்று அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் எண்ணலாம். ஆனால் அதற்காக காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை தொடர்ந்து கண்டுபிடிக்காமல் இருக்க முடியாது.
இந்த நிலையிலேயே தற்போது மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிகாரத்தை கைப்பற்ற தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள், தாம் ஜனாதிபதியாகியதும் என்ன செய்யப்போகிறோம் என்பதை வெளியிடுவதற்கு ஆரம்பித்துள்ளனர். விரைவில் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளியிடப்படும். அதன்படி பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக் ஷ, மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த காணாமல்போனோர் விவகாரத்துக்கு கூறப்போகும் பதில் என்ன? இவர்கள் மூவரும் தேர்தலுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். மிக முக்கியமாக காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்கொண்டு வருகின்ற இன்னல்களை கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.
அதாவது தாம் ஜனாதிபதியாகியவுடன் காணாமல் போனோரின் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை முன்வைப்போம் என்பது தொடர்பில் தெளிவான விடயத்தை மக்களின் முன் கூறவேண்டும். வேட்பாளர்கள் இந்த விடயத்தில் முன்வைக்கப்போகும் யோசனை அல்லது தீர்வுத்திட்டம் என்ன என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்தும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது உள்ளமை தொடர்பிலும் அவற்றை கையாள்வதற்கு அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் தயங்குகின்ற சூழலிலும் மக்கள் விரக்தி நிலையை அடைந்திருக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது காணாமல்போனோரின் உறவினர்கள் திருப்தியடையும் வகையிலான வேலைத்திட்டங்கள் அல்லது அணுகுமுறைகள் பிரதான வேட்பாளர்களினால் முன்வைக்கப்படவேண்டியது அவசியமாகிறது.
இந்த செயற்பாட்டில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றலாம் என்று யாரும் கருதக்கூடாது. மிக முக்கியமாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனதாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்ற பிரதான வேட்பாளர்கள் மூவரும் இந்த விடயம் தொடர்பில் தெளிவான பதிலை வழங்கவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் விடிவின்றி தொடர்ந்தும் எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் முழுநாட்டு மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமது அவதானத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பிரச்சினைகளுக்கான தீர்வையும் விரக்தியில் இருக்கின்ற மக்களுக்கான விடிவையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
உறவுகளை தொலைத்துவிட்டு அவர்களை கண்டுபிடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டு பிரஜைகள் என்பதை அனைத்து பிரதான வேட்பாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். தாம் வெற்றிபெற்ற பின்னர் எந்த அணுகுமுறையில் இந்த காணாமல்போனோர் விவகாரத்தை கையாள்வோம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் ஒரு தெளிவான வாக்குறுதியை மக்களுக்கு வழங்குவது முக்கியமாகும். அதில் மக்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.
தொடர்ந்து இந்தப் பிரச்சினையை இழுத்தடித்துக்கொண்டு அல்லது அலட்சியப்படுத்திக்கொண்டு பயணிக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே பிரதான வேட்பாளர்கள் மூவருக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. தாம் ஜனாதிபதியானால் காணாமல் போனோர் விவகாரத்தில் எவ்வாறான அனுகுமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்போம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் மூவரும் தெளிவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூறவேண்டியது அவசியமாகின்றது.
ரொபட் அன்டனி