தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்று ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு.
இந்நிலையில் சுரேஷ் காமாட்சி இன்று (அக்டோபர் 12) தனது ட்விட்டர் பதிவில் “தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அராஜகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
C form யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே திரையரங்குகளை நடத்த முடியும் என்று அரசு அறிவித்தால் மட்டுமே தமிழ்த் திரையுலகைக் காப்பாற்ற முடியும். விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். நான்கு தமிழக முதல்வர்களையும் ஒரு எதிர்க்கட்சி தலைவரையும் தந்த தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.