மத்தியஸ்தம் செய்ய வரும் இம்ரான் கான்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை தீர்ப்பதற்கு மத்தியஸ்தத்தில் ஈடுபட உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஈரான் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் கூறும்போது, “ நாங்கள் சவுதி அரேபியாவுடன் எது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். சவுதி அரேபியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் சவுதியுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை தயாராக இருக்கிறோம். எங்கள் கதவுகள் மத்தியஸ்தத்திற்காக திறந்தே உள்ளன. நாங்கள் எந்த மத்தியஸ்தரையும் நிராக்கரிக்கவில்லை” என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சனிக்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் இம்ரான் கான், ஈரான் – சவுதி இடையே நாடுகளுக்கு இடையே பதற்றத்தை குறைக்க மத்தியஸ்ததில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சவுதி செல்கிறார்.

சவுதி – ஈரான் இடையே நிலவும் மோதலை தவிர்க்க பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் ஈரான் – சவுதி இடையே பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் – சவுதி இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தன்னை பேச்சுவார்த்தையில் ஈடுபட கூறியதாக இம்ரான் கான் முன்னரே கூறி இருந்தார்.

ஈரான் – சவுதி மோதல்

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.