‘நான் அரசியல் சாயமற்றவன். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மார்க்கமே எனது பணி” என்று தெரிவித்த பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, என் மீது அரசியல் சாயம் பூசப்படுகிறது என்றார்.
பொறுப்புமிக்க ஆட்சிக்கான குடிமக்கள் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த, “தேர்தலில் எவ்வாறு மக்கள் பங்கேற்பது” எனும் தொனிப்பொருளிலான மாநாடு, கொழும்பு இலங்கை மன்றத்தில், நேற்று(10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
நாட்டில் அதிகமான இளைஞர்கள் இருக்கும்போது வயதானவர்களே வேட்பாளராகின்றனர். தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர் என்றார்.
ஒரு வாக்காளன் இரண்டு நிமிடங்களைச் செலவழித்து அழிக்கும் வாக்கு, ஐந்து வருடங்களுக்கு ஒரு வேட்பாளனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எனக்கு தற்போது 72 வயதாகிறது. இதுவரை நாட்டை ஆண்டவர்களை நான் அவதானித்தே வந்துள்ளேன். அவர்கள் நாட்டுக்காக எதனையுமே செய்யவில்லை. வாக்குக் கேட்டு வரும்போது மட்டும் பசப்பு வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்று பின்னர் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்” என்றார்.
“முப்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நான் சந்தித்தேன். ஒரு தடவை மட்டுமே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மறுமுறை அவர் போட்டியிடவில்லை. தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று அவரிடம் நான் கேட்டபோது, அடுத்தத் தலைமுறைக்குத் தேவையான பணத்தை, இந்த ஐந்து வருடங்களில் தேடிவிட்டேன். இனி தேர்தலில் போட்டியிட வேண்டியத் தேவை இல்லை என்றார். இதுவே அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்று மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal