வடக்கு, கிழக்கில் பௌத்த பேரினவாத நடவடிக்கைகள் முன்னெடுத்து தமிழர் தாயக கோட்பாடுகளை சிதைப்பதற்கான நடவடிக்கைகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தமை வரலாறாக உள்ளது. விடுதலைப்புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.
ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முன்னைய ஆட்சிக் காலத்தில் பௌத்த பேரினவாத செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து வருகின்றமையும் அதற்கு தென்பகுதி இனவாத கட்சிகளும் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமையும் பெரும் கவலையளிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் இளைஞர், யுவதிகளின் தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் வகையில் ஒருபுறம் போதைப் பொருள் கலாசாரமும் மதுபாவனை கலாசாரமும் உருவாக்கப்பட்டிருந்தன. மறுபுறம் தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையிலும் வடக்கு, கிழக்கு தாயக கோட்பாடுகளை சிதைக்கும் முகமாகவும் திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்த பேரினவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதேபோன்றே பௌத்த மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டன. திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்த பகுதியில் விகாரை அமைப்பதற்கும் முயற்சிக்கப்பட்டது.
இவ்வாறு பல இடங்களில் பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை நிறுவும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அண்மைய நிகழ்வாகவே முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பௌத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த தேரர்களின் தலைமையில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருந்தது.
இந்த விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அடாத்தான நிகழ்வு தொடர்பில் கடும் கண்டனங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆனால் இன்றுவரை நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதேபோன்றே நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த தவறிய பொலிஸார் மீதும் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து நீராவியடி பிள்ளையார் ஆலய விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்த கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீதும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து செயற்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக இரண்டுவாரங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. குறித்த பௌத்த தேரரின் இறுதிக்கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸ் அதிகாரிகள் அதனை செய்யாமல் மௌனம் காத்தனர். இந்த செயற்பாடுகளின் போது அங்கு சமுகமளித்திருந்த சட்டத்தரணிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர். அங்கு குழுமியிருந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களை தடுக்கத் தவறிவிட்டனர். இது இந்து மக்களின் உரிமையினை மீறும் செயல். இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் சபையில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி.யும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்த அளுத்கமகே சபையில் தெரிவித்த விடயங்களானது பௌத்த பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் எந்தளவிற்கு நாட்டில் காலூன்றி உள்ளன என்பதை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
இங்கு கருத்து தெரிவித்த ஆனந்த அளுத்கமகே எம்.பி. பெளத்த சிங்கள நாட்டில் தேரர்களின் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால் நாட்டில் எந்தப்பிரச்சினையும் ஏற்படாது. நீராவியடி பிள்ளையார் கோவில் விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள பௌத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் தமிழர்களை சிங்களவர்கள் பாதுகாத்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு இருக்கலாம். நீதிமன்றத் தீர்ப்பு பெரும்பாலும் பொலிஸாரின் தகவல்களுக்கு அமையவே வழங்கப்படும். பொலிஸார் கொண்டுவரும் தகவல்கள் சரியாக இருக்கும் என்று அர்த்தமில்லை. இந்த நாடு சிங்கள பௌத்த நாடு. இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இவரது கருத்தானது சிங்கள பேரினவாத தலைவர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் வகையிலேயே தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு அமைந்துள்ளது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவமதிக்கப்பட்ட விடயத்தில் கூட இன்னமும் நீதி வழங்கப்படாமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல. இந்த விடயம் தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் இதற்கான விசாரணை இடம்பெற்றிருந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் இன முரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்ப்பை கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
இன முரண்பாடு ஏற்படும் என்பதற்காக பௌத்த பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் அனுமதி அளித்துள்ளமை இதன்மூலம் நிரூபணமாகின்றது. எனவே இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கமானது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருகின்ற போதிலும் இன்னமும் இந்த விடயம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறான நிலைமை தொடர்வதானது தமிழ் மக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்துவிடும்.
நாட்டில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக பௌத்தர்களே வாழாத பகுதிகளில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கவேண்டும் என்று கோருவது எந்தவகையிலும் நியாயபூர்வமான நடவடிக்கையல்ல. எனவே செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்ற அடாத்தான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
நன்றி-வீரகேசரி