சிட்னியில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த விவகாரத்தில் கணவரின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி நகரின் Rouse Hill பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே கடந்த 2013 ஆம் ஆண்டு குல்விந்தர் சிங் தமது மனைவி பர்விந்தர் கவுர் என்பவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்று குல்விந்தர் சிங் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்விந்தர் கவுரிடம் இருக்கும் பணத்திற்காகவே குல்விந்தர் அவரை கொலை செய்துள்ளதாக முன்னெடுக்கப்பட்ட வாதம் உண்மைக்கு புறம்பானது என கூறிய குல்விந்தர் தரப்பு, சம்பவத்தின்போது பர்விந்தரின் வங்கிக் கணக்கில் 52 பவுண்டுகள் மட்டுமே சேமிப்பாக இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பர்விந்தர் கவுர் தம்மைவிட்டு பிரிந்து செல்வதாகவும், இனிமுதல் தம்மால் எந்த நிதியுதவியும் மேற்கொள்ள முடியாது என அவர் மிரட்டியதாலையே குல்விந்தர் ஆத்திரம் கொண்டு அவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்தது.

சம்பவத்தன்று 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கவுர், பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நேற்று நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிங், தமது மனைவி தம்மைத் தாமே நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மனம் குழம்பிய நிலையில் இருந்ததாகவும், தம்மை காயப்படுத்திக் கொள்ளும் மன நிலையிலேயே அவர் காணப்பட்டதாகவும் சிங் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டுள்ளனர். ஆனால் கவுரின் தீக்காயங்கள் தொடர்பில் சாட்சியம் அளித்துள்ள நிபுணர் Peter Maitz, கவுரின் மீதிருந்த காயங்களானது அவர் மீது திராவகத்தை ஊற்றியிருக்கலாம் அல்லது யாரேனும் ஒருவர் கவுர் மீது திராவகத்தை வீசியிருக்கலாம் என்றே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.