எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் இப்போது சூடு பிடித்திருக்கின்றது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கிக்காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்றனர். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துகள் இப்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எந்தளவுக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டி இருக்கின்றது.
பல்வேறு புறக்கணிப்புகளின் விளைவாக எமது நாட்டில் யுத்தம் மேலெழுந்தது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கொடிய யுத்தம் நிலவியதன் காரணமாக நாடு பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் யுத்தம் ஏதுவானது. யுத்தத்தினால் ஏற்பட்ட பல்வேறு இழப்புகளுக்கும் மத்தியில் சர்வதேசத்தின் பார்வையும் இலங்கையின் மீது ஆழமாகப் பதிந்திருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளதாக விமர்சனங்கள் இருந்து வருவதும் நீங்கள் அறிந்த விடயமேயாகும்.
இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்கள் உரிமைகளுக்காக பல சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பி இருக்கின்றார்கள். எனினும் அள்ளிக் கொடுக்காவிட்டாலும்கூட கிள்ளிக் கொடுக்கவும் தயக்கம் காட்டிய ஒரு நிலையிலேயே ஆட்சியாளர்கள் இருந்து வந்தனர். தமிழர்களுக்கு சில வேளைகளில் சிற்சில உரிமைகளை வழங்க சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் முனைந்தபோதிலும் இனவாதிகள் இத்தகைய நடவடிக்கைகளை முற்றாகக்கண்டித்த ஒரு போக்கே இருந்து வந்தது. தமிழர்களுக்கான உரிமைகளை மையப்படுத்தி 1957 இல் பண்டா–செல்வா உடன்படிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் பௌத்த பிக்குகள் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.
1965 டட்லி–செல்வா உடன்படிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. 1985 திம்பு பேச்சுவார்த்தை ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழ் மக்களின் எழுச்சிக்கு எந்தளவு வலு சேர்த்திருக்கின்றார் என்பது தொடர்பில் இன்னும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிகாரப் பரவலுக்கு அடிப்படையாக அரசியலமைப்பிற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீல.சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி. மற்றும் விடுதலைப்புலிகள் போன்ற தரப்பினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமாகும். தமிழ் மக்களுக்கு சுயாதீன அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எரித்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான தென்பகுதி இணக்கப்பாட்டைக் காணும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினை ஏற்படுத்தி இருந்தார். எனினும் இது ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கையாகவே அமைந்தது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒரு காத்திரமான முன்வைப்பினை வைக்கவில்லை என்கிற கருத்து பலரிடையே நிலவி வருகின்றது.
திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்பட்டார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைப் பிளவுபடுத்தாமல் இருப்போம் என்ற முன்மாதிரியை முன்வைத்தார். எனினும் இதனை சிலர் எதிர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அறிவில்லாது எதிர்த்தவர்களை சந்திரிகா கண்டித்துப் பேசிஇருந்தார். வடக்கிற்கு அதிகாரங்களைக் கோருவது நியாயமானதே என்ற நிலைப்பாட்டினை அவர் கொண்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியது. இப்புதிய யாப்பின் ஊடாக சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டி-ருந்தனர். எனினும் புதிய யாப்பு இனவாதிகளின் எதிர்ப்பின் காரணமாகச் சாத்தியப் படாத நிலையில் சமஷ்டி முறை குறித்தும் விசனங்கள் வெளியிடப்பட்டன. சமஷ்டி முறை சாத்தியமாகுமிடத்து அது தனி ஈழத்திற்கு வலுசேர்ப்பதாக அமையும் என்றும் புரளிகள் கிளப்பப்பட்டன. தமிழ் மக்களுக்கு எவ்விதமான உரிமையும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இனவாதிகள் எப்போதும் குறியாகவே இருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து விடப்போகின்றது என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். சர்வதேசமும் இது தொடர்பில் வலியுறுத்தி இருந்தது. எனினும் யுத்த வெற்றியை கொண்டாடுவதில் காண்பித்த கரிசனை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் காணப்பிக்கப்பட்டதா? என்று பலரின் நியாயமான கேள்வியும் எதிரொலிக்கின்றது.
இதேவேளை சந்திரிக்கா அவரது ஆட்சிக்காலத்தில் முன்வைத்த தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசியல் அவதானிகள் பலரும் வரவேற்றுப் பேசி இருந்தனர். இந்தியாவின் முக்கிய அதிகாரி ஒருவரும் இத்தீர்வுத் திட்டத்தை வரவேற்றும் பேசி இருந்தமையும் நோக்கத்தக்க விடயமாக உள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் 13 ஐயும் விஞ்சும் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் 13 ஐயே முழுமையாக அமுல்படுத்தாத அரசாங்கம் 13 ஐயும் விஞ்சிய தீர்வு தொடர்பில் கவனம் செலுத்துமா? என்பது கேள்விக்குறியேயாகும். இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் மத்தியில் இனப்பிரச்சினை இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்கிற நிலைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில இருந்து வருகின்றார். இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இருப்பதாகக் கூறுவதே அப்பட்டமான பொய்யாகும். நாடளாவிய ரீதியில் மூவின சமூகத்தினரும் ஒற்றுமையுடனேயே இருக்கின்றார்கள். கூட்டமைப்பினர் தங்களது கைகளில் அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாகச் சித்திரிக்கின்றார்கள் என்று உதய கம்மன்பில வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.
உதய கம்மன்பிலவின் நிலைப்பாடு எந்தளவுக்கு நியாயமானது என்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
நாட்டில் இனப்பிரச்சினை உண்டென்ற பெரும்பாலானோரின் ஏற்றுக்கொள்ளலுக்கும் மத்தியில் இப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆட்சியாளர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர் களின் வலிகளைப் புரிந்துகொண்டு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவும் வேண்டும். எனினும் இது சாத்தியமானதாக இல்லை என்பது கசப்பான உண்மையாகவும் வருந்தத்தக்க ஒரு விடயமாகவும் உள்ளது. இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இந்த இழுத்தடிப்புகள் தொடரும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல்வாதிகள் குளிர் காய்வார்கள் என்றும் தெரியவில்லை.
இதற்கிடையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற பாணியில் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நெருங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரதமரின் கூற்றின்படி இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமாகுமா? ஐ.தே.க இதனை நிறைவேற்ற எந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்படப் போகின்றது? என்பவற்றையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இது ஜனாதிபதி தேர்தல் காலமாகும். தேர்தலை வெற்றி கொள்ளும் முனைப்பில் அரசியல் கட்சிகள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. ஐ.தே.க.வின் வேட்பாளர் தெரிவில் இருந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சஜித் பிரேமதாச ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் பலவும் சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரண ஆதரவினை வழங்கப்போவதாக தெரிவித்திருக்கின்றன. எவ்வாறெனினும் தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சிறுபான்மையினரின் வாக்குகளின் ஆதிக்கத்தினை தெளிவாகவே புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதேவேளை தேர்தலில் சஜித் மற்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தோடு தேசிய மக்கள் சக்தி இம்முறைத் தேர்தலில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஒரு பலம்மிக்க சக்தியாக உருவெடுக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
தேர்தல் என்றால் வாக்குறுதிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஜனாதிபதி தேர்தலிலும் நாம் இதனை தெளிவாகவே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வேட்பாளர்கள் வாக்குறுதிகள் பலவற்றையும் அள்ளி வழங்குகின்றனர். எத்தனை வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறப்போகின்றன? எத்தனை வாக்குறுதிகள் காற்றுடன் கலந்து விடப் போகின்றன? என்று தெரியவில்லை. நாட்டில் இனப்பிரச்சினை மேலோங்கிக் காணப்படுகின்ற நிலையில் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி முறையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தி இயக்கம் அண்மையில் யாழில் தெரிவித்திருந்தது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதனை தேசிய மக்கள் சக்தி பூரணமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைத்து சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் தீர்வினைப் பெற்றுத்தர தாம் உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி மேலும் வலியுறுத்தி இருக்கின்றது.
இதேவேளை பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்கு தான் உத்தேசித்திருப்பதாக ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றார். மாகாண சபைகளுக்கு முதன்மையான அதிகாரம் வழங்கப்படாத ஒரு நிலை இங்கு காணப்படுகின்றது. இதனால் பல்வேறு பிரச்சினைகளும் மேலோங்கி வருகின்றன.
எனவே மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி சக்தியுள்ளதாக மாற்றியமைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது என்றும் சஜித் தெரிவித்திருந்தார். அரசியல் தலைமைகள் 13 பிளஸ் வழங்குவதாக வெளிநாட்டிலும் 13 மைனஸ் தொடர்பாக உள்நாட்டிலும் பேசி வருவதாகக் கூறும் சஜித் இதனை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். இடத்துக்கு இடம் மாறுபட்ட கதைகளைக்கூறி மக்களை ஏமாற்றி அரசியல் தலைமைகள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவது பிழையான செயற்பாடு என்றும் சஜித் தெரிவித்திருக்கின்றார். தான் சொல்வதனை செய்பவர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தனது ஆட்சியில் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அவர் பாதிப்பற்ற தீர்வினை வடக்கு மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றார். உடனடியாக வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கதாகும். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அவர்களும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை விரைவில் தெளிவுபடுத்துவர்.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே மேலெழுந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்தியா உரிய அழுத்தங்களை இலங்கைக்கு வழங்கி இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்தியா பார்வையாளராக இருந்தே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்த நிலையில் இந்தியா முழுமையான பங்களிப்பினைச் செய்து தீர்வுகாண ஒத்துழைக்க வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம் பெற்ற எழுக தமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் வகிபாகத்தின் அவசியத்தை தெளிவாகவே வலியுறுத்தி இருந்தார். இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் விக்கி கேட்டுக் கொண்டிருந்தார்.
இனப்பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் செயற்படுதல் வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் அழுத்தமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு வலுச் சேர்க்கும். தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாற வேண்டிய நிலையே ஏற்படும்.
துரைசாமி நடராஜா