தேர்தலில் வெற்றி பெற்று தான் ஜனாதிபதியாகத் தெரிவானால் எந்த கட்சியையும் சாராது சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன் என்று தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு – மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் ஓய்வு பெற்ற போது நாட்டுக்காக சேவை செய்திருக்கின்றேன் என்ற மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றிருந்தாலும் , அதன் பின்னர் நாட்டின் நிலைவரத்தை உணர்ந்து இன்னும் இந்நாட்டு செய்ய வேண்டிய சேவைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்தேன்.
தற்போது தேசிய மக்கள் இயக்கத்தில் சுமார் 30 சிவில் சமூக அமைப்புக்கள் எம்முடன் கைகோர்த்திருக்கின்றன. ‘ மின்குமிழ் ‘ சின்னத்திலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்த தேரதலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றியாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும். இதன்போது எமது வேலைத்திட்டங்களை குறித்து மக்களால் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.