3 ஆய்வாளர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

ஸ்டாக்ஹோம்

உடல் செல், ஆக்ஸிஜன் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆய்வாளர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளருக்கும் என மொத்தம் 3 பேருக்கும் சேர்த்து 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் இந்த ஆண்டுக்குரிய 110-வது ஆண்டு பரிசுக்குரியவர்களை அறிவித்தனர். அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் காலின், கிரேக் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ராட்கிளிஃப் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆய்வாளர் காலின் அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் ஹக்ஸ் மருத்துவக் கல்விந நிறுவனத்தில் காலின் பணியாற்றி வருகிறார். ஜான் ஹோப்கின்ஸ் செல் பொறியியல் நிறுவனத்தில் நுரையீரல் தொடர்பான ஆய்வு திட்டத்தில் செமன்சா இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் கல்வி மையத்தில் மருத்துவ ஆய்வு பிரிவு இயக்குநராக ராட்கிளிஃப் இருந்து வருகிறார்.டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு முறைப்படி நோபல் பரிசு வழங்கப்படும்.

நூற்றாண்டுகளாக ஆக்ஸிஜனின் அடிப்படை முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டோம், ஆனால், மனித உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜன் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றமடைகிறது என்பது நீண்டகாலமாக யாருக்கும் தெரியாத விஷயம். எவ்வாறு ஆக்ஸிஜன் சப்ளைக்கு ஏற்றார்போல் செல்கள் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன என்ற ஆய்வு மேற்கொண்ட 3 ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூன்றுபேரும், மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவர்களின் ஆய்வுகள் எதிர்காலத்தில் புற்றுநோய், பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். இந்த மூன்று ஆய்வாளர்களும் 9.18 லட்சம் டாலர் (ரூ.6.52 கோடி) பரிசுகளை சரிசமமாகப் பிரித்துக்கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை இயற்பியலுக்கும், நாளை மறுநாள் வேதியியலுக்கும் நோபல் பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.