அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சீனப் பிரதமர் சென்னைக்கு வரவிருக்கிறார். சீனப் புரட்சியில் தனது மாணவப் பருவத்திலிருந்தே பங்கேற்று அந்நாட்டின் முதல் பிரதமரான சூ என் லாய் 1960-ல் சென்னைக்கு வந்திருந்தார். இப்போது இருக்கக்கூடிய ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகர பள்ளிக் குழந்தைகளெல்லாம் பேருந்து மூலம் அந்த மைதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாண்டுங் மாநாட்டுக்குப் பிறகு, பஞ்சசீலக் கொள்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு ‘இந்தி – சீனி பாய் பாய்’ என்று சொன்ன காலம் அது.
மாமல்லபுரச் சந்திப்பு ஏன்?
பிரதமர் மோடி தமிழகத்தை மறக்கவில்லை என்பதனால்தான் இச்சந்திப்புக்கு சென்னையைத் தேர்ந்தெடுத்தார் என்பதில் உண்மை எதுவுமில்லை. வழக்கமாக, வெளிநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு டெல்லியில் மட்டுமே நடக்கும். பின்னர், அவர்கள் விரும்பினால் மற்ற நகரங்களுக்கும் செல்லலாம். அங்கெல்லாம் உரிய மரியாதை அளிக்கப்படும். ஆனால், இம்முறை சீனப் பிரதமர் விஜயத்துக்கு மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், ஒன்று மட்டுமே. சீன நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்தாலும் டெல்லியில் திபெத்தியர்களும், தலாய் லாமாவின் குழுவினரும் அங்கு மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்.
இந்திய அரசு திபெத்திலிருந்து வந்தவர்களுக்கு வாழ்விடம் அளித்திருப்பது சீனாவுக்குப் பிடிக்காது. கருப்புக் கொடி போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கென்றே 2,000 கிமீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என்றே நான் நம்புகிறேன். பல்லவர் கால நகரத்தைப் பார்த்தது போலிருக்கும். பகைமைக் காட்சிகளை மறைத்தது போலிருக்கும் என்றுதான் இந்த ஏற்பாடு.
தமிழ்நாட்டுக்கே உரிய கட்அவுட் கலாச்சாரங்களை மறந்துவிடுவோமா? மீனம்பாக்கத்திலிருந்து மாமல்லபுரம் வரை விளம்பரத் தட்டிகள் வைப்பதற்கு அரசாங்கம் முடிவுசெய்கிறது. ஆனால், அதற்கான ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததுதான் இன்றைக்கு கேள்விக்குறி. ஒரு விளம்பரத் தட்டி வைப்பது தடை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்திருக்கும்.
ஆனால், தடைசெய்யப்பட்ட ஒரு சமாச்சாரத்தில் அரசுக்கு மட்டும் சலுகை காட்டலாமா என்பதே இன்றைக்கு மக்கள் முன்னால் விவாதமாகியுள்ளது. அரசு வேறு… மக்கள் வேறு என்று நீதிமன்றத்தால் பார்க்க முடியாது. அவை வேறு வேறு என்றிருந்தால் மனுநீதி சோழனைப் பற்றியும் கோவலனைக் கொன்றதற்குத் தன்னையே பலியிட்டுக்கொண்ட பாண்டியனைப் பற்றியும் நாம் படித்திருக்க மாட்டோம்.
விளம்பரத் தட்டி அவசியமா?
விளம்பரத் தட்டிகள் வைப்பது வெளிநாட்டுத் தலைவர்களுக்குச் செய்யும் மரியாதை என்று அரசு கூறியுள்ளது உண்மையா? சூ என் லாய் வருகை தந்ததிலிருந்து (1960) நடைபெற்றவற்றைப் பார்ப்போமா? நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (1960) சோவியத் குடியரசுத் தலைவர் வோராஷிலோவ் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது அகில இந்திய வானொலி தவிர, வேறு செய்தி ஊடகங்கள் அரசின் வசம் இல்லை. புது விதமாக, சிறிய ஆகாய விமானம் மூலம் துண்டுப் பிரசுரங்களை சென்னையிலுள்ள மைதானங்களில் வீசிச் சென்றனர். அதிலிருந்து ஒரு துண்டு நோட்டீஸ் கிடைக்காதா என்று ஓடிச் சென்ற காலம் அது. ஆனால், நகரத்தில் எவ்வித விளம்பரத் தட்டிகளும் வைக்கப்படவில்லை.
அதற்கு அடுத்த வருடம் எலிசபெத் ராணி சென்னைக்கு விஜயம் செய்தார். அவருடன் சேர்ந்து பண்டித ஜவாஹர்லால் நேருவும் ஒரு திறந்த ஜீப்பில் சைதாப்பேட்டை முதல் ராஜாஜி மண்டபம் வரை ஒன்றாகப் பயணித்தார். அண்ணா சாலை இருபக்கமும் கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கைகாட்டிச் சென்றார் மகாராணியார். அன்றைக்கு எனக்கு அதிர்ச்சியைத் தந்த சம்பவம் ஒன்று உண்டு. முனியப்பிள்ளை சத்திரத்திலிருந்து (உஸ்மான் சாலை) டாக்டர் தாமஸ் நகர் (தேனாம்பேட்டை) வரை இருந்த குடிசைப் பகுதிகளை மறைக்கும் வண்ணம் பத்தடி உயரமுள்ள மூங்கில் தட்டிகளைக் கட்டிவைத்திருந்தது தமிழக அரசு. நமது குடிசைவாழ் மக்களை ராணியார் பார்த்தால் முகத்தைச் சுளிப்பாரா? ஏழ்மையை மூங்கில்தட்டியால் மறைத்துவிட முடியுமா?
1970-ல் அமெரிக்கப் படைகளை விரட்டிவிட்டு, தெற்கு வியட்நாமில் புரட்சிகர அரசாங்கம் செயல்பட ஆரம்பித்தது. அந்த அரசின் வெளியுறவு அமைச்சரான குயன் தி பின் ஒரு போராளி. நேச நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக அவர் பயணித்தார். அவர் சென்னைக்கு வந்தபோது, அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று, அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அயலுறவுச் சமாச்சாரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் வரவேற்பளிக்க மறுத்துவிட்டார். பின்னர், மக்கள் சார்பாக அந்தப் புரட்சித் தலைவிக்கு ராஜாஜி மண்டபம் எதிரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தனை வரவேற்புகளிலும் காணாமல்போன விஷயம் விளம்பரத் தட்டிகளே.
விமானங்களுக்கு இடையூறு
1971-க்குப் பிறகு விளம்பர சுவரொட்டிகள் அதிக அளவில் தோன்ற ஆரம்பித்தன. அதையொட்டி பெரிய விளம்பர போர்டுகள் நகர் முழுதும் தோன்ற ஆரம்பித்தன. பிரகாசமான விளக்குகளுடன் மாபெரும் விளம்பரப் பலகைகள் கத்திப்பாரா முதல் பல்லாவரம் கன்டோன்மென்ட் வரை நிறுவப்பட்டிருப்பதைக் கண்டு சில விமானிகள், விமானங்களை அதையொட்டியுள்ள ஓடுபாதையில் தரையிறக்க முடியவில்லை என்று புகார் அளித்ததன் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. தென் தமிழகத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையும் விமான ஓடுபாதையும் அருகருகில் இருப்பதால் விமான விபத்து நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அப்பகுதியில் விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது என்றும் உத்தரவிடக் கோரியது.
அதை விசாரித்த நான், கத்திப்பாரா முதல் பல்லாவரம் வரை எந்த விளம்பரப் பலகையும் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டதுடன், அதற்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்க வேண்டுமென்றும் தமிழக மின்வாரியத்துக்கு உத்தரவிட்டேன். மேலும், டீசல் இன்ஜினை வைத்து விளக்குகளை எரிய விடாமல் தடுக்கக்கோரி காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டது. எங்களது உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. ஆனால், இன்று மீனம்பாக்கம் முதல் விளம்பரத் தட்டி வைக்கக்கோரும் தமிழக அரசு இவ்வுத்தரவை மீறாதா? நீதிபதிகள் அனுமதி அளிக்கும் உத்தரவில் இதைக் கணக்கில் கொண்டார்களா?
அரசுக்கு விதிவிலக்கு இல்லை
அரசியல் கட்சிகள் விளம்பரத் தட்டிகளை வைக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், அரசுக்கு இத்தடை பொருந்தாது என்று கூறுவது விசித்திரமே. சென்னை நகரத்தின் இதர பகுதிகளில் உள்ள விளம்பரத் தட்டிகளை நீக்குமாறு உத்தரவிட்டபோது, அவ்வுத்தரவின் கீழ் அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் வைத்த விளம்பரப் பலகைகளும் அடங்கும். ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற விளம்பரப் பலகையை யாரும் மறந்திருக்க முடியாது. அப்பலகையை நிறுவியது அரசின் சுகாதாரத் துறை. இதுபோல் அரசு வைத்த பல விளம்பரப் பலகைகளையும் நீக்க உத்தரவிட்டோம். பொதுமக்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் எதுவாயினும், அதிலிருந்து அரசுக்கு எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பதே உண்மை.
வண்டிகளைச் சாலை ஓரத்தில் நிறுத்துவதைத் தடுக்கும் ‘நோ பார்க்கிங்’ பலகை வைத்திருக்கும் இடங்களில் அரசு வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி உண்டா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறிய பிறகு, அதில் அரசுக்கு விதிவிலக்கு என்பது சமனற்ற நிலையை உருவாக்கும். மீனம்பாக்கம் முதல் மாமல்லபுரம் வரை விதிப்படி விளம்பரப் பலகைகளை வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், மாமல்லபுரம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது, அங்கே எந்தவிதமான விளம்பரத் தட்டிகளையும் யாருமே வைக்க முடியாது என்பதை அறிவார்களா? தமிழகத்தில் தொடங்கி மேற்கு வங்கம் வரை பரவியுள்ள கட்அவுட் கலாச்சாரம், அதிர்ஷ்டவசமாக இந்தியாவின் பல மாநிலங்களில் காண முடியாது.
வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பதற்கென்று எந்தவித இலக்கணமும் எழுத்துரீதியாகக் கிடையாது. அயர்லாந்து குடியரசுத் தலைவர் வந்தபோது, அவர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிப்பதற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து சமையல் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய பாரம்பரியத்தைத் தவிர, வேறு எந்தப் பாரம்பரியத்தையும் நமது அரசு கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. சீனப் பிரதமர் ஜி ஜின் பிங் விஜயத்துக்கு நமது வரவேற்பு உண்டு. ஆனால், அதைக் கொண்டாடும் விதமாக சுபஸ்ரீக்களின் உடல்களின் மேல் அவர்களது வாகனங்களை ஓட்டிச் செல்லாதீர்கள்!
கே.சந்துரு, மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்