கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
2008-2009 இல் கடற்படையை சேர்ந்த குழுவொன்றினால் கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என கருதப்படும் டீகேபி தசநாயக்காவிற்கே சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதிக்கு நாளை அனுப்பிவைக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை இந்த சம்பவம் குறித்த சாட்சிகளிற்கு அச்சமூட்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அதிகாரி தொடர்ந்தும் கடற்படையில் பதவி வகிப்பது கடும் சாட்சிகளிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிற்கு பதவி உயர்வை வழங்குவது பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் என சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் முன்வைத்த பரிந்துரைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தியுள்ளமை அலுவலகத்தின் பணிகளை கடினமாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழப்பார்கள் எனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் விவகாரங்களை அரசாங்கம் முக்கியமானதாக கருதவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கருதக்கூடும் என தெரிவித்துள்ள அவர் கடற்படையினரால் காணாமல்ஆக்கப்பட்ட விவகாரமே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவகாரத்தில் மிகவும் பிரச்சினைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களிற்கு பதவி உயர்வு வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.