பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி தமயந்தி சுபாஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. சந்திரசேகரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை விக்டோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கபிலன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு, திரு. கொற்றவன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு இதேநாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர்அவர்களின் திருவுருவப்படத்திற்கு, திருமதி. தர்சிகா கோகிலன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து 25 – 08 – 2002 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த மூத்த தளபதி கேணல் ராயு அவர்களின், திருவுருவப் படத்திற்கு திரு. முகுந்தன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மூன்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அகவணக்கம் தலைமையுரை என்பவற்றைத்தொடர்ந்து, தியாகதீபம் திலீபனின் நினைவுகளையும் தியாகங்களையும் சித்தரிக்கின்ற காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது.
அடுத்த நிகழ்வாக அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான சார்ல்ஸ் நிர்மலநாதன் அவர்கள், தியாகி திலீபன் நினைவுநாள் தொடர்பாக வழங்கிய சிறு கருத்துப்பகிர்வு இடம்பெற்றது.
தொடர்ந்து சிறப்புநிகழ்வாக “தியாகதீபம் கலைநிகழ்வு” நடைபெற்றது. மெல்பேண் நகரின் இளம்கலைஞர்கள் இணைந்து வழங்கிய இந்த இசைநிகழ்வில், தியாகி திலீபன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயு நினைவான பாடல்கள் உள்ளிட்ட பல தாயகப்பாடல்களும் பாடகர்களால் இனிதாகப் பாடப்பட்டன.
“தியாகதீபம் கலைநிகழ்வு” மிகவும் உணர்வெழுச்சியுடன் அரங்கேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இசைநிகழ்வில் பங்கெடுத்திருந்த பாடகர்கள் இசைக் கலைஞர்கள் அனைவரையும் மூத்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. மகேந்திரன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.
அடுத்து இரவு 8.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கலுடன் தியாகதீபம் திலீபன் நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” இனிதே நிறைவேறியது.