வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு காவல் துறை தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமுகமளிக்குமாறு காவல் துறை தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலேயே அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் கடந்த 2 மாதமாக விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் குறித்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித் தருமாறு காவல் துறை தலைமையகத்தைக் கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும் விசாரணை திகதியில் மாற்றம் செய்யலாம் ஆனால் விசாரணைக்குக் கொழும்பு தலைமையகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த ஊடகவியலாளர் தனது சட்டத்தரணியுடன் சென்று இன்றைய தினம் விசாரணையை எதிர்கொண்டார்.
Eelamurasu Australia Online News Portal