இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
வன்முறை காரணமாக இராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
பாக்தாத்தின் மத்திய சதுக்கத்தை நோக்கி ஆயிரம் பேர் கலந்துகொண்ட அரசுக்கு எதிரான பேரணியில் காவல் துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனைத் தொடர்ந்து வன்முறை எற்பட்டது.
இந்நிலையில் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் 31 பேர் போராட்டக்காரர்கள். 3 பேர் பாதுகாப்பு அதிகாரிகள். சுமார் 1518 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் இராக்கில் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் தங்கள் படையை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதில் கடந்த வருடம் இராக் அரசு அமெரிக்கா உதவியுடன் ஐஎஸ்ஸுக்கு எதிரான போர் வெற்றி அடைந்ததாக அறிவித்தது. இந்த நிலையில் இராக் அரசுக்கு எதிரான போராட்டம் சமீப ஆண்டுகளில் வலுப்பெற்று வருகிறது.