ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியாகியதும் தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு இடமளித்து, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற இறுதித் தருணத்தில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட களமாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்தத் திருப்பங்கள் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக யார் யார் அதிகாரபூர்வமாக வெளிப்படப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதிலேயே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்படக்கூடும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.
பெருமளவிலான ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோத்தாபய ராஜபக்ஷவை தனது வேட்பாளராக அறிவித்த பொதுஜன பெரமுன இப்போது திரிசங்கு சொர்க்க நிலைமைக்கு ஆளாகியுள்ளது.
அமெரிக்க பிரஜையாகவும் இலங்கை பிரஜையாகவும் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த கோத்தாபயவின் குடி உரிமை நிலைமையைத் தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையே இதற்குக் காரணமாகியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் சட்ட விதி. அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்வதில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த தாமதம் அவர் வேட்பாளராக முடியுமா என்ற சந்தேகத்தை சட்டத்துறை வட்டாரங்களில் ஏற்படுத்தியிருந்தது. எனினும் அந்த விவகாரம் சட்ட ரீதியாக முடிவுக்கு வந்தது.
ஆனால், இப்போது அந்த நிலைமை வேறு வடிவத்தில் விசுவரூபமெடுத்து அவரையும் பொதுஜன பெரமுனவையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி இருக்கின்றது. அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்த அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி ஏற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கைக் குடியுரிமைக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவசர அவசரமாகக் கையாண்ட வழிமுறைகளே இந்த அச்சுறுத்தல்களுக்குக் காரணமாகியுள்ளன.
சட்டரீதியான சந்தேகங்களும் கேள்விகளும்
அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச்செய்வதில் ஏற்பட்டிருந்த தாமதமான கண்டங்களைக் கடந்து வந்துள்ள கோத்தாபய இலங்கைக் குடிமகன் என்பதற்காகப் பெற்றுக்கொண்ட தேசிய அடையாள அட்டை அதன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டு என்பனவற்றின் சட்ட வலுவை உறுதிப்படுத்திக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள சட்டரீதியான கேள்விகளும் சந்தேகங்களும் இந்தச் சிக்கல்களுக்கு வழிகோலி இருக்கின்றன. கோத்தாபயவின் இலங்கைக் குடியுரிமையின் அதிகாரபூர்வ நிலைமை குறித்து சிவில் செயற்பாட்டாளர்களான காமினி உயங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகிய இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கோத்தாபயவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான ஆவணங்கள் எதுவும் பாதுகாப்பு அமைச்சிடமும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடமும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகக் குற்ற விசாரணை பொலிஸ் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி ஏற்றிருந்த கோத்தாபயவின் குடியுரிமை தொடர்பிலான ஆவணங்கள் அந்த அமைச்சிடம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அந்த அமைச்சிடம் நடத்திய விசாரணையில் அத்தகைய ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என அதிகாரிகள் கைவிரித்துள்ளதாக குற்றவிசாரணை பொலிஸ் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அந்த ஆவணங்கள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் விசாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு வழிகாட்டியிருந்தனர்.
அதற்கமைய உரிய நீதிமன்ற உத்தரவுடன் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் நடத்திய விசாரணைகளில் அந்தக் குடியுரிமை தொடர்பிலான ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என அந்தத் திணைக்கள அதிகாரிகளும் கையை விரித்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள்
அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ இலங்கைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என சுட்டிக்காட்டி, அவர் அவ்வாறு கூறுவதைத் தடுப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை வழங்க வேண்டும் என்று தாங்கள் அவருடைய குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவில் கோரியிருப்பதாக காமினி உயங்கொட கூறியுள்ளார்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து நாடு திரும்பி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியைப் பெற்றபோது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது இலங்கைக் குடியுரிமை தொடர்பிலான மூல ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகளிலேயே பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு கையை விரித்துள்ளனர்.
இந்த ரீட் மனு தொடர்பான தொடர் விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட்டு, நாளை மறுதினம் வெள்ளியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நீதிமன்றத்தின் முடிவு கோத்தபாயவுக்கு சாதகமாக அமைந்தால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ள 7 ஆம் திகதி திங்களன்று வேட்பாளராகக் களம் இறங்க முடியும். நீதிமன்றத்தின் முடிவு அவருக்குப் பாதகமாக அமைந்தால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழக்க நேரிடும்.
ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடி நிலைமை குறித்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொதுஜன பெரமுன கட்சியினரை எச்சரிக்கும் வகையில் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு தொடர்பிலான முடிவு அந்தக் கட்சியினருக்குப் பாதகமாக அமையக் கூடும் என்பதைக் கவனத்திற்கொண்டு வேறு ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்காகத் தயாராக இருக்குமாறு அவர் கூறியுள்ள ஆலோசனையும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பிலான நெருக்கடி நிலையின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ குழுவினர் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் தீவிர ஆலோசனையிலும் மாற்று ஏற்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிதறுகின்ற நம்பிக்கை
பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை மிகக்குறுகிய காலத்தில் உருவாக்கி அதன் தலைவராக பொறுப்பேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி தேர்தலில் வலிமைகொண்டதோர் அரசியல் சக்தியாகப் பரிணமித்திருந்த மஹிந்த ராஜபக் ஷ இந்தத் திடீர் திருப்பத்தினால் தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.
கோத்தாபயவுக்குப் பதிலாக ஆளுமையும் மக்கள் செல்வாக்கும் கொண்ட ஒருவரை வேட்பாளராகத் தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்களும் மஹிந்த ராஜபக் ஷவும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுமனே ஒரு வேட்பாளரைக் களமிறக்குவது என்பதற்கும் அப்பால், பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்கால வளர்ச்சி மக்கள் மத்தியிலான அதன் செல்வாக்கு என்பனவற்றையும் மஹிந்த ராஜபக் ஷவின் உறுதியான எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்பனவற்றையும் மஹிந்த ராஜபக் ஷ அணியினர் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.
அதேவேளை இத்தகையதொரு நெருக்கடி நிலைமையை எதிர்பார்த்து அதற்கான தயார் நிலையில் அவர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அத்தகைய எதிர்பார்ப்பு இல்லாத ஒரு நிலையில் அரசியல் ரீதியாக அவர்கள் ஒரு தவிப்பு நிலைமைக்கு ஆளாகி இருப்பதாகவே தெரிகின்றது.
நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முன்களத்தில் பௌத்த தேசியத்தில் பற்றுக் கொண்டுள்ள சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ கருதப்பட்டார். சிங்கள பௌத்த தேசியத்தின் வல்லமையுள்ள ஓர் அரசியல்வாதியாகவும், அந்தத் தேசியத்தை மேலும் வலுப்படுத்தி வளர்த்தெடுத்துச் செல்வதில் ஆளுமை கொண்டவராகவும் அவர் தேர்தல் களத்தில் உருவகப்படுத்தப்பட்டிருந்தார்.
இதனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியிலும் பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்களிலும் எதிர்காலம் குறித்து திடமான நம்பிக்கை நிலைமை காணப்பட்டது. ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோத்தாபயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவினால் அந்த நம்பிக்கை தகர்ந்து சிதறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீவிரப் போக்கில் தளர்வா….?
இந்த ரீட் மனுவானது சிங்கள பௌத்த தேசியப் பற்றுடைய சிங்கள மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புக்களை மட்டும் தளர்வடையச் செய்யவில்லை. கோத்தாபயவின் அரசியல் பிரவேசத்தைத் தமது எதிர்கால அரசியல் நலன்களுக்குரிய மிக சாதகமான நிலைப்பாடாகக் கருதிய பௌத்த தேசியத்தில் தீவிர பற்றுக்கொண்டுள்ள பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட தீவிர மதவாத அரசியல் போக்கைக் கொண்டுள்ள பௌத்த பிக்குகளையும் அரசியல் ரீதியாகத் தளர்வடையச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.
கோத்தாபய வேட்பாளராகப் பெயரிடப்பட்டதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அவரே ஜனாதிபதியாகிவிட்டது போன்றதொரு பிரமை நிலையிலேயே பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளராகிய ஞானசார தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் அடாவடித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அது மட்டுமன்றி மத உரிமை சார்ந்த இனவிவகார அரசியலில் எரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் இந்துக்களினதும் தமிழ் மக்களினதும் மனங்களைக் கீறிக்காயப்படுத்தி எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வையும்கூட அவர் ஏற்படுத்தியிருந்தார்.
நீராவியடி பிள்ளையார் கோவில் தீர்த்தக்கரையில் கொலம்பே மேதானந்ததேரருடைய பூதவுடலை பலாத்காரமாக எரித்ததன் பின்னர், இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது. ஏனைய மதத்தவர்களுக்கு இங்கு இடமில்லை என்று அப்பட்டமாக இனவாத விஷத்தை அவர் கக்கியிருந்தார்.
தீவிரமான இனவாத அரசியல் போக்கையும் இராணுவ ரீதியான மன நிலையையும் கொண்டவராகத் தமிழ் மக்களால் கருதப்படுகின்ற கோத்தபாய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தமது எதிர்காலம் என்னவாகும் என்ற அரசியல் ரீதியான கவலை சிறுபான்மை இன மக்களைப் பீடித்திருந்தது.
இந்த நிலையில் கோத்தாபயவின் வேட்பாளர் தகுதி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதனால் சிங்கள பௌத்த தேசியத்தின் தீவிரப் போக்கில் ஏற்பட்டுள்ள தளர்வு நிலை சிறுபான்மை இன மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான ஆறுதல் மூச்சு வெளிவருவதற்கு வழிவகுத்துள்ளதாகவே தோன்றுகின்றது. ஆனாலும் அது நிரந்தரமான நிம்மதியாகுமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கின்றது.
தேர்தல் களத்தில் ஏற்பட்டுள்ள திருப்பங்களுக்கான நிலைமை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்திலும் திருப்பத்தைக் கொண்டு வரக்கூடும் என்ற நிலைமையும் காணப்படுகின்றது.
இறுதி நேரத்திலும் இயலவில்லையே
ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோத்தாபயவைவிட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகிய சஜித் பிரேமதாச, ஜே.வி.பி.யின் வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க ஆகிய இரு வேட்பாளர்களும் முன்னணியில் உள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபாய ராஜபக் ஷவுக்குப் பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்துகின்ற நிலைமை உருவாகினால் அதற்காகத் தெரிவு செய்யப்படுபவர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரசன்னத்தினால் ஏற்பட்டிருந்த ஒரு தீவிர நிலைமை உருவாகமாட்டாது என்ற கருத்தும் நிலவுகின்றது.
இது தமக்குரிய சரியான ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்வதில் தமிழ் மக்களுக்கு உள்ள கடினமான நிலைமை சற்று இளகுவதற்கும் வழியேற்படுத்தியுள்ளது என்றும் கருதலாம். ஆனாலும் கடும்போக்காளர்கள் உள்ள கடுமையான கள நிலைமை தமிழ் மக்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு உதவக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கு இதமான நிலையில் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன விளங்கினார். அதனையடுத்து அவரைத் தெரிவு செய்த சிறுபான்மை இன மக்களுக்கு அவருடைய ஆட்சிக் காலத்தில் நிவாரணங்கள் எதுவும் கிட்டவில்லை. பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவுமில்லை என்ற வெறுப்புக்குரிய விளைவே ஏற்பட்டிருக்கின்றது.
தற்துணிவின் மூலம் தீர்த்திருக்கக் கூடிய பிரச்சினைகளுக்குக்கூட, தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த மக்களுக்காக மைத்திரிபால சிறிசேனவினால் தீர்வு காண முடியவில்லை.
தீர்வு காண முடியவில்லை என்பதிலும் பார்க்க அத்தகைய அரசியல் மன நிலையை அவர் கொண்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
ஜனநாயகத்தையும் ஊழலற்ற ஆட்சியையும் நிலைநிறுத்தப் போவதாக சூளுரைத்து பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் சிங்கள பௌத்த தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான அடாவடித்தன செயலைக் கண்டிப்பதற்குக்கூட அவரால் முடியாமல் போயுள்ளது.
இந்தத் தேர்தல் காலத்தில் சுய தேர்தல் நன்மையைக் கருத்திற்கொண்டு, சிறுபான்மை இன மக்களுக்கு ஆறுதல் தரத்தக்க வகையில் அரசியல் ரீதியான பிரசார கருத்தாகக்கூட அவர் அந்த விடயத்தில் அனுதாபம் தெரிவிக்கவோ அல்லது அந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற முடியாமல் போயுள்ளது.
ஒன்றிணைவது முதன்மைத் தேவை
இத்தகையதொரு ஜனாதிபதி தேர்தல் படிப்பினையைப் பெற்றுள்ள தமிழ் மக்கள் திருப்பங்களை எதிர்கொண்டுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலில் தமது எதிர்கால அரசியல் நலன்களை வென்றெடுக்கத்தக்க வகையில் தந்திரோபாய ரீதியில் சரியான முடிவை மேற்கொள்வார்களா என்பது தெரியவில்லை.
பல்வேறு பிரச்சினைகள், பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற தமிழ் அரசியல் கள நிலையில் அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை அற்றவர்களாகத் திகழும் அந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கத்தக்க வகையில் சரியான வழியை யார் காட்டப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.
அரசியல் தலைமைகள் மீது நம் பிக்கை இழந்து தாங்களே தமது பிரச்சி ஸ்ரீனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் பொறுப்புக்களை வலிந்து ஏற்றுக் கொண்டுள்ள ஒரு சாராரான தமிழ் மக்கள் இன்று சரியான அரசியல் வழிகாட்டலின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். அரசி யல் தலைமையின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அவர்களின் நம்பிக்கையும் போக்கும் இந்த ஜனாதி பதி தேர்தலில் தகுதியான முடிவை மேற் கொள்வதில் சவால்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசியல் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அதேபோன்று மாறுபட்ட அரசியல் கொள்கைகளையும், அதேவேளை தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுக்கொண்டு ஒரே கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஒன்றுபட முடியாத நிலைப்பாட்டையும் கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
சிறுபான்மை இன மக்கள் மீது பேரின அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர் களும் அதேபோன்று சிங்கள அரசியலில் ஆதிக்கம் கொண்டுள்ள பௌத்த சங்கத்தினர் உள்ளிட்ட சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளும் கொண்டுள்ள அடக்குமுறை அரசியல் போக்கினை எதிர்த்துத் தமது இருப்பையும் அரசியல் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான இந்த ஒன்றிணைவு மிக மிக அவசியம்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் இணைந்து ஒரே சக்தியாக வாக்களிப்பதா அல்லது பிரிந்து நின்று வாக்களிப்பதா என்பதைக் கள நிலைமைகளின் தன்மைக்கேற்ப தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதற்கு அடிப்படையாக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது முதன்மை நிலையில் அவசியத் தேவையாக உள்ளது.
பி. மாணிக்கவாசகம்