வடகொரியாவானது நேற்று அதிகாலை ஏவுகணையொன்றை ஏவிப் பரிசோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் புதிதாக அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து ஒரு சில மணி நேரத்தில் இந்த ஏவுகணைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பான தகவல்கள் ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிராந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.
வொன்ஸன் துறைமுகத்துக்கு அருகில் நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து ஏவப்பட்ட இந்த புக்குக்சோங் வகையைச் சேர்ந்த ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரத்துக்கு 910 கிலோமீற்றர் உயரம்வரை பயணித்து ஜப்பானிய கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கையோங் டூ தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் செயற்படு மட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 5 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக வடகொரியா அறிவித்து ஒரு நாளில் இந்த ஏவுகணைப் பரிசோதனை இடம்பெற்றுள்ளமை குறித்து தென்கொரிய தேசிய பாதுகாப்புச் சபை கவலையடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான நீல மாளிகையால் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது.
அந்த ஏவுகணை ஏவப்பட்டு இரண்டாகப் பிளவடைந்து கடலில் விழுந்ததாகத் தோன்றுவதாக ஜப்பானிய அமைச்சரவை தலைமைச் செயலாளர் யொஷ் ஹைட் தெரிவித்தார்.
வடகொரியாவானது கடந்த ஜூலை மாதத்திலிருந்து குறைந்தது 7 ஏவுகணைகளை ஜப்பானிய கடலுக்குள் ஏவிப் பரிசோதித்துள்ளது.