சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐ.தே.க வின் உறுப்பினர்களை சந்தித்தமை எதிர்வரும் தேர்தலை மையப்படுத்திய இரகசிய கூட்டணிக்கான முயற்சியல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த சந்திப்பு நாட்டின் தலைவர் என்ற வகையில் பொதுவானதொரு சந்திப்பாகவே அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் திட்டங்களை மையப்படுத்திய சந்திப்புகளை அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்வு காண முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் சின்னத்தை மாற்ற முடியும் என்று சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை சின்னத்தை மாற்றுவதில் பிரச்சினையாக அமையாது.
அத்தோடு அவர் மீதான வழக்குகள் எவ்விதத்திலும் கூட்டணியில் தாக்கம் செலுத்தாது. எனவே கோதாபய ராஜபக்ஷ வேட்பாளர் இல்லை என்றால் மாற்றுவழி குறித்து நாம் இன்னும் சிந்திக்கவில்லை. நாளை மறுதினம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராயப்படும். எனினும் மத்திய குழுவின் தீர்மானம் இன்றி எதனையும் உறுதியாகக் கூற முடியாது என்றும் இதன்போது கூறினார்.