நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான — சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது.
முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை.
அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் என்று தெரிகிறது.அவ்வாறானால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களின் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகிக்காதவர்களாக இருக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதும் இதுவே முதற்தடவை. நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனே சஜித் பிரேமதாச. கோதாபய முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரராவார்.முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் போட்டியிடும் முதல் ஜனாதிபதி தேர்தலாக இது அமைகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் எவரும் போட்டியிட்டுவெற்றிபெற்றதில்லை என்பதும் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முக்கியமாக கவனிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது.அதேவேளை, இலங்கையில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவியில் இருந்த ஒரே அரசியல்வாதி மகிந்த ராஜபக்சவே. ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டு பிறகு பொதுத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்த ஒரே அரசியல்வாதியும் அவரே.
இலங்கையில் முதல் ஜனாதிபதி தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது.அதில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக பதவியில் இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ஹெக்டர் கொப்பேகடுவவும்.எதிர்க்கட்சி தலைவராக அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார் ; 1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாசவும் சிறிமாவோ பண்டாரநாயக்கவும். எதிர்க்கட்சி தலைவராக அநுரா பண்டாரநாயக்க இருந்தார் ; 1994 நவம்பரில் நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதி தேச்தலில் சந்திரிகா குமாரதுங்கவும் சிறிமா திசாநாயக்கவும் பிரதான வேட்பாளர்கள்.அப்போது ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்கவும் பிரதமராக சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியில் இருந்தனர் ; 1999 டிசம்பரில் நடைபெற்ற நான்காவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள்.அப்போது சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர் ; ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 2005 நவம்பரில் நடைபெற்றது.அதில் மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள்.ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்கவும் பிரதமராக மகிந்த ராஜபக்சவும் இருந்த அதேவேளை ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
2010 ஜனவரியில் நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் பிரதான வேட்பாளர்கள்.அப்போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும் பிரதமராக ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர் ; 2015 ஜனவரியில் நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதி தேர்தலின்போது பிரதான வேட்பாளர்கள் மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும். ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும் பிரதமராக டி.எம்.ஜெயரத்னவும் எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர். 2019 நவம்பரில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கோதாபய ராஜபக்சவும் சஜித் பிரேமதாசவும் அவர்களது கட்சிகளினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருக்கின்றனர்.
நன்றி – வீரகேசரி