எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார்.
ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார்.
மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதேநடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளைவுகள் குறித்து சிந்திக்காமல் தனிப்பட்டவர்களை குறிவைக்கும் பிரிட்டனின் டபிளொய்ட் பத்திரிகைகளினால் பாதிக்கப்பட்டவராக தனது மனைவியும் மாறியுள்ளார் என ஹரி தெரிவித்துள்ளார்.
நான் நேசிக்கின்றவர்கள் வர்த்தக நோக்கங்களிற்காக பயன்படுத்தபடுகின்ற போது அவர்கள் உண்மையான நபர்களாக கருதப்படாத போது என்ன நடக்கும் என்பதை நான் அனுபவித்திருக்கின்றேன் என ஹரி தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக நாங்கள் கருதுகின்றோம்,நாங்கள் ஊடக சுதந்திரத்திலும் பக்கசார்பில்லாத உண்மையான செய்தியறிக்கையிடலிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.