உலகெங்கும் இடம்பெற்று வரும் போர்களில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்களைத் தயாரித்து விற்று வரும் நாடுகள் பின்னர் அதே போர்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்க மறுத்து வருவதாக பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தாலிய குடியேற்றவாசி பெற்றோருக்கு பிறந்த பாப்பரசர் பிரான்சிஸ் (82 வயது) குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவிலுள்ள குடியேற்றவாசிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளின் குடிவரவுக் கொள்கை தொடர்பில் அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் உலக குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் தினத்தையொட்டி வத்திக்கானில் சென்பீற்றர்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
உலகில் சில பிராந்தியங்களை மட்டுமே போர்கள் பாதித்துள்ளன எனவும் அந்தப் பிராந்தியங்களுக்கு போர்களுக்கான ஆயுதங்களை விற்று போரைத் தூண்டி வரும் நாடுகள் பின்னர் அந்தப் போர்களால் உருவாகிய அகதிகளை ஏற்க விருப்பமற்றனவாக உள்ளதாக அவர் கூறினார்.
மேற்படி ஆராதனை நிகழ்வில் பல குடியேற்றவாசிகளும் அவர்களுக்கு உதவும் குழுக்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். அத்துடன் இதன்போது பாரம்பரிய தேவாலய இசையுடன் ஆபிரிக்க, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துக்கேய இசைகள் கலந்து இசைக்கப்பட்டன.
தவறாக நடத்தப்பட்டு உலகமெங்குமுள்ள வீதிகளில் கைவிடப்பட்ட அனைத்து அயலவர்களையும் தேற்றி அவர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது அனைத்துக் கிறிஸ்தவர்களதும் கடமையாகவுள்ளதாக பாப்பரசர் வலியுறுத்தினார்.