கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம், அவுஸ்திரேலிய செல்ல முயன்ற மேலும் 12 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த விசாரணைகளில், கூடுதலாக 10 சட்டவிரோத குடியேறிகளையும் ஒரு ஆட்கடத்தல்காரரையும் இலங்கை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப்படை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.
அதே சமயம், இந்த கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அகதிகள் இன்றும் பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.