எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை.நீதிமன்றத்தின் கட்டளையினை நடை முறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நீதிமன்றத்தின் கட்டளை வருவதற்கு முன்பாக வடபிராந்திய பொலிஸர் மா அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த விடையம் தொடர்பாக கதைத்தேன்.
ஞானசார தேரர் தன்னிச்சையாக ஒரு இடத்தில் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.ஆனால் நீதிமன்ற கட்டளை வருவதற்கு முன்னர் இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று என்னுடைய ஆதங்கத்தை வடபிராந்திய பொலிஸர் மா அதிபரிடம் தெரிவித்திருந்தேன்.எனினும் பொலிஸார் பௌத்த மதகுருக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு விடையங்களும் நாட்டில் பௌத்த மதகுருக்களை அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்தை கட்டுப்படுத்த நீதிமன்றங்களினால் முடியாது என்கின்ற செய்தி வெளிப்படையாக புலப்படுகின்றது.
பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக பொலிஸ் திணைக்களம் அல்லது எந்த விதமான திணைக்களமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கின்ற சூழ்நிலை வெளிப்படையாக தெரிகின்றது.நாங்கள் ஒரு விடையத்தில் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
வடக்கு- கிழக்கில் அல்லது இங்கிருக்கின்ற தமிழ் மக்களாக இருக்கலாம் அல்லது தமிழ் பேசுகின்ற மக்களாக இருக்கலாம் சிங்கள பேரினவாதிகள் அவர்களுடைய கொள்கைக்கு இனங்கிப்போனால் மாத்திரமே இலங்கையில் இருக்க முடியும் என்கின்ற ஒரு கருத்தை அவர்கள் இந்த செயற்பாட்டின் மூலம் வெளிப்படையாக சொல்லுகின்றார்கள்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த சிந்தனையை மீறி தமிழ் மக்களினுடைய கோரிக்கையினை நிறை வேற்றுவதற்கு எந்த அரசாங்கங்களும் தயார் இல்லை.
நீராவியடி பிள்ளையார் ஆலயம் தொடர்பான நீதிமன்றத்தின் கட்டளையினை பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கின் அமைச்சராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருக்கின்றார்.
சட்டத்தரணிகளினுடைய பகிஸ்கரிப்பு தொடர்பாகத்தான் சட்டமா அதிபர் அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி மொழி வழங்கியுள்ளார்.இதற்குசட்டத்தரணிகள் உடன்பட்டுள்ளனர்.
இதே வேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் தனது ஆதரவு தொடர்பாகவும் அவரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேசை பிரித்துக்கொடுத்த இந்தியாவிற்கு முடியும்.நாங்கள் கேட்பது இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையாவது தற்போது வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.
குறிப்பாக குறித்த மூன்று நாடுகளும் சம்மந்தப்பட்டு இந்த விடையங்களுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது.அவர்கள் எமது நலன் சார்ந்த விடையங்களில் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.
பிரித்தானியாவை பொறுத்த வரையில் பிரித்தானியாவிற்கு அன்று சுதந்திரம் கிடைக்கின்ற போது வடக்கு-கிழக்கை இணைத்து அலகு ரீதியான ஒரு தீர்வை கொடுத்துச் சென்றிருந்தால் இன்று இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது.
எமது பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெற்றிருக்காது. யுத்தம் ஏற்படுவதற்கான வாய்புக்களும் இருந்திருக்காது.
இலங்கையை ஆளுகின்ற ஜனதிபதியின் கீழ் எங்களுடைய மக்களுக்கு தீர்வு வராது என்பதனை காட்டுவதற்காக நாங்கள் பொதுவான அரசியல் இல்லாத தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி தமிழ் மக்கள் வாக்களித்து ஓர் செய்தியை கொடுக்க வேண்டும்.
அதனை விடுத்து இருக்கின்ற ஜனாதிபதி அரசியல் தீர்வு தருவார்.இவர் புதிதாக வந்த ஜனாதிபதியால் தான் முடியும் என கூற முடியாது.
என்னை பொறுத்த மட்டில் எனது தனிப்பட்ட கருத்து ஜனாதிபதியாக வருகின்றவருக்கு வாக்களிக்க முடியும்.ஆனால் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்காக வாக்களிப்பது என்பதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை.பாராளுமன்றத்தில் ஒரு சில விடையங்களை அதாவது பல விட்டுக்கொடுப்புக்களை செய்து நாங்கள் நம்பி அரசியல் தீர்வுக்கு பல விடையங்களை முன்னெடுத்தோம்.
நாங்கள் முன்னெடுக்கின்ற நேரத்தில் பாராளுமன்றத்தில் 3 இல் 2 பெறும்பான்மை என்பது தேவை. ஒரு அரசியல் யாப்பு மாற்றத்திற்கு 3 இல் 2 பெறும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஜே.வி.பி அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கோ பாராளுமன்றத்தில் 3 இல் 2 பெறும்பான்மை அவர்களுக்கு தேவையில்லை.
அரசியல் தீர்வு மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் 3 இல் 2 பெறும்பான்மை தேவை. 3 இல் 2 பெறும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய்ககூட்டமைப்பிடம் இருந்தது.ஐக்கிய தேசியக்கட்சியும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றாக இருந்த நேரத்தில் அந்த பங்களிப்பை நாங்கள் செய்தோம்.
ஒக்டோபர் 23 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பிரதமர் ஆக்கினார். பின்னர் சுமார் 33 நாட்களின் பின்னர் தான் நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.
நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நாங்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தோம்.குறித்த காலப்பகுதிக்குள் மஹிந்த அணி பாராளுமன்றத்தினுள் நடந்து கொண்ட விதம்,அவர்களின் சிந்தனைகள்,செயற்பாடுகள் ஒரு வித்தியசமான கடும்போக்காக இருக்கின்றது.
2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாக்களித்தது மஹிந்த வேண்டாம் என்று மைத்திரபால சிறிசேனவிற்கு வாக்களித்தனர்.
அந்த சிந்தனை அடிப்படையில் நாங்கள் பங்களிப்பு செய்தோம்.ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாங்கள் எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை.யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.