கிறிஸ்துமஸ் தீவில் இருப்பது சித்திரவதை!

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கை முழுமையாக விசாரிக்க, அண்மையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதனால், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், இத்தீவில் இருப்பது மனரீதியான துன்புறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ள பிரியா- நடேசலிங்கம் இணையர், அவர்களது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு.

“முறையான கழிப்பறை வசதிக்கூட எங்களுக்கு இங்கு இல்லை. இது குழந்தைகள் இருக்கக்கூடிய இடமல்ல,” எனக் கூறியிருக்கிறார் பிரியா.

பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டால் இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய சூழல் உருவாகும்.

இக்குடும்பத்தை கடுமையாக சாடியுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “ஆஸ்திரேலியாவில் அவர்கள் வாழ முடியாது என்பதைத் தெரிந்தே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்கள்,” என விமர்சித்துள்ளார். அத்துடன், குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர்  டிரம்ப் பயன்படுத்தும் சொல்லை குறிப்பிட்டு இக்குடும்பம் குழந்தைகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ நினைப்பதாக சாடியிருந்தார்.

2017 ஆகஸ்ட்டில் தருணிகாவின் தாயார் பிரியாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போதே தருணிகாவுக்கான விசா வாய்ப்பு முடிந்துவிட்டது என நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸ்டீபன் லாய்ட் தெரிவித்திருந்தார்.

“பீட்டர் டட்டன் குடிவரவுத்துறை அமைச்சராக இருந்த போது தருணிகா போன்ற குழந்தைகள் விசா பெற அனுமதித்துள்ளார்,” என்கிறார் பிரியா குடும்ப வழக்கறிஞர் ஏஞ்சல் அலேக்சோவ். இது வாழ்வா? சாவா? பிரச்னை என்பதால் நீதிமன்றம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடிய பிரியா குடும்ப வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்

இந்த நிலையில், பிரியா- நடசேலிங்கம் குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழ வாய்ப்புள்ளதா என்பது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே உள்ளது.