இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி அதன் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளர் என்று சொல்லக்கூடிய சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது.
ஜனாதிபதி பதவிக்கான இந்த போட்டியில் ஒரு இரண்டாவது ராஜபக்சவுடன் ஒரு இரண்டாவது பிரேமதாச மோதுகிறார் என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ நேற்று சனிக்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ;
ஐக்கிய தேசிய கட்சி நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக பலம்பொருந்திய வேட்பாளரான சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது. அந்த கட்சி அதன் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலாக பிரதி தலைவரான அமைச்சர் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்திருக்கிறது. நகர்வாழ் உயர்வர்க்கத்தைச் சேராதவரான காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித்தை அதே தென்பகுதியைச் சேர்ந்த இன்னொரு சிங்கள அரசியல் குடும்பத்தின் உறுப்பினரான கோத்தாபயவுக்கு முகங்கொடுக்கக்கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவுசெய்திருக்கிறது.
கோத்தாபயவைப் பொறுத்தவரை, பிரிவினைவாத விடுதலை புலிகளை உள்நாட்டுப்போரில் வெற்றிகொண்ட பாதுகாப்பு படைகளை வழிநடத்திய பாதுகாப்பு செயலாளர் என்ற ‘ பலவான் ‘ படிமத்தைக் கொண்டவராக விளங்குகிறார். அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரை, 1994 ஆம் ஆண்டில் இழந்த ஜனாதிபதி பதவியை மீளக்கைப்பற்றுவதற்கு சமுதாயத்தின் அடிமட்ட மக்களை அணிதிரட்டவேண்டியிருக்கிறது.அதைச் செய்யக்கூடியவராக கட்சி பிரேமதாசவை நோக்குகிறது.
பிரதமர் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து இன்னொருவருக்கு இடம்கொடுக்கவேண்டியிருப்பது தொடர்ச்சியாக இது மூன்றாவது தடவையாகும்.2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிரணியின் பிரமாண்டமான திட்டத்தின் ஒரு அங்கமாக விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்.நல்லாட்சி, பொருளாதார மீட்சி மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற வாக்குறுதிகளுடன் சிறிசேன அந்த தேர்தலில் பெரு வெற்றிபெற்றார்.
பதவியில் இருக்கும் ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக மீண்டும் போட்டியிடுவாரா அல்லது அவரது கட்சி வேறு வேட்பாளரை நிறுத்துமா என்பது தெரியவருவதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டிக்கான கோடுகள் கீறப்படுவது வழக்கத்துக்கு மாறானதாகும். அண்மைக்காலமாக ஜனாதிபதி சிறிசேன அரசியல் அரச்கில் ஒரங்கட்டப்பட்டிருக்கிறார்.அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னைய அதன் செல்வாக்கான நிலையில் இப்போது இல்லை. அவர் விக்கிரமசிங்கவுடன் சுமார் ஐந்து வருடங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தாலும் கூட பிறகு முரண்பாடுகள் முற்றி பிரிந்துசென்றுவிட்டார்.
கடந்த வருடம் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதி சிறிசேன நீக்கினார். எனினும் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விக்கிரமசிங்க மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். ஏற்கெனவே இரு பதவிக்காலங்களுக்கு பதவி வகித்த காரணத்தினால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதவராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுதந்திர கட்சியின் பெருமளவு ஆதரவுத்தளத்துடன் பிரிந்துசென்று புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கிறார். அந்த பெரமுனவின் சார்பிலான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி தனது சகோதரரான கோதாபய ராஜபக்சவை களமிறக்கியிருக்கிறார்.
இத்தடவை ஜனாதிபதி தேர்தல் பிரதானமாக பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு போட்டியாகவே இருக்கும். ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவை தெரிவுசெய்திருக்கிறது.அவரது வாய்ப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இல்லை.ஆனால், இரு பிரதான வேட்பாளர்களினதும் வாக்குப் பங்குகளில் பாதிப்பை அவரால் ஏற்படுத்தமுடியும்.
இது இவ்வாறிருக்க, கடந்த கால்நூற்றாண்டு காலமாக கேட்கக்கூடியதாக இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்ற வாக்குறுதி நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற அதிகாரப் போட்டிக்குள் மறைந்துபோய்விட்டது.ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்பது தொடர்ந்தும் முக்கியமான விவகாரமாக இருக்கின்றபோதிலும் கூட அந்த பதவிக்காக இலங்கை இன்னொரு தேர்தலை நடத்தப்போகிறது. பன்முக சமூகம் ஒன்றுக்கான அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதற்கான அறிகுறி எதையும் காணமுடியாமல் இருப்பது இலங்கையில் அண்மைக்கால வரலாற்றில் இன்னொரு ஏமாற்றம் தரும் அம்சமாகும்.