ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஒரு பார்வை

உலகளவில் சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஒஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களே அதிகளவில் ஆஸ்கர் விருதுகளை தட்டி செல்கிறது. இந்தியா சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இந்தியா சார்பில் தமிழில் வெளியான வெற்றிமாறன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெரிய கவுரவம் என்றாலும், இந்த கவுரம் கிடைத்தது இது முதல்முறையல்ல, ஏற்கனவே 8 தமிழ் படங்கள், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அந்த படங்கள் எல்லாம் என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

தெய்வமகன்- ஏசி திருலோகசந்தர் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில் 1969ம் ஆண்டு வெளியான படம் ‛தெய்வமகன் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் இரண்டு வேடங்களில் சிவாஜிக்கு ஒருபக்க கண்ணம் சற்று வித்தியாசமாக இருக்கும். தந்தை மகன் பாசத்தை அருமையாக சொல்லிய இப்படம், தான் 42வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட முதல் தமிழ் படமாகும்.
நாயகன்- இரண்டாவதாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ‛நாயகன்'. மும்பையில் தாதாகவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் 60வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அஞ்சலி- மூன்றாவது படமும் மணிரத்னம் படம் தான். 1990-ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் தான் ‛அஞ்சலி'. ரகுவரன், ரேவதி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை தனது தாயை வெறுப்பதும், தாய், அந்த குழந்தையின் பாசத்திற்காக ஏங்குவதையும் அருமையாக பதிவு செய்திருந்தார் மணிரத்னம். இப்படம் 63வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

தேவர் மகன்- நான்காவது படமாக 1992ம் ஆண்டு, பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி கணேசன், ரேவதி, கெளதமி ஆகியோரது நடிப்பில் வெளியான ‛தேவர் மகன்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஜாதி மோதலையும், ஜாதி மோதல்கள் வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் சொல்லும் படமாக இப்படம் அமைந்தது. கமல், சிவாஜி நடிப்பு மிரட்டலாக இருந்தது. இப்படம் 65வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

குருதிப்புனல்- ஐந்தாவது தமிழ் படமாக, கமலின் படம் தான் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 1995ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமல், அர்ஜூன், கெளதமி, கீதா நடிப்பில் வெளியான படம் குருதிப்புனல். பாடல்களே இல்லாமல் வித்தியாசமான கதை, திரைக்கதையுடன், யதார்த்த படமாக வெளிவந்த இப்படம் 68-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தியன்– 6வது தமிழ் படமாகவும், கமலின் படமே ஆஸ்கருக்கு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடத்தில் நடிக்க அவருடன் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிக்க லஞ்சம் வாங்குவது தவறு எனும் சமூக கருத்துடன் சுதந்திர காலக்கட்டத்து கதையையும் கலந்துகட்டி அருமையாக, பிரமாண்டமாய் இயக்கி இருந்தார் ஷங்கர். இந்தப்படத்தில் கமலின், முதியவர் வேடம் பெரிய பிளஸ், கூடவே ரஹ்மானின் இசை மிரட்டலாக இருந்தது. இந்தப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் படம் 69வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஜீன்ஸ்- ஏழாவது படமாக மீண்டும் ஷங்கரின் ‛ஜீன்ஸ்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பிரஷாந்த், நாசர் இரண்டு வேடங்களில் நடிக்க, அவர்களுடன் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ராதிகா, கீதா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்க வெளிவந்தது இப்படம். புதிய தொழில்நுட்பம், ஒரே பாடலில் உலக அதிசயங்கள் அனைத்தையும் காண்பித்தது போன்ற பல பிளஸ் பாயிண்ட்டுகள் இப்படத்தில் இருந்தது. ஜீன்ஸ் படம் 71வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஹேராம்- எட்டாவது படமாக கமலின் மற்றொரு வித்தியாசமான படமான ஹேராம் 73வது ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கமல்ஹாசனே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தார். சுதந்திர போராட்ட காலத்துடன் காந்தியை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் கமல் உடன் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, வசுந்தராதாஸ் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஹிந்தி நட்சத்திரங்கள் நடித்து தமிழ், ஹிந்தி இரண்டு மொழியிலும் வெளியான இப்படம் 73வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

விசாரணை- ஒன்பதாவது படமாக இந்தாண்டு வெற்றிமாறன் இயக்கிய ‛விசாரணை படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சந்திரகுமார் எழுதிய லாக்-அப் எனும் நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். சிறையில் கைதிகள் படும் இன்னல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்சிய இப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்றுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளையும் அள்ளியது. இம்முறை இந்தியா சார்பில் 89-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

5 முறை கமல் படங்கள் இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 தமிழ் படங்களில், அதிகபட்சமாக கமலின் படங்கள் 5 முறை(நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம்) பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ஹைலைட்! என்னதான் 8 தமிழ் படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், ஒரு படங்கள் கூட விருது பெறவில்லை.