தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – சிட்னி

தமிழ்மக்களின் சுதந்திர விடிவிற்காக நீரின்றி உணவின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் நினைவுநிகழ்வு, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை 26 – 09 -2019 அன்று மாலை 7.30 மணிக்கு வென்வேத்வில் றெட் வைறோன் சமூக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
 
இளம் செயற்பாட்டாளர் சிந்துஜன் ஞானமூர்த்தி நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடரை லெப்ரினன்ற் கேணல் அக்பர் அவர்ளின் மூத்தமகன் பிறைக்குமரன் ஏற்றி நிகழ்வை தொடக்கிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கொடியை இளம் செயற்பாட்டாளர் நிலா ஏற்றிவைக்க, தமிழீழ தேசிய கொடியை இளம் செயற்பாட்டாளர் ஜனனி ஏற்றிவைத்தார்.
 
தொடர்ந்து லெப்ரினன்ற் கேணல் எழிற்கண்ணன் அவர்களின் மூத்தமகள் கதிரினி அவர்கள்,  தியாகதீபம் நினைவு ஈகைச்சுடரை ஏற்றிவைத்து மலர் வணக்கம் செய்தார். அனைவரும் ஒருமித்து அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செய்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, மூன்று இளையோர்கள் “பாடும் பறவைகள் வாருங்கள்” என்ற பாடலை  இசைவடிவில் வழங்கினர். தொடர்ந்து தியாகி திலீபனின் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் ஒன்றை, இளையோர்கள் வழங்கினர்.
 
தியாகி திலீபனின் உணர்வு பகிர்வுகளை காணொளியாக பதிவு செய்யும் முயற்சியை, இம்முறை இளையோர்கள் முன்னெடுத்திருந்தனர். அவற்றில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உறவுகளின் காணொளி தொகுப்பு அகன்ற திரையில் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் மனோ அவர்கள், தியாகதீபம் நினைவு கவிதையை வாசித்ததுடன், இளையோர்களின் பங்களிப்பின் மூலமே, எமது விடுதலைக்கான பயணம் பலமடையும் எனவும் தனது சிறு கருத்துரையை பதிவுசெய்தார்.

 
தொடர்ந்து சர்வதேச ரீதியாக, இளையோர்களால் முன்னெடுக்கப்படும் 30 மணி நேர அடையாள உண்ணாநோன்பு பற்றிய விபரத்தை  வெளியிட்டு உறுதியுரை எடுக்கப்பட்டது.
 
இறுதியாக தேசியகொடிகள் இறக்கப்பட்டு, நினைவு வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.
 
மண்டபம் நிறைந்த நிகழ்வாக, அனைவரும் தியாகதீபம் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டதும், இளையோர்களால் சிறப்பாக இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
 
இனிவரும் காலங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவுடன், இளையோர்கள் இணைந்து தியாகதீபம் நினைவுநிகழ்வை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.