உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து விட்ட போதிலும் ஒருவர் மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய எவ்வளவு பெரிய திறமைசாலியாலும் முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை ஓரளவு நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதுவே துக்கமாக அல்லது சோகமாக இருந்தால் அதனை நம்மால் எளிதில் உணர முடியாது.
இந்நிலையில் ஒருவரின் மனநிலை எப்படி உள்ளது? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
EQ ரேடியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை வைத்து 87% துல்லியமாக மனிதர்களின் மனநிலையைக் கண்டறிய முடியும். இந்த கருவியிலிருந்து வெளிப்படும் அலைகள் மனிதனின் உடலில் பட்டு மீண்டும் கருவியையே வந்தடையும். இந்த அலைகளின் எதிரொலிப்பு மனிதனின் இதய துடிப்பை கணக்கிட்டு அதன் மூலம் அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதைக் காட்டிவிடும்.
உதாரணமாக கருவியில் எதிர்மறை அலைகள் வந்தால் அவர் சோகமாக இருக்கிறார் என்றும் நேர்மறை அலைகள் வந்தால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றும் அர்த்தமாகும்.
’’வருங்கால தொழில்நுட்ப மாற்றத்திற்கு EQ ரேடியோ முதற்படியாக இருக்கும்’’ என்று இக்கருவியைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் டினா கடாபின் தெரிவித்துள்ளார்.