ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றொரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் தானே களமிறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகின்றார். இதனால் இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாடான நிலைமை தொடர்ந்து வருகின்றது. கட்சியின் செயற்குழுவைக் கூட்டி இந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ஆனால் செயற்குழுவுடன் பாராளுமன்றக் குழுவையும் கூட்டி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டுமென்று சஜித் பிரேமதாஸ அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைவிட வேட்பாளர் நியமன விவகாரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு முன்னணியின் பாராளுமன்றக் குழுவின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் தனிப்பட்ட சந்திப்புகளும் இடம்பெற்றிருந்தன. இதேபோன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் மத்தியஸ்தத்தின் கீழும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன. வேட்பாளர் நியமன விவகாரத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு விட்டுக்கொடுக்கவே முடியாது என்று அடம்பிடித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நிபந்தனைகளுடன் அவரை வேட்பாளராக நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தான் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஆறு மாதம் முதல் ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும், பிரசாரங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாஸ இணங்கினால் அவரை வேட்பாளராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாட்டினை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது வேட்பாளர் நியமனத்தில் இறுதித் தீர்மானத்தை எடுக்காமல் இழுபறிப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் ஆளும் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இத்தகைய கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் முரண்பாடுகள் எழுந்துள்ளமை கட்சியை பிளவுபடுத்திவிடும் என்ற அச்சத்தையும் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள் விரைந்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எண்ணம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் தாமே போட்டியிடவேண்டும் என்று விடாப்பிடியாக செயற்பட்டு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நிபந்தனையின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் சஜித் பிரேமதாஸ அணியினர் தீர்மானம் எடுக்கவில்லை.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதாக கூறப்படும் நிபந்தனைகள் சில நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்த வரையில் அவசியமானவையாகவே தோன்றுகின்றன. ஏனெனில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. இந்த விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மத்தியில் மாற்று நிலைப்பாடுகள் காணப்படுகின்றபோதிலும் பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவை இந்த முறைமையினை ஒழிப்பதற்கு ஏற்கனவே இணக்கங்களை தெரிவித்துள்ளன.
இதேபோன்றே மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காண்பதாக உறுதிமொழி வழங்கியிருந்தன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் சமாதானப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. மங்கள முனசிங்க தலைமையில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் சமாதானப் பேச்சினை விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டிருந்தார். அத்துடன் அரசியல் தீர்வுத் திட்டமொன்றையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். 2000ஆம் ஆண்டு இந்த அரசியல் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிரணியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினால் எரியூட்டப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலும் பேச்சுகள் நடத்தப்பட்டன. சர்வகட்சிக் குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு குறித்து ஆராயப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அரசியல் தீர்வை உள்ளடக்கி புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த முயற்சிகள் அனைத்தும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
புதிய அரசியல் யாப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் தேர்தல் முறை மாற்றம் குறித்த செயற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முயற்சிகளும் தற்போது கைவிடப்பட்டிருக்கின்றன.
எனவே அடுத்த ஜனாதிபதியாக எவர் வந்தாலும் இந்த விடயங்கள் குறித்து அக்கறை செலுத்தவேண்டிய அவசியமுள்ளது. புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் தொடரப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மத்தியில் மாற்று நிலைப்பாடுகள் இருந்தாலும் அந்த விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த விவகாரமும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிபந்தனைகள் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது.
ஆனால் கட்சியின் தலைமை நீடிப்பு மற்றும் பிரதமர் பதவி நீடிப்பு என்பன கட்சியின் உள் விவகாரங்களாகவே இருக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விதித்துள்ள நிபந்தனைகளில் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் பாராட்டுதலுக்குரியதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் கட்சி மட்டத்திலும் பங்காளிக் கட்சிகள் மட்டத்திலும் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதேபோன்றே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும். அந்த வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கிக் கூறவேண்டும்.
அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் தொடருமா அல்லது அந்த முயற்சிகள் கைவிடப்படுமா என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தெட்டத் தெளிவாக தமது விஞ்ஞாபனங்களில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறான நிலையில்தான் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வர முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நன்றி- வீரகேசரி