சிட்னி விமான நிலையத்திற்குள் பயங்கரவாத சகோதரர்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தவிருந்த காணொளி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஹ்மூத் (31) மற்றும் கலீத் கயாத் (51) சகோதரர்கள் கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பரபரப்பான விமான நிலையத்திற்கு வெளியே தங்களுடைய சாமான்களுடன் சேர்த்து வெடிகுண்டுகளை சுமந்து சென்றுள்ளனர்.
காவல் துறை வெளியிட்டுள்ள அந்த காணொளி காட்சியில், சோதனை செய்யும் இடத்தை நெருங்கிய போது, எடை அதிகம் இருப்பதாக மஹ்மூத் கூறியுள்ளார். உடனே இருவரும் மிகப்பெரிய சதித்திட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக மஹ்மூத்திடம் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். “விமானத்தில் ஒரு சாதனத்தை வைப்பது பற்றி கலீத்துடன் நீங்கள் எப்போதாவது உரையாடியிருக்கிறீர்களா?” என விசாரணையின் போது ஒரு காவல் துறை அதிகாரி அவரிடம் கேட்டார். “கடவுள் மீதும் என்மீதும் சத்தியமாக… அவர் அப்படி எதுவும் பேசவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
ஆனால் அவர் கூறியது பொய் என்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது, அவர்களுடைய திட்டப்படி இருவரும் வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு சிட்னியில் இருந்து அபுதாபிக்கு 200 பயணிகளுடன் செல்லவிருந்த எட்டிஹாட் விமானத்தை அடையவிருந்தனர்.
இந்த வெடிகுண்டுகளை வைத்து, அவர்களுடைய மூன்றாவது சகோதரர் அமர் கயாத் விமானத்தில் வெடிக்க செய்யவேண்டும் என்பதுவே அவர்களுடைய திட்டம் என தெரியவந்தது. மேலும், அந்த முதல் குண்டு சதி தோல்வியடைந்த பின்னர், மஹ்மூத் மற்றும் கலீத் ஒரு விஷ வாயு சம்பந்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத சதித்திட்டத்திற்கு வழிவகுத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி இருவருக்குமான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியதோடு, சிறையில் அடைக்குமாறு கூறி உத்தரவிட்டார். அதேசமயம், இந்த சதித்திட்டத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கி உதவிய மூத்த ஐஎஸ் உறுப்பினரும் நான்காவது சகோதரருமான தாரெக் கயாத் ஈராக்கில் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
இதற்கிடையில் விமானத்தில் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கான உடன்பிறப்புகளின் திட்டம் குறித்து அமர் கயாத்திற்கு எதுவும் தெரியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து, அந்த மூன்றாவது சகோதரரை சிறையிலிருந்து விடுவித்தது.