யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது.
இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம்.
அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட வந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் குழாம், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தது.
“நீங்கள் யாருக்குச் சேர் இந்த முறை ‘வோட்டு’ப் போடப்போறீங்கள்” என, ஆசிரியர் ஒருவர், சக ஆசிரியரைக் கேட்டார்.
அவர் சற்று மௌனமாக இருந்து, பின்னர், “நாங்கள் யாருக்குத்தான் வாக்குப் போட்டாலென்ன, போடாமல் விட்டென்ன; எங்கள் தலை எழுத்து மாறப்போகுதே?” எனப் பதில் கொடுத்தார். இந்த பதிலைத் தொடர்ந்து, அங்கு ஒருவித இனம் புரியாத அமைதி ஊடாடியது.
இது இவ்வாறு நிற்க, யாழ்ப்பாண நகர மேயர் இம்மானுவேல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டேக்குக்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, யாழ். மேயர், “எமக்குத் தேவை, புதிய ஜனாதிபதி அல்ல” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார், தேர்தலில் வெற்றி பெறப் போவது யார், வெற்றி பெறுபவருக்கு பெரும்பான்மை பலம் கிட்டுமா? எனச் சிங்கள மக்கள், ஊகங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளை, அதே நாட்டின் பிறிதோர் இனமான தமிழ் மக்கள், ஜனாதிபதியாக யார் வந்தால்தான் எமக்கென்ன என்று, ஊடாட்டமின்றி உள்ளனர்.
இவ்வாறான முக்கிய விடயத்தையே, முக்கிய வேளையில், முக்கிய நபரொருவர் முக்கிய நபருக்குத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்; இது வரவேற்கத்தக்கது. இது போன்று, சர்வதேச இராஜதந்திரிகளுக்குத் தமிழ் மக்களது உண்மையான விருப்பையும் உள்ளவாறான இருப்பையும் எடுத்துக் கூற வேண்டியது, இன்றைய முக்கிய தேவைப்பாடு ஆகும்.
ஏனெனில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, தங்களுக்கு அரசியல் தீர்வு கிட்டாதா என, ஏங்கித் தவிப்பதே ஆகும். ஆனால், கொழும்பு அரசாங்கங்களோ தேர்தலுக்கு முன்னர், சம்பிரதாயபூர்வ மனோபாவத்துக்காக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளிப்பார்கள்.
ஆனால், அவர்கள் தேர்தலை நடத்துகின்றார்கள்; வெற்றி பெறுகின்றவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்காது, அரசாங்கங்களை நடத்துகின்றார்கள்; காலங்களை ஓட்டுகின்றார்கள்.
ஒவ்வொரு தடவையும் புதிதாக வருகின்ற ஜனாதிபதி, பழைய பிரச்சினையை அப்படியே பக்குவமாகப் பேணிப் பாதுகாத்து, புதியவரிடம் கையளித்து விட்டுச் செல்கின்றார்கள். முடியுமென்றால், புதிதாகவும் சில பிரச்சினைகளை உருவாக்கி வைத்து விடுகின்றார்கள்.
இதை, முற்றிலும் மாறுபட்ட இரண்டு காலகட்டங்களைச் சேர்ந்த, களச்சூழல்களோடு ஒப்பிடலாம். முதலாவதாக, 1977ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையிலான, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலப்பகுதியில், தமிழ் மக்கள், பல்வேறு வகைகளிலும் கடும் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசர காலச் சட்டம் என்பவற்றின் அறிமுகம்; 1983ஆம் ஆண்டு, இனக்கலவரமும் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பமும் தமிழ் இயக்கங்களின் வருகையும் அதனது முதலாம், இரண்டாம் கட்ட ஈழப்போராட்டமும் சமாதானத்தை ஏற்படுபடுத்துவதற்கு என, இந்திய இராணுவத்தின் வருகையும் அவர்களுக்கு எதிரான போரும் என, அண்ணளவாக 15 ஆண்டு காலப் போராட்டங்களாலும் ஏமாற்றங்களாலும் களைத்திருந்த தமிழ் மக்கள், அமைதியையும் சமாதானத்தையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில், (1994) ‘சமாதானப் புறா’வாக சந்திரிகா அம்மைமையார் ஜனாதிபதித் தேர்தலில் ‘பறந்து’ வந்தார். தன்னிடம் சமாதானப்பொதி இருப்பதாகக் கூறினார். “சமாதானமாக வாழ்வோம்” என அழைப்பு விடுத்தார். இவராவது, தனது வாக்கைக் காப்பாற்றுவார் எனத் தமிழ் மக்களும் நம்பினார்கள்; அவருக்கு பெரும்தொகையில் வாக்குகளும் அளித்தார்கள்.
அக்காலப் பகுதியில், தமிழ் மக்களது பிரதிநிதிகளாகப் புலிகள் செயற்பட்டனர். சில மாதகாலமாக அமைதிப் பேச்சுகள் நடைபெற்றது. அவரால், கொண்டு வரப்பட்ட பொதி, தமிழ் மக்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பொதி அல்ல.
அத்துடன், பேச்சுவார்த்தைகளில் யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு எனச் சமாதானம் நூலிழையில் தொங்கிய ஒரு கட்டத்தில் அறுந்து வீழ்ந்தது. போர் 19 ஏப்ரல் 1995 வெடித்தது.
சரியாக, இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டாவது (1995 – 2015) கட்டம் வருகின்றது; அதாவது, ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது. ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அதிரடியாகவும் எதிர்பார்க்காத விதமாகவும் களம் இறங்குகின்றார். “தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளோம்; நல்லிணக்கமாக வாழ்வோம்” என வாக்குறுதி அளித்து, வாக்குக் கேட்கின்றார்.
கொடூரமாக, முள்ளிவாய்க்காலில் முடிவற்ற நான்காம் கட்ட ஈழப்போராட்டம், காணாமல்போனோர், கைது செய்யப்பட்டோர், சிறைக்குள் இருப்போர் விவகாரங்கள், யுத்தக்குற்றம், காணி விடுவிப்பு என முடிவுறாத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்க வேண்டும் எனத் தமிழ் மக்கள், இம்முறையும் ஏங்கித் தவிக்கின்றார்கள்; உண்மையான சமாதானத்தை வேண்டி நிற்கின்றனர்.
தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்க, சிறிசேன ஜனாதிபதி ஆகின்றார். இந்நிலையில், தேசிய அரசாங்கம் அமைத்து, இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என, வழங்கிய வாக்குறுதிகள் தூங்குகின்றன. தமிழ் மக்கள் உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க, சமாதானமோ ஊமையானது.
நடப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து, சமாதானச் சகவாழ்வு கொண்டு வருகின்ற முயற்சியில், மும்முரமாக ஈடுபட்ட கூட்டமைப்பு, உச்சக்கட்ட விரக்தியில் உள்ளது. தமிழ் மக்களோ, இவர்களை விட அதிக விரக்தியில் உள்ளனர்.
இந்நிலையில், அன்று ஸ்ரீ லங்கா அரசாங்கங்களின் காலங்கடத்தல், ஏமாற்று வேலைகள் காரணமாகப் ‘புலிகள்’ நம்பிக்கை இழந்தார்கள். இதனால், மாற்று வழிகள் இன்றிப் புலிகளைப் போருக்குள் தள்ளியது. ஆனால், “புலிகள் போருக்குச் செல்கின்றார்கள்; அவர்கள் சமாதானப் பிரியர்கள் அல்லர்; அவர்கள் போர்ப் பிரியர்கள்” என உலகத்துக்குக் காட்டப்பட்டது.
ஆனால், அமைதி சமாதானத்துக்கான பாதை, அரசாங்கங்களால் வலிந்து மூடுப்பட, போருக்கான பாதை, தானாகவே திறக்கப்பட்டது; இதுவே நிதர்சனம்.
இன்று, இதேநிலையில், தமிழ் மக்களின் இன்றைய பிரதிநிதிகளாகக் கூட்டமைப்பினர் உள்ளனர். இன்று, ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் அதே காலங்கடத்தல், ஏமாற்று வேலைகள் காரணமாக கூட்டமைப்பினர் நம்பிக்கை இழந்து உள்ளார்கள்.
இந்நிலையில், “எங்களால் ‘ஆட்லறியா’ அடிக்க முடியும்” எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் கேட்கின்றார். இது, இன்னொரு விதத்தில், அன்று புலிகள் ‘ஆட்லறி’ அடித்ததை நியாயப்படுத்துகின்றது. இன்னொரு விதத்தில், சுமந்திரனின் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகின்றது.
அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புலிகளின் கைகளில், ஆயுதங்கள் இருந்தமையால், வேறு வழியின்றிப் போருக்குச் சென்றார்கள்.
இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினர், அகிம்சை வழியில் இருக்கின்றபடியால் வெறுங்கையுடன் வேறு வழியின்றிச் செல்கிறார்கள்.
மனிதனாகப் பிறந்த அனைவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால், பேரினவாதிகளுக்கு இனப்பிரச்சினை விவகாரம், தவறு என நன்கு அறிந்தும் தெரிந்தும், அதன் பின்னரும் தவறை ஒப்புக் கொள்ளவும் தயார் இல்லை; பரிகாரம் காணவும் விருப்பம் இல்லை. நியாயத்தையும் அநியாயத்தையும் சமாதானம் செய்கின்றார்கள்.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியம் அல்ல. அதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில், நியாயமான தெரிவுகள் இல்லை. அதில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதில் ஆர்வம் இல்லை. ஆனால், வெற்றி பெற்றவர்கள் பின்னர், என்ன செய்வார்கள் என்பது மட்டும் நன்கு தெரியும்.
இந்நிலையில், சூழ்நிலைகள் மனிதனை உருவாக்குவதில்லை. ஆனால், அடிப்படையில் இலங்கைத்தீவின் ஆட்சியை அலங்கரிப்பவர்களது உள்மனம் இம்மியளவும் மாறவில்லை.
பௌத்த பேரினவாதச் சிந்தனை உள்ளே, அவர்களது ஆழ்மனங்களில் ஒழிந்து கிடக்கின்றது. ஆனால், அது வெளியே நல்லிணக்கத் திரைக்காட்சியைக் காட்டுகின்றது என்பது வெள்ளிடைமலை.
தோமஸ் பெயின் என்ற சிந்தனையாளரின் கருத்து, ‘கொள்கைகள், உண்மைகள் என்பதற்காக யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக எதையும் நாம் விட்டு விடக் கூடாது’ என்பதாக அமைகின்றது.
நாம் செய்வதில் நியாயம் இருக்கும் போது, உலகம் ஒரு நாள் அதற்குத் தலை வணங்கப் போவது உண்மை. எனவே, தமிழ் மக்கள், இறுதி வரை உறுதியுடன், கொள்கைக்காக போராடுவார்கள் எனபது திண்ணம்.
காரை துர்க்கா