ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையின் டைரி குறிப்பு!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மாரா (41) என்கிற பெண் கடந்த 2013ம் ஆண்டு வயதில் தன்னைவிட சிறியவரான அந்தோணி (25) என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார். கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த மாராவிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் மூன்று வயதில் சார்லோட் என்கிற பெண் குழந்தை இருந்தது. அதனை தொடர்ந்து, ஆலிஸ் மற்றும் பீட்ரிக்ஸ் என்ற இரண்டு வயது இரட்டையர்களை பெற்றெடுத்தனர்.

சொந்தமாக நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் இரவு நேர வேலை செய்து வந்தார். 3 செப்டம்பர் 2018 அன்று இரவு 11 மணிக்கு பணியிலிருந்து வீடு திரும்பிய மாரா, வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் கணவர் விழித்திருக்கலாம் என நினைத்து அறையின் கதவை திறந்துள்ளார்.

அப்போது நீளமான பைப்பால் மாராவின் தலையில் ஓங்கி அடித்த அந்தோணி, நீளமான கத்தியால் 12 முறை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததும், மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அனைவரின் மூச்சையும் நிறுத்தியுள்ளார். அனைவரும் இறந்த பின்னர் உடல்களை பொம்மைகளால் மறைத்து அவர்களின் மேல் பூக்களை வைத்துள்ளார்.

அதற்கு அருகே ‘என்னை மன்னித்துவிடுங்கள், நான் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. மனதை இழந்துவிட்டேன். நீ விரும்பியதை போல உன்னுடைய குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்’ என மனைவியின் அருகே ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது படுக்கைக்கு உறங்க சென்றுவிட்டார்.

வழக்கமாக தனது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆசையுடன் வரும் மாராவின் தாய், அடுத்தநாள் காலை வீட்டிற்கு சென்றுள்ளார். உள்ளே இரத்த வெள்ளத்தில் மகள் இறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில் அவரையும் அந்தோணி கொலை செய்துள்ளார். அவருக்கு அருகே ‘உங்களை நான் அதிகம் நேசிக்கிறேன்’ என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஆனால் இந்த தகவல் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல், தொடர்ந்து பல நாட்களாகவே அந்த வீட்டில் தங்கியுள்ளார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வேலைக்கு வர முடியவில்லை என கடைக்கு போன் செய்து சமாளித்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து அங்கிருந்து 1500கிமீ தூரத்தில் உள்ள தன்னுடைய சொந்த தந்தையை பார்ப்பதற்காக அந்தோணி சென்றுள்ளார். அங்கு சென்றதும், நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என தந்தையிடம் புலம்பியுள்ளார்.

பின்னர் அவருடைய தந்தை கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, வீட்டிற்குள் கிடந்த சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை  விசாரணை மேற்கொண்ட போது, அந்தோணி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், ‘இன்றிரவு, நான் என் மனைவியைக் கொன்றுவிடுவேன். பின்னர் என் குழந்தைகளை மூச்சுத்திணறச் செய்வேன். காலையில் என் மாமியாரைக் கொன்றுவிடுவேன்.’ என சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினமே எழுதியிருந்துள்ளார்.

இதன்மூலம் கொலைகள் திட்டமிடப்பட்டிருந்தன என்பது தெளிவாக இருந்தது. மேலும் சம்பவம் நடப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு வரை, அவர் உடைகளை விற்று இரண்டு கத்திகளை வாங்கினார் என்பதும் தெரியவந்தது.

காரணம் குறித்து விசாரித்தபோது, அந்தோணி அதிகாரிகளிடம் தனது திருமணம் நன்றாக இருந்ததாகவும், தனது குடும்பத்தினருடன் கோபம் எதுவும் இல்லை என தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பலத்தை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை அறிவிக்கும் போது தனக்கு வார்த்தைகளே வரவில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்தோணிக்கு, பரோலில் வெளிவரமுடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.