ஜனாதிபதி தேர்தல் குறித்த முன்னெடுப்புகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் பல வேட்பாளர்கள் களமிறங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போகக்கூடும் என்று விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பர் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. சமூகவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே இப்போது அதிகமாக காணப் படுகின்றன. நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப்போவது யார் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பதவியினை கைப்பற்றும் நோக்கில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு உகந்ததல்ல என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். இதேவேளை இன்னுமொரு சாரார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கடந்த காலத்தில் பல்வேறு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இம்முறைமையும் நாட்டின் அபிவிருத்திக்கும், பாதுகாப்பிற்கும் தோள் கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர். எவ்வாறெனினும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகவே குரல் கொடுத்து வருகின்றமையும் நாம் அறிந்ததே.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கின்றார். அண்மையில் மாலைதீவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்திருக்கின்றார். சட்டங்களின் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியாது. எனவே ஜனநாயக கட்டமைப்புக்களின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதுடன் அவற்றின் ஊடாக செயன்முறைகள் இடம் பெறுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம். அதன் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
அத்தகைய வழிமுறையிலேயே நீதித்துறையின் சுயாதீனத்துவத்தையும், சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கின்றார். மேலும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இருநாடுகளும் பெரும்பாலான விடயங்களில் ஒருமித்த தன்மையைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இருநாடுகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டிருக்கின்றன. எனினும் கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விதமான நிறைவேற்று அதிகார மற்றும் அரசியலமைப்பு மீறல்களின் காரணமாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தை மேலும் வலுப்படுத்தி இருப்பதாகவும் பிரதமர் மாலைதீவில் தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைந் துள்ள நிலையிலும் இன்னும் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் ஏன் இந்த ஜனாதிபதி பதவிக்காக ’குடுமிச் சண்டை’ போட் டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியை புத்தி ஜீவிகள் பலரும் எழுப்பி இருக்கின்றனர். இக்கேள்வி நியாயமானதே. இப்படிப் பார்க்கையிலே ஜனாதிபதி பதவிக்காக கிடைக்கும் வசதி வாய்ப்புக்களை மட்டுமே குறி வைத்து இவர்கள் போட்டியிடுகின்றார்களா என்கிற ஒரு கேள்வியும் எழுகின்றது.
எவ்வாறெனினும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்றார். ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பவற்றுக்கு இடையிலான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஓரளவு சாதகமாக அமைந்ததாகக் கூறப்பட்டபோதும் இக்கட்சிகள் தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. தேர்தல் சின்னம் குறித்தும் இழுபறியான ஒரு நிலையே இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐ.தே.க. விரைவில் தனது கட்சியின் வேட்பாளரை அறிவிக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் இம்முறை அதிகமான வேட்பாளர்கள் களமிறங்க உள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் வாக்குச்சிதறல் கணிசமாக இடம்பெறும் சாத்தியமுள்ளது. இந்நிலைமையானது எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வதனை கேள்விக் குறியாக்கும் என்று கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்று நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுவதைப் போன்றே சர்வதேசமும் இது தொடர்பில் கூடுதலான அவதானம் செலுத்தி வருகின்றது.
குறிப்பாக சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பார்வைகள் இலங்கையின் மீது மிகவும் ஆழமாகவே பதிந்திருப்பதனையும் இங்கு கூறியாதல் வேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அதிகமாகவே பேச்சுகள் அடிபடத் தொடங்கி இருக்கின்றன. சர்வதேச பயங்கரவாதத்தின் ஊடுருவல் நிலையானது நாட்டு மக்களிடையே ஒரு அச்ச உணர்வினை ஏற்படுத்தி இருந்தது. தனது இனத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு சிங்கள மக்களிடையே அதிகமாக மேலெழுந்தது. நாடு அந்நியரின் கைகளுக்குப் போய்விடப் போகின்றது என்று அவர்கள் பயம் கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அந்நிய சவால்களையும் பயங் கரவாதத்தையும் வெற்றி கொண்டு நாட்டைக் கட்டி யெழுப்பக் கூடிய ஒரு தலைவர் நாட்டுக்கு தேவை எனப் பெரும்பான்மை மக்கள் எண்ணம் கொண்டனர். இத்தகைய ஒரு ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இனங்கண்டு பெரும்பான்மை சிங்கள மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அத்தகைய ஒருவருக்கு வாக்களிப்பர் என்பதே உண்மை.
சிறுபான்மையினர்
சிறுபான்மையினர் இந்த நாட்டின் அரசியலை பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்மானித்திருக்கின்றார்கள். நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வல்லமையும், ஆளுமையும் இவர்களுக்கு இருந்தது. எனினும் சில வேளைகளில் இனவாதிகள் குறுக்கிட்டு சிறுபான்மையினரின் ஆளுமையையும் ஆதிக்கத்தையும் மழுங்கடித்த சமயங்களும் இலங்கையின் வரலாற்றில் அதிகமாகவே இடம்பெற்றிருக்கின்றன. சிறுபான்மையினருக்கு ஆசைக்காட்டி எல்லாவற்றையும் செய்து தருவதாகக் கூறி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பின்னர் அம்மக்களை உதறித்தள்ளிய வரலாறுகளும் அதிகமுள்ளன. சிறுபான்மை மக்கள் இந்நாட்டில் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். ‘குனிந்தால் குட்டு, நிமிர்ந்தால் உதை’ என்று சிறுபான்மையினர் தொடர்ச்சியாகவே நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள். நாடு சுதந்திரமடைந்த போதும் இவர்களின் வாழ்க்கை இன்னும் ஏனோ இருளில்தான் மூழ்கிக் கிடக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு சாதகமானது என்று சிறுபான்மை தலைவர்கள் கோஷமிடுகின்றபோதும் உண்மையில் இம்முறைமையின் ஊடாக சிறுபான்மையினர் பூரண நன்மையைப் பெற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு அதனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பேரினவாதிகளும் அரசியலில் இருந்திருக்கின்றார்கள் என்பது புதிய ஒரு விடயமல்ல. இருவேறு முகங்களைக் கொண்டவர்களின் செயற்பாடுகள் காரணமாக நாடு கெட்டுக் குட்டிச் சுவராகி இருக்கின்றது. சிறுபான்மை சமூகத்தினர் பல்வேறு சீரழிவுகளுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த நிலை தொடரப் போகின்றது? என்று தெரியவில்லை.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பலவும் இந்நாட்டில் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளன. மலையக மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை மேலோங்கிக் காணப்படுகின்றது. இது மட்டும் அவர்களின் பிரச்சினையல்ல. இன்னும் குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் பலவும் தீர்க்கப் படாத நிலையில் இவற்றுக்கான தீர்வினை எதிர்பார்த்து இம்மக்கள் காத்திருக்கின்றார்கள். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்கள் வடுக்கள் பலவற்றையும் சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இம்மக்களின் வலியை யாரும் புரிந்து கொள்வதாக இல்லை.
தேர்தல் காலங்களில் மட்டுமே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து அரசியல் தலைவர்கள் வாய் திறக்கின்றார்கள். நல்லாட்சி தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்பியிருந்தவர்கள் எண்ணத்திலும் மண் விழுந்திருக்கின்றது. இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இப்போது தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் கரிசனை பிறந்திருக்கின்றது. இந்த கரிசனை குறித்து தமிழ்மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதனிடையே நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று கிடையாது. இங்கு நிலவியது பயங்கரவாத பிரச்சினையே. அதுவும் பிரபாகரன் இறந்துவிட்ட கையோடு முடிந்து விட்டது என்று அதிமேதாவிகள் சிலர் கூறுகின்றமை தொடர்பிலும் நோக்க வேண்டி இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதையுமே வழங்கக் கூடாது என்பது இனவாத அதிமேதாவிகளின் கருத்தாக இருக்கின்றது. பல்லின மக்களின் ஒற்றுமைக்கு இத்தகையோர் குந்தகமாக இருந்து வருகின்றார்கள் என்பதும் சொல் லித் தெரிய வேண்டியதில்லை. காணாமலாக்கப்பட் டோர் விடயம், அரசியல் கைதிகளின் விடுதலை, நில மீட்பு நடவடிக்கைகள் என்பனவும் இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளன. மலையக மக்களுக்கான தனியான அதிகார அலகுகளையும் இன்னும் நனவாக்கவில்லை. முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் இன்னும் அவைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறாக சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது அதிகமுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி வாக்களித்து அரசியல்வாதிகளை ஆட்சி பீடமேற்றுவதால் எதுவிதமான பயனும் இல்லை. சிறுபான்மையினர் வாக்களிக்க மட்டுமே உரித்துடையவர்கள் என்ற சிந்தனை மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மலையக மக்கள் குறித்து தெரிவித்த ஒரு கருத்தை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி என்று இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் மலையகத் தமிழர்களை ஏமாற்றியதே வரலாறாக இருக்கின்றது. வாக்களிப்பு இயந்திரமாகவே அம்மக்களை இன்னும் பயன்படுத்திவருகின்றன. இதற்கு மலையக அரசியல் தலைவர்களும் துணை நிற்கின்றனர். இதன் காரணமாகவே அற்ப சம்பளத்துக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை வழங்கப்பட்ட பின்னர் அரசியலுக்கு வந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் சிலர் மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தாமல் சொந்த அரசியலுக்கே முன்னுரிமை வழங்கினர் என்ற ஒரு குற்றச்சாட்டையும் அரியநேந்திரன் முன்வைத்திருக்கின்றார். மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான களத்தை இம்முறை தேர்தலின்போது அமைத்துக்கொள்ள வேண்டும் எனினும், அதை மையப்படுத்தியதாகவே தமிழ் கட்சிகளின் தீர்மானங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார். இது உண்மையில் சிந்திக்கத்தக்க ஒரு விடயமே. சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் ஏமாந்துவிடக் கூடாது.
தீர்மானிக்கும் சக்தி
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று சிறுபான்மையினர் ஏற்கனவே பல தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி இருக்கின்றார்கள். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, நல்லாட்சியின் உருவாக்கம் என்பவற்றில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பங்களிப்பு மிகவும் அதிகமானது. இதனடிப்படையில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் சிறுபான்மையினர் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவார்கள் என்று பரவலாக கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. இதில் நம்பகத் தன்மையும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை உணர்ந்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றன. இப்போதே சிறுபான்மையினரின் அபிவிருத்தி கருதி பல்வேறு வாக்குறுதிகளையும் இவர்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். உண்மையில் இத்தகையோரின் பிழையான செயற்பாடுகளுக்கு எமது சமூகத்தைச் சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்து வருகின்றமை வேதனைக்குரியது. அற்ப சலுகைகளுக்காகவும் சுய இலாபங்களுக்காகவும் சமூகத்தை அடகு வைக்கும் பலிக்கடாவாக்கும் நிலைமைகள் மாற்றமடைய வேண்டும்.
தேர்தல் காலங்களில் சிறுபான்மை மக்களை ரத்தத்தின் ரத்தங்களாக காட்டிக் கொள்ளும் பச்சோந்திகளின் மாயவலையில் எம்மவர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. செயற்திறனும் ஆளுமையும்மிக்க அபிவிருத்திக்கும், நல்லிணக்கத்துக்கும் வலுசேர்க்கக் கூடிய வேட்பாளர்களை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது வேட்டுக்கு சமமானது என்பார்கள். ஒரேயொரு வாக்கு தலைவிதியையே மாற்றியமைத்துவிடும் வல்லமை மிக்கது. எனவே இதனை உணர்ந்து வாக்களிப்பில் அதாவது யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பது குறித்து சிறுபான்மை மக்கள் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். அற்ப சொற்ப சலுகைகளுக்காக வாக்களித்து பின்னர் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது. இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை சிறுபான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்கும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் அப்பிப்பிராய ஆய்வு ஒன்றினை பேராதனை பல்கலைக்கழக சமூகவியல் திணைக்களத்தின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி சிசிர பின்னள மேற்கொண்டிருந்தார். இவ்வாய்வின் மூலமாக பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்னள. இவ்வாண்டில் ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரை சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளே தீர்மானிக்கும். மற்றைய முக்கிய வாக்குத் தொகுதியாக சிங்கள பௌத்தர்கள் இருப்பார்கள். வெற்றியில் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடிய எந்த வேட்பாளரும் சிங்கள பௌத்த வாக்குகளில் குறைந்தது ஐம்பது சதவீதத்தை பெறக்கூடியவாராக இருக்க வேண்டும்.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்குவது ஐ.தே.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் பாதிப்பாக அமையும். சஜித் பிரேமதாஸவுக்கு பெருந்தோட்டப் பகுதிகளில் பெரும் ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மற்றும் முஸ்லிம் பகுதிகளினுள் அவருக்கு ஆதரவு கிடைக்கும். கரு ஜயசூரியவை பொறுத்தவரை நகரப் பகுதிகளில் கூடுதலான வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ (சஜித் பிரேமதாஸாவுடன் ஒப்பிடும்போது) நன்றாக ஆதரவை பெறக்கூடியவராக எதிர்பார்க்கப்படுகின்றார். ஐ.தே.கவின் வேட்பாளராக பிரேமதாஸ நிறுத்தப்படும் பட்சத்தில் ஜே.வி.பி. வேட்பாளர் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொள்வார். கரு ஜயசூரிய வேட்பாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் அனுர குமார திசாநாயக்கவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் இருந்த 1675 வாக்காளர்களை வகை மாதிரியாக பயன்படுத்தி அவர்களைப் பத்து உப நிலப் பகுதிகளில் அடிப்படையில் பிரித்தே கலாநிதி சிசிர பன்னல இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவ பெரும்பான்மை பகுதிகளாக இந்த வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு நேரடி சந்திப்புகளின் மூலமாகவும் தொலைபேசி ஊடான நேர்காணல்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிபிடுகையில், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் கோத்தபாய செல்வாக்கிழந்து காணப்படுவதாகவும் இதன் காரணத்தாலேயே கோத்தபாய தன்னை சிங்கள இனவாதியைப்போல் காட்டிக் கொள்ள முற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் கோத்த பாய குறித்து பெரிதாகக் கூறுவதற்கு எதுவுமில்லை. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மஹிந்த தோல்வியடைந்துவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுனில் ஹந்துன் நெத்தி கூறுகின்றார். ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்கினால் நாம் அவருக்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்துள்ளன. அமைச்சர்களான மனோகணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் சஜித் பிரேமதாஸவை சந்தித்தபோதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சிந்தித்துச் செயற்படுவோம்
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் பிரிவடைகின்றபோது சிறபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். ஒரு காலத்தில் தமிழ்மக்கள் வட பகுதியில் தேர்தலை முற்றாக பகிஷ்கரித்தனர். இதனால் தமிழ்மக்களின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு செல்லாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும் நிலை உருவானது என்பதனை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் நினைவுபடுத்தினார். தமிழ்மக்க ளின் அல்லது சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த காலத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் இன்று பல்வேறு காரணங்களினால் ஓரணியில் திரண்டிருக்கின்றார்கள். நடுநிலைப் போக்கினை கடைபிடித்தவர்களும் இன்று ஓரணியின் பக்கம் சாருகின்ற நிலைமையில் உள்ளனர். இவர்கள் சுமார் 72 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் சிறுபான்மையினரின் வாக்குகள் பயனற்றுப் போகும் அல்லது தீர்மானிக்கும் சக்தியாக அமையாத ஒரு நிலை ஏற்படும். எனினும் சஜித் பிரேமதாஸ வேட்பாளராகுமிடத்து கிராமப்புற வாக்குகளை கவரு கின்ற ஆளுமை அவருக்கிருக்கின்றது. எனவே நிலை மைகள் மாறுபடலாம். ரணில் பௌத்த சிங்களவர் களிடத்தில் உரிய ஆதரவற்ற நிலையிலேயே இருந்து வருகின்றார். ரணில் வேட்பாளரானால் கோத்தபா யவிற்கான வாக்குகள் அதிகரிக்க இடமுண்டும்.
முஸ்லிம்கள் இன ரீதியாக ஒற்றுமையை கொண் டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் பிரதேச ரீதியாக ஒற்றுமை கொண்டுள்ளனர். எனினும் மலையக தமி ழர்களிடம் பிரிவு நிலையே அதிகமாக காணப்படு கின்றது. இவர்களின் வாக்குகள் இரு நிலைப்பட் டதாக உள்ளது. கோத்தபாயவுக்கும், ஐ.தே.கவுக்கும் வாக்குகள் விரிவடையும் நிலைமை உள்ளது.
அதேவேளை இம்முறை அனுரகுமார திசாநாயக்கவும் கணிசமான தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வார். எனவே மலையக மக்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கதாகுமா என்ற கேள்வி எழுகின்றது. மலையக கட்சிகள் ஒன்றாக கைகோர்த்து தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அப்போதே சுமார் பத்து லட்சம் வாக்குகளும் அழுத்தம் மிக்கதாகும்; கோரிக்கைகளை வெல்லவும் உந்து சக்தி யாகும் என்கிறார் பேராசிரியர் விஜயசந்திரன்.
எனவே சிந்திப்போம்; செயற்படுவோம்.
துரைசாமி நடராஜா