தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித முடிவை எடுக்க வேண்டுமென்று வட, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அந்த எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பாணியில் நடந்துகொள்ள இரா.சம்பந்தன் முற்படுகிறார் என்பது அண்மைய சந்திப்புகளில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாக இருக்கலாம், மாற்று தேர்தல்களாக இருக்கலாம், தீர்க்க தரிசனமாக, நடந்து கொள்ளாமையின் காரணமாகவே பல இழப்புகளையும் தோல்விகளையும் எல்லாவற்றுக்கு மேலாக ஏமாற்றங்களையும் தமிழ் மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அதே தவறை மீண்டும் விடும் நிலையொன்றை கூட்டமைப்பு தலைவர் விடுவாராயின், இனி எக்காலத்திலுமே விமோசனமற்ற நிலையே தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்று பயந்து கொண்டி-ருந்த நிலையில் சம்பந்தரின் தீர்க்கமான கருத்துக்களும் முடிவுகளும் ஆறுதல் அளிக்கின்றன என பொதுவாகவே தெரிவிக்கப்படுகிறது.
இவ்வார ஆரம்பத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவு அணிக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினருக்குமிடையே கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்ற வேளை, தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மிக காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
”வரலாற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் கூட, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசாத சஜித் பிரேமதாஸவை நாம் எப்படி ஆதரிக்க முடியும். எமது மக்களை நாம் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இனப் பிரச்சினைக்கான வரலாற்று அறிவு, புரிதல் உணர்திறன் அல்லது குறிப்பிட்ட அக்கறையில்லாதவராகவே இருந்துள்ளார். அவரை நம்பும் அளவுக்கு எவ்வகை வாக்குறுதிகளை அவர் எமக்குத் தரமுடியும்.
காலாகாலமாக தேர்தல் காலத்தில் இது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதும் அவை நிறைவேற்றப்படவில்லை. சஜித் அரசியலில் ஒரு சின்னக்குழந்தை. அரசியலில் அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அர்த்தத்தைப் புரியாத ஒரு நபர் ”என சம்பந்தன் அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் சந்திக்க வந்த ஆதரவு அணியினரிடம் கடும்போக்கில் கதைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தரின் கடும்போக்கு நிலை தொடர்பில் வடகிழக்கு மக்கள் அதிக ஆத்ம திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதற்கு அப்பால் இவ்வாறானதொரு கடும்போக்கு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணங்கள் பலவெனவே சுட்டிக்காட்டப்படலாம். அதில் இரு அனுபவங்களும் ஏமாற்றங்களும் முக்கியமானவை.
2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்குப் பிறகு இரு ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் இரண்டை கூட்டமைப்பு எதிர்கொண்டுள்ளது. இத்தேர்தல் ஒவ்வொன்றின் மூலமும் எதிர்பார்க்கப்பட்ட அபிலாஷைகளும் அடைவுகளும் அடையப்படவில்லலை, ஏமாற்றப்பட்டிருக்கிறோமென்ற உண்மையிலிருந்து மீள முடியாத நிலை தமிழ்மக்களுக்கும் தலைமைக்கும் தீராத வடுவாகியுள்ளது என்பதேயாகும்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்ட பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்மக்களும் அவர் தம் தலைமைகளும் கொண்டிருந்த அதிஉச்ச நம்பிக்கை அதேபோன்று வரலாற்றில் முதல் தடவையாக இரு தேசியக் கட்சிகள் கைகோர்த்து அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது கொண்ட விசுவாசம் எல்லாமே பொரிமாத் தோண்டியின் கதையாகிப் போன நிலையிலேயே புதிய தேர்தலுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.
இரண்டாம் காரணம் தமிழ்மக்கள் குறிப்பாக வடகிழக்கு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது கூட்டமைப்பினர் முடிவு எடுக்கும் முன்பே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அவர்களின் முடிவுக்கு மாறாக இன்னொருவித முடிவை எடுக்கும் வல்லமை நிலையில் அக்காலத்தில் கூட்டமைப்பு இல்லாத காரணத்தினாலேயே மக்கள் எடுத்த முடிவுக்கு அமைய தாமும் சாயவேண்டுமென்ற தீர்மானத்திற்கு அமையவே தபால் மூல வாக்கு அளிக்கப்பட்ட பின்பே கூட்டமைப்பு தனது முடிவைப் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
அத்தகையதொரு மாய சூழ்நிலையைப் போல இன்றைய சூழ்நிலை காணப்பட்டாலும் மக்கள் மனதில் ஊறிகிடக்கும் விடயமாக இன்று காணப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை இறுதி வாய்ப்பாக நினைத்துக்கொண்டு பேரம் பேசும் ஆதிக்க அரசியலை செய்ய எத்தனிக்க வேண்டும். அதிலிருந்து வழுக்கி விழுந்து விடக்கூடாது. எத்தகைய கட்சியாக இருக்கலாம் எந்த ஜனாதிபதி வேட்பாளராக இருக்கலாம் அவரிடமிருந்து ஆணித்தரமான உத்தரவாதத்தைப் பெற்ற பின்பே அவருக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்திற்கு வரவேண்டும். முடிவு எடுக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வு என்ற தத்துவத்துக்குள் அடக்கப்பட வேண்டிய அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய தீர்வை குறையின்றி பயமின்றித்தர உத்தரவாதம் அளிக்கும் நபருக்கே இம்முறை கூட்டமைப்பு தனது ஆதரவை நல்க முன்வர வேண்டும்.
பகலொன்று பேசி இரவொன்று கூறும் போலித்தனமான தலைமைகளுக்கு ஆதரவு அளிக்க முன்வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இம்முறை உறுதியாக நிற்கின்றார்கள் என்ற உண்மையை யதார்த்தபூர்வமாக கூட்டமைப்பு தரப்பினர் உணர்ந்து கொண்டதன் காரணமாகவே இன்றைய கடும்போக்கு நிலையைக் கடைப்பிடிக்க முற் படுகிறார்கள் என்பது தமிழ்மக்களின் அபிப்பிராயமாக இருக்கிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் அன்றில் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் நிபந்தனையுடன் கூடிய அல்லது பேரம் பேசும் ஆதிக்கத்துடன் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. 1957 இல் செய்யப்பட்ட பண்டா –செல்வா உடன்படிக்கை, 1965 மேற்கொள்ளப்பட்ட டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டும் பேரம் பேசும் தன்மையினாலோ அல்லது பாராளுமன்ற பலத்தின் பேரிலோ செய்து கொள்ளப்பட்டவையல்ல. அதேவேளை ரணில் –பிரபா உடன்படிக்கை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கால தீர்வுப்பொதி என்பன ஆயுத சமபலத்தால் தீர்மானிக்கப்பட்டவை. இவ்வகை அரசியல் ஓட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நிபந்தனையுடன் கூடிய முன் வைப்புகள் கூட்டமைப்பின் புதிய போக்கை அல்லது சம்பந்தனின் நீண்டகால பட்டறிவை புடமிட்டுக் காட்டுவதாக அமைகிறது.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு கோரும் வகையில் அவரின் ஆதரவணியினர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமய தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் சஜித் ஆதரவு அணி பேச்சுவார்த்தை நடத்தியபோது அந்தக் கட்சித் தலைவர்கள் தமது நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் கவனமாக முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் மலையக மக்களின் நாளாந்த பிரச்சினைகள், தொழிலாளர்களின் சம்பள விவகாரம், அவர் தம் வாழ்வாதாரங்களுக்கு முடிவு காணப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் மீதான தற்கால அடக்குமுறைகள், பாதுகாப்பு குறித்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற நியாயமான நிபந்தனைகளை முஸ்லிம் தரப்பினர் முன்வைத்துள்ளனர். இந்த தரப்பினரின் கோரிக்கையை காலதாமதமின்றி தீர்த்து வைப்பதாகவும் உடன்பாடு ஏற்பட்டதற்கு அமைய சஜித்துக்கு ஆதரவு தருவதற்கு தாம் தயாராகவுள்ளோமென மேற்படி பங்காளிக்கட்சியினர் உத்தரவாதம் அளித்துள்ளனர். இவர்களின் நிலையில் அடிப்படைப் பொருளாதார மற்றும் வாழ்வு நிலைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிலையிலும் அதிகாரப் பகிர்வு பற்றியோ அரசியல் சாசனம் பற்றியோ கருத்துகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ பின்வரும் நிரை ஒழுங்கில் தமது நிபந்தனைகளை வரிசைப்படுத்திக் காட்டியுள்ளனர்.
1)புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
2) கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். 3) வடக்கும் கிழக்கு தமிழர் பிரதேசங்களுக்கு துரிதமான அபிவிருத்தி கொண்டு வரப்பட வேண்டும்.
4 ) வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
5) மக்களுக்குத் தேவையான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாக்குறுதிகளே எமக்கு வேண்டும். இவற்றை நிறைவேற்றக் கூடியவரை நாம் ஆதரிக்கத் தயாராகவுள்ளோமென சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.சம்பந்தனின் இக்கோரிக்கைகளானது மிக நீண்டகால மற்றும் மக்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் கூறப்பட்ட கோரிக்கைகளே. இந்தக்கோரிக்கைகளை நெகிழ்ந்து கொடுத்தோ தட்டிக்கழித்தோ செல்லக்கூடிய நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளுமில்லை, போக்குமில்லையென்பது தெளிவான விடயம்.மேலே வரிசைப்படுத்திக் காட்டியுள்ள கோரிக்கைகளில் தென்னிலங்கை தலைமைகளாலோ மக்களாலோ ஜீரணிக்க முடியாத விவகாரங்களாகக் காணப்படுபவை புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்ற விடயங்கள்.அமைச்சர் சஜித்தைப் பொறுத்தவரை, கூட்டமைப்பின் தலைமையால் விடுவிக்கப்பட்டிருக்கும் மேற்படி நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும் திறன் அவரிடம் உண்டா என்பது. அவ்வாறு ஒரு வாக்குறுதியை தமிழ் தலைமைகளுக்கு அளித்து விட்டு தென்னிலங்கையில் அவரால் தலைகாட்டமுடியுமா என்பது இன்னொரு சந்தேகம். அண்மையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித், ஊடகவியலாளர் வினவிய வினாவுக்கு பதில் அளிக்கையில் வட கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வை, 13 ஆவது திருத்தத்தை உச்ச அளவில் அமுல்படுத்துவதன் மூலம் தீர்த்து வைப்பேன் என பதிலளித்துள்ளார்.இவர் தந்தை பிரேமதாஸ இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தவர் ; மாத்திரமின்றி 13 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டுமென கங்கணம் கட்டிய ஒருவர். இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்பதற்காகவே விடுதலைப் புலிகளுடன் ரகசிய ஒப்பந்தமொன்றை செய்துவிட்டுக் காரியம் நிறைவேறிய பின் கைகழுவி விட்ட பெருமை இவரையே சாரும்.
இவருக்கு ஆதரவு நல்கும் ஒருவர் கூட்டமைப்புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர சமஷ்டிக் கோரிக்கையுடன் சஜித் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லையெனக் கூறியுள்ளார். இருந்தபோதிலும், ”முஸ்லிம் சிங்களக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவைப் பெற்றுள்ளேன். வெகுவிரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்” என அமைச்சர் சஜித் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித்துடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்புக்குள் இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுவதாகவும் சில வதந்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை (17.09.2019) கூட்டமைப்பினரிடையே நடந்த கலந்துரையாடலின் போது தலைவர் சம்பந்தன் ஏலவே சஜித் ஆதரவணியுடன் பேசிய விடயங்கள் தொடர்பாக விளக்கும்போது தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சஜித்திடம் தெளிவான திட்டங்கள் இல்லையெனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகிய இருவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சில வதந்திகள் உலாவி வருகின்றன. இதில் உண்மைத் தன்மை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் அமைச்சர் சஜித் என்று வருகிறபோது கூட்டமைப்பினர் எடுக்கக் கூடிய முடிவு தொடர்பில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதன் காரணமாக கூட்டமைப்புக்குள் ஆதரவான – எதிரான கருத்துக்கள் தோன்ற இம்முறை வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. எவ்வாறு எதிர்வாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தலைவர் சம்பந்தனின் முடிவு எடுக்கும் திறனில் கட்சி ஒட்டுமொத்தமாக உடன்பட்டுப்போகும் சூழ்நிலையே அதிகமாக ஏற்படும்.
எது எவ்வாறு இருந்த போதிலும் கடந்த செவ்வாய்க்கிழமை (17.09.2019) பிரதமருக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது சம்பந்தன் பிரதமர் ரணிலிடம் மிகவும் காட்டமாக வினாவிய விடயங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்துள்ளன.
“புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுமா? தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான உறுதியான தீர்வாக எதனை முன்வைக்கப் போகிறீர்கள் என்பதை துணிகரமாகக் கூறினால் மட்டுமே எமது அடுத்த கட்ட தீர்மானத்தை நாம் எடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் என்ன என்பது பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென சம்பந்தனிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையிலேயே அவர் மேற்படி சந்திப்பின் போது வெட்டொன்று துண்டு இரண்டென காரசாரமான கேள்விகளை முன் வைத்துள்ளார்.இந்தச் சந்திப்பின் உரையாடல்களும் தர்க்கித்தல்களும் வழமையைப் போல் அல்லாது சூடாகவும் காரசாரமாகவும் இருந்துள்ளது என்பதற்கு அப்பால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் புதிய போக்கையும் தீவிரத்தையும் எடுத்துக் காட்டுவதாகவே அமைகிறது. வரலாற்றில் ஏற்பட்ட தொடர் நிலை ஏமாற்றங்கள், நம்பிக்கை அறுப்புகள் அவருக்கு இவ்வாறானதொரு அனுபவ முடிவை எடுக்க வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது. இவ்வகை முடிவொன்றுக்கே கூட்டமைப்பின் தலைவரும் கட்சியினரும் வரவேண்டுமென்ற நீண்டகால எதிர்பார்ப்பு கொண்டவர்களாக தமிழ்மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதே உண்மை.
அது மட்டுமன்றி தென்னிலங்கைத் தலைமைகளின் ஏமாற்று வித்தைகள் ஓரமாக்கிப் போட நினைக்கும் இழிநிலை எண்ணங்களுக்கு முடிவுகாண வேண்டுமாயின் இவ்வாறானதொரு முடிவுக்கே வரவேண்டுமென்பது தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம். ரணிலுடனான சந்திப்பின்போது அவர் கூட்டமைப்பினரிடம் அழுத்தமான வாக்குறுதிகளை நல்கியிருப்பதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கத் தேவையான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து ஒருவருட காலத்துக்குள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்ததாக அறிய வருகிறது. இவரின் வாக்குறுதி தொடர்பில் கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாஷைகள் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சிக்கு பிரதமர் எதிர்காலத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது.
எவை எப்படியிருந்த போதிலும் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடு தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏட்டிக்குப் போட்டியான எதிர்ப்பு அலைகள் வீசும் நிலை உருவாகியுள்ளன. இதன் ஒரு அம்சமாகவே கடந்த திங்கட்கிழமை (16.09.2019) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் சில பிரகடனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
01. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை சிங்களத் தலைமைகளும் அவர் தம் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
02. தீர்வு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
03. சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும்.
04. சுய நிர்ணய உரிமை
அடிப்படையிலான சமஷ்டித் தீர்வே தமிழ் மக்களுக்கு வேண்டுமென்ற கோஷத்துடனான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் தொடர்பில் ஆழமான கருத்துகளை முன்வைப்பது கூட்டமைப்பின் பொறுப்பில்லையாயினும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை ஜனநாயகக் கட்சியென்ற வகையிலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அந்த தார்மீகப்பொறுப்பு இருக்கிறது.
எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவானது தமிழ் மக்களின் எதிர்கால தலைவிதியையும் இருப்பையும் தீர்மானிக்கப் போகும் விவகாரம் மாத்திரமல்ல, கூட்டமைப்பின் புதிய மாற்றத்துக்கான பாதையையும் திறந்து விடப்போவதாகவே இருக்கவேண்டும்.
திருமலை நவம்