இலங்கையின் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்;பாளர் கோத்தபாய ராஜபக்ச 2017 ,2018 மற்றும் 2019 இல் வாக்காளர் பதிவில் தனது பெயரை பதிவு செய்தார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டை தேர்தல் தொகுதியில் உள்ள கங்கொடவில தெற்கு 526 ஏ கிராமசேவையாளர் பிரிவில் கோத்தபாய ராஜபக்ச தன்னை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள ஆங்கில நாளிதழ் வாக்காளர் பதிவினை ஆராய்ந்தவேளை இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கையி;ன் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்துள்ள தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தியே கோத்தபாய பதிவு செய்துள்ளார் என நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்திலும் குறிப்பிட்ட முகவரியிலிருந்து தன்னை பதிவு செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளார் என நாளிதழ் தெரிவித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையை பயன்படுத்தி புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட ஒருவர் முன்னையை அடையாள அட்டையை பயன்படுத்துவது பாரதூரமான குற்றம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளானதன் காரணமாக இலங்கை பிரஜாவுரிமையை இழந்த பின்னர் பின்னர் இரட்டை குடியுரிமை அடிப்படையில் இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்கள் விடயத்தில் இவ்வாறு அடையாள அட்டையை செல்லுபடியற்றதாக்கும் நடைமுறை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2003 இல் அமெரிக்க பிரஜையான வேளை தனது இலங்கை பிரஜாவுரிமையை இழந்ததாக குறிப்பிட்டு வரும் கோத்தபாய ராஜபக்ச 2005 இல் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றவேளை அதனை மீள பெற்றுக்கொண்டார் என தெரிவித்து வருகின்றார்.
இலங்கையின் ஆட்பதிவு திணைக்கள ஆவணங்களின்படி கோத்தபாய ராஜபக்ச 2016 இல் தனது பழைய தேசிய அடையாள அட்டையை கைவிட்டு புதிய அடையாள அட்டையை பெற்றுள்ளார் என ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.