மாற்றம் வந்து கொண்டிருக்கிறது!

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்று பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் கிரெட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற சிறுமி பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிரெட்டா துன்பர்க் தலைமையில் உலகின் பல நாடுகளிலிருந்து பள்ளி மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும் பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதை உலகத் தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் பூமி வெப்பமடைந்து வருவதை உணர்த்தும் வகையில் ஓவியங்களை வரைந்திருந்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற பேரணியில் நியூயார்க் சிட்டியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன் மாணவர்களின் பெரும் குரல்களுக்கு மத்தியில் கிரெட்டா துன்பர்க் உரையாற்றினார்.

அதில் அவர் பேசுகையில், ”நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் வேலையை விடுவது உட்பட… ஏனென்றால் அவற்றைவிட இது முக்கியமானது. நமது எதிர்காலம் நம்மை விட்டுச் சென்று கொண்டிருக்கும்போது நான் எதற்காகப் படிக்க வேண்டும். நீங்கள் நம்மைத் துன்புறுத்தும் சிறிய குழுக்களுடன் இருந்திருந்தீர்கள் என்றால், உங்களுக்காக எங்களிடம் சில மோசமான செய்திகள் உள்ளன.

ஏனெனில் இது ஆரம்பம் மட்டுமே. அவர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி மாற்றம் வந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.